ஹார்வர்டு தமிழ் இருக்கை: கனவு நிறைவேறுகிறது
"ஹார்வர்ட் தமிழிருக்கை நிதி திரட்டல் 6 மில்லியன் டாலர் இலக்கை எட்டிவிட்டது" என்று மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளனர் இந்த இமாலய முயற்சியை முன்னின்று எடுத்துச் செல்லும் Dr. விஜய் ஜானகிராமன் மற்றும் Dr. சுந்தரேசன் சம்பந்தம். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் இவர்களுக்கு அற்புதக் கனவு ஒன்று தோன்றியது. தொன்மைமிக்க தமிழ்ப் பாரம்பரியத்தை இனிவரும் சந்ததியினருக்காகக் காத்து வளர்க்க, உலகம் போற்றும் ஹார்வர்டு பல்கலையில் நிரந்தர அரியணை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு. "நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு மில்லியன் டாலரை அச்சாரமாகப் போட்டுத் தொடங்கிவைத்தோம்" என்கிறார் சம்பந்தம். கனவை நனவாக்கவும் முதலடி எடுத்து வைக்கவேண்டும் அல்லவா!

இரண்டாண்டு கடுமையான உழைப்புக்குப் பின்னர், அண்மையில் "ஆறு மில்லியன் டாலர் இலக்கை எட்டிவிட்டோம். இதற்கென உழைத்த அத்தனை பேருக்கும் தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன்" என்கிறார் ஜானகிராமன்.

இதனை எழுதுகிற சமயத்தில் 7335 அன்பர்கள் பேரன்போடு 6.18 மில்லியன் டாலர்களை அன்னைத் தமிழை ஹார்வர்டில் பீடமேற்றவென அர்ப்பணித்திருக்கிறார்கள். தமிழிருக்கை இயக்கத்தின் அயராத உழைப்பு, விடாமுயற்சி, தளராத நம்பிக்கை, தன்னலமற்ற ஈடுபாடு ஆகியவை உலகளாவிய தமிழ் மக்களின் பேராதரவுடன் இந்த இலக்கை வெற்றிகரமாக எட்டச் செய்துள்ளது.

தமிழார்வலர்களிடையே ஒரு புதிய எழுச்சியை ஊட்டியது இந்தக் கனவு. ஆங்காங்கே இசை, நடனம், நாடகம், மொய் விருந்து, கொடை நடை என நிதி திரட்டப் புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்க அவர்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டனர். விளைவு - ஒரு சரித்திரம் படைக்கும் சாதனை!

அடுத்து என்ன?
நிதி இலக்கை எட்டியாகி விட்டது. அடுத்து வருவது என்ன? தமிழிருக்கை இயக்கத் தலைவர்கள் ஏப்ரல் மாதம் ஹார்வர்டு பல்கலை நிர்வாகத்தைச் சந்தித்து இருக்கையின் அமைப்பு மற்றும் செயல்பாடு பற்றிய ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) உறுதிப்படுத்துவார்கள். அதன்பிறகு தமிழிருக்கையில் அமரத்தகுந்த ஒரு பேராசிரியரைத் தேடி நியமிக்கும் பணியைப் பல்கலை நிர்வாகம் தொடங்கும். இதற்கு ஆறு மாதம்வரை ஆகலாம்.

அதுதான் கனவு நனவாகும் தருணமாக இருக்கும். அப்போது தமிழிருக்கை இயக்கம் ஒரு மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறது. பல்கலையில் தமிழிருக்கைக்கான செயல்பாட்டை மேற்பார்வை செய்யும் பொறுப்பினைத் தெற்காசிய ஆய்வுத்துறையில் பணிபுரியும் பேராசிரியர் சுனில் அம்ருத்திடம் கொடுத்திருக்கிறார்கள். 39 வயதான பேரா. அம்ருத் அவர்களின் தாயார் தஞ்சாவூரில் வளர்ந்த தமிழர்! சிங்கப்பூரில் வளர்ந்த அம்ருத் 2017ம் ஆண்டுக்கான MacArthur Foundation வழங்கும் மாமேதை நிதிநல்கை (Genius Grant) பெற்றவர்.

தமிழ்ப் பாரம்பரியத்தை அறிந்த ஒருவர் தமிழிருக்கை நிர்மாணத்திற்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருப்பது உற்சாகமூட்டும் செய்தி என்பதில் ஐயமில்லை.

Dr. ஜானகிராமனின் நன்றி அறிவிப்பு


Dr. சம்பந்தத்தின் நன்றி அறிவிப்பு


தமிழிர்க்கை தென்றல் பக்கம்
தமிழிருக்கை பற்றி அறிய: harvardtamilchair.org

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
நியூ யார்க்

© TamilOnline.com