வாள்வீச்சு வீரர் பவானி தேவி
ஜான்சி ராணி லட்சுமி பாய், ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் இவர்கள் பேரைச் சொன்னாலே கூடவே அவர்களது வீரமும், வாளேந்திய தோற்றமும் ஞாபகத்திற்கு வரும். பவானி தேவி என்றாலும் 'வாள்' ஞாபகத்திற்கு வரவேண்டும். ஆம், ஆசிய 23 வயதுக்குக் கீழ்ப்பட்டோர் பிரிவு சேம்பியன்ஷிப்களில், வாள்வீச்சுப் (Fencing) பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த ஒரே பெண் சாதனையாளர் பவானி தேவி. இந்திய வரலாற்றில் வாள்வீச்சில் இந்தியா பெற்ற முதல் பதக்கமும் இதுதான்.

அநாயாசமாக வாள்வீசும் பவானி தேவி, மகாராணி எல்லாம் அல்ல; சென்னை மகாராணி தியேட்டர் அருகில் இருக்கும் ஒரு சாதாரண வீட்டில் வசிக்கும் சராசரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா, ஆனந்த சுந்தர்ராமனுக்கு கேட்டரிங் தொழில். அம்மா ரமணி இல்லத்தரசி. இரண்டு சகோதரர்கள்; இரண்டு சகோதரிகள்.

தனக்கு வாள்வீச்சில் ஆர்வம் ஏற்பட்டதைக் குறித்துச் சொல்லும்போது, "2002ல் தமிழக அரசு பள்ளிகளில் ஃபென்சிங், ஸ்குவாஷ் விளையாட்டுக்களை அறிமுகம் செய்தார்கள். அப்போது நான் சிறுமி. இரண்டு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது என்றாலும் ஃபென்சிங் என்னை மிகவும் கவர்ந்தது. இதில், 'ஃபாயில்', 'ஏப்பி', 'சேபர்' என்று மூன்று பிரிவுகள் உண்டு. இதில் 'சேபர்' பிரிவில் நான் ஆர்வத்துடன் பயின்றேன். இது மிகவும் சவாலானது. இதை மிகவும் வேகமாக விளையாட வேண்டும். மூன்றே நிமிடத்துக்குள் விளையாட்டு முடிந்துவிடும். அதில் பயிற்சி பெற்று முதலாவதாக வந்தேன். 2004ல் தேசிய சப்-ஜூனியர் பிரிவில் வாங்கிய தங்கப்பதக்கம் தான் ஆரம்பம். அதுதான் எனக்கும் முதல் தங்கப்பதக்கம். தமிழ்நாட்டுக்கும் அதுதான் அந்தப் பிரிவில் முதல் பதக்கம். அந்த ஆரம்பம் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது" என்கிறார்.

காமன்வெல்த் சேம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம், ஆசிய சேம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் எனப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். இவரது சாதனையைப் பாராட்டி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இவர் அமெரிக்காவில் பயிற்சி பெறுவதற்காக 3 லட்சம் ரூபாய் நிதி உதவினார். தளச்சேரி, கேரளாவில் அமைந்துள்ள ஃபென்சிங் மையத்திலும், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் பயிற்சி பெற்றிருக்கிறார் பவானி.

சர்வதேச போட்டியான சேட்டலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் பந்தயம் ஐஸ்லாந்து நாட்டின் ரேக்ஜாவிக் நகரில் நடந்தது. அதிலும் அசத்தலாக விளையாடித் தங்கம் வென்றிருக்கிறார். தற்போது வாள்வீச்சுப் பிரிவில் இந்திய அளவில் முதல் நிலையில் இருக்கிறார் பவானி. உலக அளவில் 77வது இடமாம். இவரது திறமையை அறிந்த தமிழக அரசு, வெளிநாடுகளில் இவர் பயிற்சி பெறவும், வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காகவும் சுமார் ரூ.22.04 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறது.

2020ல் ஒலிம்பிக்கில் வாள்வீச்சில் தங்கம் வெல்வதுதான் பவானி தேவியின் லட்சியம்.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com