'பாற்கடல்' பதிப்பகம் என்ற அறிவிப்புப் பலகை வீட்டு வாசலில். நுழைந்தால் சுற்றிலும் செடி, கொடிகள். இனிய அமைதி. புன்னகையோடு வரவேற்கிறார் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம். கதை, கட்டுரை, நாடகம், உரைச்சித்திரம், வெண்பா, நெடுங்கவிதை எனக் கிட்டத்தட்ட ஆயிரம் படைப்புகளை நெருங்கிக் கொண்டிருக்கிருக்கிறார். 'பாற்கடல் சிறுவர் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுவர் சங்க வகுப்புகளை நடத்தி வருகிறார். வானொலி, தொலைக்காட்சி, பள்ளிகள் போன்றவற்றிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இவரது சிறுவர் சிறுகதைகளை ஆராய்ச்சி செய்து மாணவி ஒருவர் எம்.ஃபில். பட்டம் பெற்றுள்ளார் 60 வருடங்களாகக் குழந்தை இலக்கியப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர், 78வது வயதிலும் கதை, கவிதை, நாடகம், பேச்சரங்கம், கவியரங்கம் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆர்வம் காரணமாகத் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தென்றலுக்காக மனம் திறக்கிறார் சுந்தரம். வாருங்கள், கேட்போம்.
இளமையில் தமிழார்வம் நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். மைலாப்பூரில் பிறந்தேன். அங்குள்ள பி.எஸ். ஹைஸ்கூலில் படித்தேன். எனது பெற்றோர் கிராமத்தில் இருந்தனர். நான், மைலாப்பூரில் எனது மாமா வீட்டில் தங்கிப் படித்தேன். கல்வியில் மிகுந்த நாட்டம். தமிழின் மீது அளவற்ற ஈடுபாடு. பள்ளிப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் வாங்குவேன். சிறந்த ஆசிரியர்கள் எனக்கு வாய்த்தனர். சாரணர் சங்கத்திலும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தேன். நூல் வாசிப்பில் அப்போதே மிகுந்த ஆர்வம். 'கல்கண்டு' அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தம். அதைப் படிக்கப் படிக்க எனக்குத் தமிழார்வம் அதிகமானது. மாணவர் மன்றத்தில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றேன். அப்போது வானொலியில் நிறையத் தமிழ் நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் ஒலிபரப்பாகும். அதைக் கேட்டும் தமிழார்வத்தை வளர்த்துக் கொண்டேன்.
பதினேழு வயதில் பரிசு 'தேன்' என்ற இதழ் அப்போது மிகவும் பிரபலம். அதில் 'ஆடி வரும் தேனே' என்ற என் முதல் கட்டுரை பிரசுரம் ஆயிற்று. பிறகு 'வெண்ணிலா'வைப் பற்றிய கவிதை பிரசுரமானது. 1957ல் கண்ணன் இதழில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்தார்கள். கல்கண்டில் தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளை ஆர்வத்துடன் படிப்பேன். அந்த உந்துதலில் ஒரு சிறுகதையை எழுதிப் போட்டிக்கு அனுப்பினேன். அதற்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அப்போது எனக்கு 17 வயது.
உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் வாசவன் 'துப்பறியும் கதை' என்ற மாத இதழை நடத்தி வந்தார். அதில் வி. சுப்பிரமணியம் என்ற எழுத்தாளர் நான்கு வாரம் துப்பறியும் கதை ஒன்றை எழுதினார். 'ஐந்தாவது வார முடிவை வாசகர்களே எழுதி நிறைவு செய்ய வேண்டும்; அதற்கு ரூ.15 பரிசு' என்று விளம்பரம் செய்திருந்தார்கள். நான் ஒரு முடிவுப் பகுதியை எழுதி அனுப்பினேன். அதற்கு 15 ரூபாய் பரிசு கிடைத்தது. இதெல்லாம் தான் ஆரம்பம். அதுமுதல் குழந்தை இலக்கியத்தில் ஆர்வம் அதிகமானது. குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் கதை, கவிதை, கட்டுரை எல்லாம் எழுத ஆரம்பித்தேன். என் படைப்புகள் கண்ணன், கல்கண்டு, அம்புலிமாமா, கோகுலம் எனப் பல இதழ்களில் வெளியாகின. தற்போது தினமலரிலும் தினமணி சிறுவர் பகுதியிலும் என் படைப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
வானொலி, டி.வி.யில் கண்ணனில் வெளியான எனது சிறுகதையைப் படித்துவிட்டு அப்போது 'வானொலி அண்ணா' அய்யாசாமி அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார். சிறுவர்களுக்கான நல்ல வானொலி நாடகங்களை எழுதும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். எனது முதல் நாடகத்தை எழுதி அனுப்பினேன். அது ஒலிபரப்பானது. அதுமுதல் இன்று வரையிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஐநூறுக்கும் மேற்பட்ட எனது நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. சிறுவர்களுக்கு மட்டுமல்லாது பெரியவர் நாடகங்களும் எழுதியிருக்கிறேன். தவிர, உரைச்சித்திரம், நகர்வலம், குறுநாடகங்கள், செய்திச்சித்திரம் எனப் பல பிரிவுகளில் என் படைப்புகள் இடம்பெறுகின்றன. நாளடைவில் தொலைக்காட்சியிலும் சிறியவர், பெரியவர்களுக்கான எனது நாடகங்கள் இடம்பெறத் துவங்கின.
கவிதைத் தீ மூட்டிய பாரதி 18 வயதில் எனக்கு சென்னைத் துறைமுகத்தில் வேலை கிடைத்தது. அங்கே இலக்கிய ஆர்வம் கொண்ட பலர் நண்பரானார்கள். புலவர் தணிகை உலகநாதன் அங்கு வந்து யாப்பிலக்கணப் பயிற்சி அளித்தார். பலருக்கும் இலக்கிய ஆர்வம் ஏற்பட அது காரணமானது. கவிதைகளின் மீது எனக்கு ஈர்ப்பு வந்ததற்கு முதல் காரணம் பாரதியார். அப்போது பாரதியின் கவிதைகள் மலிவுவிலைப் பதிப்பாக வந்திருந்தது. அதை வாங்கி முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வாய்விட்டுப் படித்து மகிழ்ந்தேன். பாரதி, பாரதிதாசன் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. கவிதை எழுதத் துவங்கினேன். நண்பர்கள் சேர்ந்து இலக்கிய மன்றம் ஒன்றை ஆரம்பித்தோம். துறைமுகத்தில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளுக்காக இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
அக்காலத்தில் துறைமுகத்தில் விளையாட்டுக்காக நிறையச் செலவழிப்பார்கள்; ஆனால், இலக்கியத்துக்குச் செலவழிக்கவில்லை. நாங்கள் அதனைச் சேர்மனின் கவனத்திற்குக் கொண்டுசென்று இலக்கியத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வைத்தோம். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இயல், இசை, நாடக மன்றம். அதன்மூலம் பல நிகழ்ச்சிகளை நடத்தினோம். ஊழியர்களின் நடிப்புத் திறமை, பேச்சுத் திறமை, பாட்டுத் திறமை, ஊழியர்களின் குழந்தைகளின் திறமை என எல்லாம் வெளிவர இந்த மன்றம் மேடையமைத்துத் தந்தது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக ம.பொ.சி., கண்ணதாசன், நா. பார்த்தசாரதி, நாரண. துரைக்கண்ணன், அகிலன் எனப் பலர் வருவார்கள். எங்களை ஊக்குவிப்பார்கள். அதன் மூலமும் நிறைய படைப்புகள் வழங்கியிருக்கிறேன்.
பாற்கடல் சிறுவர் சங்கம் வானொலிக்கு நாடகங்கள் எழுதிக் கொண்டிருந்தேன் அல்லவா? ஒரு சமயம் வானொலி அண்ணா ரா. அய்யாசாமி, "நீங்கள் சங்கமாக ஆரம்பித்து, குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து கதம்பமாக நிகழ்ச்சிகளைக் கொடுக்கலாம். நன்றாக இருக்கும்" என்று சொன்னார். அதன்படி சென்னை மடிப்பாக்கத்தில் எனது இல்லத்தில் ஆரம்பமானதுதான் 'பாற்கடல் சிறுவர் சங்கம்'. கதை சொல்வது, விடுகதைகள், மொழிப்பயிற்சி, நாடகப் பயிற்சி என்று பல பயிற்சிகளை அளித்து குழந்தைகளைத் தயார் செய்வேன். ஒவ்வொன்றிலும் ஒரு செய்தி இருக்கும். கூத்தபிரான் வீட்டிற்கே வந்து ரெகார்ட் செய்துகொண்டு போவார். இவ்வாறாக வானொலியில் பல்சுவை நிகழ்ச்சிகள் பலவற்றை வழங்கினேன். ஒருசமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக, அங்கு பணியாற்றிய சேவியர் வந்து சென்றார். அவர் தொலைக்காட்சிக்கும் இவ்வாறான நிகழ்ச்சிகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
கவிதை பிறந்தது பாரிஸ் கார்னரில் ஒரு பேருந்து நிறுத்தம். அதில் குழந்தைகள், பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் எனப் பலரும் பேருந்துக்குக் காத்துக் கொண்டிருக்கின்றனர். வண்டி வருகிறது. எல்லாரும் முண்டி அடித்து ஏறுகிறார்கள். ஆனால், அந்தக் குழந்தைகள் ஏற முடியாமல் தடுமாறி, கஷ்டப்பட்டு ஏறி உள்ளே போகிறார்கள். முதுகின் பின்னால் புத்தகமூட்டை வேறு. யாருமே அந்தக் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்களைத் தள்ளிக்கொண்டு முன்னே செல்கிறார்கள்.
நான் பார்த்த இந்தச் சம்பவத்தை வைத்து ஒரு பாடல் எழுதினேன்.
சின்னச் சின்ன எறும்பு கூட சீராய் வரிசை கட்டுது நின்று பார்க்க எனக்குக் கூட நிறைய ஆசை வருகுது
சிப்பாய்ப் படை போகும் காட்சி சித்திரம் போலத் தெரியுது தப்பாய் எவரும் நடந்தி டாமல் தாமாய் வரிசையில் போகிறார்
பஸ்ஸில் ஏறும் மனிதர் மட்டும் பொறுமை இழந்து நடக்கிறார் 'பஸ்கி' போட்டு முண்டி யடித்துப் பாய்ந்து உள்ளே போகிறார்
சின்னத் தங்கை என்னைக் கூடத் தள்ளிவிட்டுப் போகிறார் என்ன பெரிய மனிதர் இவர் என்று கேட்க வைக்கிறார்
ஒழுங்கு இல்லா இந்தப் பாதை நமக்கு என்றும் வேண்டாமே பழுது இல்லா வரிசை நிற்கும் பழக்கம் கொண்டு வாழ்வோமே
என்று நான் எழுதிய இந்தப் பாட்டுக்கு நல்ல வரவேற்பு. பல பள்ளிகளுக்கு நான் எனது புத்தகங்களை விற்பனை செய்வதற்காகச் செல்வதுண்டு. அங்கெல்லாம் ஆசிரியர்களிடம் இந்தப் பாடலைச் சொன்னால், அவர்கள், "உடனே எழுதிக் கொடுங்கள். நாங்கள் ஆண்டுவிழாவில் ஆக்ஷன் சாங் ஆக இதைப் போடுகிறோம்" என்பார்கள். பல பள்ளி ஆண்டுவிழாக்களில் இந்தப் பாடலுக்கு நடனம் இடம் பெற்றிருக்கிறது.
யார் நகர்த்துவார் அந்தக் கல்லை? எனது வாழ்வின் பல அனுபவங்கள் நாடகங்களாக, கதைகளாக, பாடல்களாக உருமாறி இருக்கின்றன.
ஒருநாள் அலுவலகத்துக்குப் போய்க் கொண்டிருக்கும்போது வழியில் ஒரு பெரிய பாறாங்கல்லைப் பார்த்தேன். லாரிக்காரர் யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டார் என்று நினைத்து அலுவலகம் சென்று விட்டேன். மதியம் சிற்றுண்டிக்கு வரும்போதும் கல் அங்கேயே கிடந்தது. மாலை பணி முடித்துத் திரும்பும்போதும் அப்படியே இருந்தது. உடனே அக்கல்லை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மிகவும் சிரமப்பட்டு அப்புறப்படுத்தினேன். அப்போதுதான் என் மனம் நிம்மதியானது. இதையே கருவாக வைத்து ஒரு நாடகத்தை எழுதினேன். அதன் பெயர் 'வழிகாட்டி'. இது பின்னர் வானொலியிலும் ஒலிபரப்பானது.
பிளாஸ்டிக் பிரசவம் அதுபோல தொலைக்காட்சியில் ஒரு பசுவின் பிரசவம். கன்றை ஈன அது மிகவும் கஷ்டப்பட்டது. மிருக வைத்தியர்கள் வந்து பார்த்துப் பல மணி நேரம் போராடினர். கடைசியில் அது மிகவும் கஷ்டப்பட்டுக் கன்றை ஈன்றது. அப்போது கூடவே வந்தது என்ன தெரியுமா? பிளாஸ்டிக் குப்பைகள், ஆணிகள், கண்ணாடித் துண்டுகள் என்று எல்லாம் கலந்து வந்தன. இதெல்லாம் பசுவின் வயிற்றில் போனதால்தான் கன்று வெளிவரத் தாமதமானது என்பது புரிந்தது. பிறகு மக்களுக்குச் சொன்னார்கள், குப்பைகளை இப்படிப் போடக்கூடாது; தனித்தனியாகப் பிரித்துப் போடவேண்டும் என்று. இதை வைத்து நான் 'மாட்டுப் பொங்கல்' என்று ஒரு கதை எழுதினேன். நாடகமும் எழுதினேன். அவற்றுக்கும் நல்ல வரவேற்பு.
ஒரு சமயம் திருவல்லிக்கேணி நடைபாதைக் கடையில் பழைய புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு புத்தகம் எட்டாம் வகுப்புச் சிறுவன் ஒருவனுக்குப் பரிசாக கிடைத்த நூல் என்பது தெரிந்தது. அதில் பரிசுக்கான குறிப்பு ஒட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட என் மனம் வருந்தியது. தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒன்றை ஒரு மாணவன் இவ்வாறு பழைய புத்தகக் கடைக்குப் போடுவானா? என்ன காரணமாக இருக்கலாம்? என் மனம் சிந்தித்தது. சிறுவர்கள் பரிசுப் பொருள்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்ற செய்தியைச் சொல்ல நான் எழுதிய 'பரிசின் பெருமை' என்ற நாடகம் வானொலியில் ஒலிபரப்பானது. 'புத்தகப் பரிசு' என்ற பெயரில் அது கதையாகவும் வெளியானது.
'காப்பி' அடித்தல் என்பது மிகவும் தவறானது. அது சிறுவர்களிடையே மிக எளிதில் தொற்றிக் கொள்ளக்கூடிய ஒன்று. அது தவறு என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்த நினைத்தேன். அப்படிக் காப்பி அடித்துத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் சோதனையான சூழ்நிலைகளில் என்ன செய்வார்கள் என்று சிந்தித்துப் பார்த்தேன். அந்தச் சிந்தனையில் பிறந்ததுதான் 'செல்லாத ரூபாய்' என்ற நகைச்சுவை நாடகம். இது வானொலி, தொலைக்காட்சி இரண்டிலும் வெளியானது. அதுபோல சிக்கனத்தை வலியுறுத்தி எழுதிய நாடகத்திற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது எனது நாடகங்களின் பாணி என்று சொல்லலாம்.
அலைகடலே அலைகடலே... ஒருமுறை வானொலி நிகழ்ச்சியை முடித்துவிட்டு எதிரே உள்ள கடற்கரைக்குச் சென்றிருந்தேன். அலை ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது. நாமோ சிறிது வேலை செய்தாலும் ஓய்வை நாடுகிறோம். ஆனால் இந்த அலையோ ஓயாமல் வருகிறது, போகிறது. களைப்பறியாமல், சலிக்காமல் உழைத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பாடல் பிறந்தது.
அலைகடலே அலைகடலே அலைகளாகி ஆடுவதேன்? மலை போல மழை போல எழுந்தடங்கி ஓடுவதேன்
என்று குழந்தைகள் கேட்கிற மாதிரியும், அதற்கு கடல் தேவதை பதில் சொல்கிற மாதிரியும் ஒரு பாடலை அமைத்தேன். இப்போது அதே பாடலை அடிப்படையாக வைத்து, அதனோடு சுற்றுப்புறச் சூழல் என்ற கருத்தை இணைத்து ஒரு பாட்டுடை நடனத்தைத் தயார் செய்தேன். அது கடந்த மாதம் நங்கநல்லூரில் 'வானொலிப் பேரவை' மூலம் மேடையேறியது.
கடல் தேவதை சொல்கிறது, "நதிகள் எல்லாம் என்னிடம் விஷமாக மாறி வருகின; தொழிற்சாலைகள் தங்கள் விஷத்தைக் கக்கி என்னிடம் அனுப்புகின்றன. அதனால் நீங்கள் தூய்மையான ஒரு நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக நீங்கள் ஒரு பாடலைப் பாட வேண்டும்" என்று சொல்கிறது. சிறுவர்களும் பாடுகிறார்கள். இப்படி அதை அமைத்திருக்கிறேன்.
என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் நா.பா., கல்கி, அகிலன், மு.வ. இவர்களை எல்லாம் மிகவும் பிடிக்கும். இவர்கள் எல்லாம் மிகவும் பொறுப்போடு, சமூக அக்கறையோடு எழுதியவர்கள். நா.பா., மு.வ.வின் தமிழ் மிகவும் அழகாக இருக்கும். அதுபோல தமிழ்வாணனின் எழுத்து, கேள்வி-பதில் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறார் இலக்கியத்தைப் பொருத்தவரை என்னைக் கவர்ந்தவர்களாக ரேவதி (டாக்டர் ஹரிஹரன்), குழ. கதிரேசன், அமரர் பி.வி. கிரி, ஞானப்பிரகாசம், தென்னவன் என்று பலரைச் சொல்லலாம்.
இன்றைய குழந்தைகள் இன்றைக்கும் நல்ல சிறுவர் கதைகள் வருகின்றன. நாடகங்கள் வருகின்றன என்றாலும் முன்பிருந்த அளவில் நல்ல கருத்தோட்டம் இல்லை. இன்றைய சிறுவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். செல்பேசியை வைத்துக்கொண்டு பல செய்திகளை அறிந்து கொள்கிறார்கள். ஆனால், தமிழில் ஈடுபாடு மிகவும் குறைந்து விட்டது. நான் வாரம் ஒருமுறை ஒரு மணி நேரம் சிறுவர் சங்கத்தைக் கூட்டுகிறேன். முன்பெல்லாம் 30, 40 குழந்தைகள் வருவார்கள். தற்போது 15, 20 பேர்தான் வருகிறார்கள். காரணம், தேர்வு, செஸ், மியூசிக், விளையாட்டு என்று பிசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய டைவர்ஷன் இருக்கிறது. ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகள்தான் இங்கு வருகிறார்கள். அவர்களுக்கு நான் தமிழின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன். விடுகதைகள், புதிர்கள் எல்லாம் சொல்லுகிறேன். ஓரெழுத்து விடுகதை, ஈரெழுத்து விடுகதை, மூவெழுத்து விடுகதை என்று சொல்லி, கேள்விகள் கேட்டு அவர்களைச் சிந்திக்க வைத்து விடைகூறச் சொல்கிறேன். அதற்கு மதிப்பெண் கொடுப்பேன். வருடக் கடைசியில் அவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கிறேன். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குத் தமிழில் பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
குழந்தை இலக்கியத்தின் நிலை தி.ஜ.ர. சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. "வாழ்வியல் இலக்கியங்களுக்கு அடிப்படை குழந்தை இலக்கியம்தான். குழந்தை இலக்கியம் இல்லை என்றால் மற்ற இலக்கியங்கள் எல்லாம் இல்லை" என்று சொன்னார். அது உண்மைதான். குழந்தைகளுக்குத் தமிழார்வம் இல்லை என்றால் அவர்கள் வளர்ந்தபிறகு நம்முடைய இலக்கியங்களை எப்படிப் படிப்பார்கள்? எப்படி நமது, பண்பாடு, கலாசாரத்தைப் புரிந்து கொள்வார்கள்? ஆக, குழந்தை இலக்கியம்தான் அடிப்படை. ஆனால், இன்றைக்கு அது பின்தங்கி இருக்கிறது.
இன்றைய குழந்தைகளுக்குப் பிழையில்லாமல் தமிழ் எழுதத் தெரியவில்லை. சொற்களை உச்சரிக்கத் தெரியவில்லை. அப்படி இருக்க அவர்கள் எப்படி வாசிப்பார்கள்? இந்த நிலைமை மாறவேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் ஒருமணி நேரமாவது தமிழில் கதை சொல்வதற்கென்று ஒதுக்கப்பட வேண்டும்.
சிறுவர் இலக்கியம் வளர வேண்டும், இருக்கும் இலக்கியம் காப்பாற்றப்பட வேண்டும், எதிர்காலச் சந்ததியினருக்குப் பயன் தர வேண்டும் என்றால், தாய், தந்தையர்கள் குழந்தைகளுக்குத் தமிழில் நல்ல கதைப் புத்தகங்களை வாங்கித் தரவேண்டும். இதற்கு அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுவது போல குழந்தை எழுத்தாளர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும். குழந்தை இலக்கியத்தை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தை இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.
பெற்றோர்களுக்கு இதில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசவேண்டும். தமிழின் பெருமையை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். நல்ல கதைகளை, பாடல்களை அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தமிழின் மேல் பற்றுதல் உண்டாகும். பாடல்கள் மூலமாகவும் குழந்தைகளுக்குத் தமிழார்வம் ஊட்டமுடியும். இது தமிழ்ச்சுவை. இதைச் சுவைத்தால்தான் இதன் அருமை புரியும். இந்தச் சுவையை குழந்தைகளுக்கு ஊட்டிவிடப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் முயலவேண்டும். எல்லாருக்குமே இதில் பொறுப்பு இருக்கிறது.
குறளையும், பாரதியையும் படிப்பதற்காகவே ஒருவர் தமிழ் படிக்கலாம்.
"தமிழ் தமிழர்களுக்கே அந்நியமாகிக் கொண்டு வருகிறது. அயல்மொழி தமிழர்களுக்குச் நெருக்கமாகிக் கொண்டு வருகிறது. இந்தப் போக்கு நல்லதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று எச்சரிக்கிறார் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம். அவரைப் பொறுத்தவரை வயது ஓர் எண்ணிக்கைதான். நாம் பேசிக்கொண்டு இருக்கும் போது குழந்தைகள் அங்கே வருகிறார்கள். இவரும் குழந்தையாகிவிடுகிறார். நாம் மெல்ல விடை பெறுகிறோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
எனது படைப்புகள் என்னுடைய பல கதைகளில் மிருகங்களுக்கும் முக்கிய பங்களித்திருக்கிறேன். லஞ்சம் வாங்கக் கூடாது என்பதை மிருகங்கள் மூலம் உணர்த்தியிருக்கிறேன் ஒரு கதையில். வானொலியில் தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக் குறுந்தகடாகப் போட்டபோது என் கதை அதில் இடம்பெற்றது. மற்றபடி எனது புத்தகங்களை நானே பதிப்பித்து வெளியிடுகிறேன். நான் வானொலிக்காக எழுதிய சிறுவர் நாடகங்கள் மட்டும் ஏறத்தாழ ஐநூறுக்கு மேல் இருக்கும். பெரியவர்களுக்கான நாடகங்கள் 40 இருக்கும். எனது நாடகங்களைக் கேட்டுவிட்டு, படித்துவிட்டு பல பள்ளி ஆசிரியர்கள் எனது வீட்டுக்கு வந்து தங்கள் பள்ளியின் விழாக்களுக்கு நாடகம் எழுதி வாங்கிச் சென்றிருக்கின்றனர். எனது நாடகங்களைத் தொகுத்து 'சிரிக்கச் சிரிக்க நடிக்கலாம்' என்ற நூலை எழுதியிருக்கிறேன். மற்றொரு நாடக நூல் 'கொடி உயர்த்துவோம்'. 'தாய் தந்த பூமி' (கவிதை நாடகம்). 'ஆதார சுருதி' (மேடை நாடகம்), 'வாங்க மிஸ்டர் நக்கீரன்' (நகைச்சுவை நாடகம்) போன்றவை நல்ல வரவேற்புப் பெற்றவை.
- எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்
*****
புத்தகப் பூமாலை "புத்தகப் பூமாலை" என்று ஒரு கதை எழுதினேன். ஒரு போட்டி வைக்கிறார்கள். எந்த மாலை சிறப்பாக இருக்கிறதோ அதற்குப் பரிசு என்று அறிவிக்கிறார்கள். பலரும் பல மாலைகளைத் தொடுத்து வருகிறார்கள். ஒரு பையன் மட்டும் புத்தகங்களையே மாலையாகக் கட்டிக் கொண்டு வருகிறான். அதுதான் 'புத்தகப் பூமாலை' அதற்கு முதல் பரிசு கிடைக்கிறது. இது கதைதான். ஆனால், நிஜத்திலும் நடத்தினேன். புத்தகங்களால் ஆன மாலை ஒன்றை ஐந்தரை அடிக்குத் தயார் செய்து, அந்த நூலை வெளியிட்ட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கு அணிவித்தேன். அந்த நூலில் இடம்பெற்ற எல்லாமே சிறுவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கதைகள்.
- எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்
*****
மறக்க முடியாத அனுபவம் 'பாப்பா மகிழ பத்துக் கதைகள்' என்ற நூலுக்கு NCERT விருது கிடைத்தது. அது ஹிந்தியிலும் வெளியாகியிருக்கிறது. ஆங்கிலத்தில் வி. சைதன்யா அதனை மொழிபெயர்த்திருக்கிறார். மொழியாக்கத்திற்காக நல்லி திசையெட்டும் விருது பெற்றவர் அவர். தமிழ்நூலை நான் எனது நண்பர் ஒருவரிடம் கொடுத்தேன். அவரது குழந்தைக்குத் தமிழ் தெரியாது. அந்த நூலில் உள்ள கதைகளை அவர் அந்தக் குழந்தைக்குப் படித்துக்காட்ட, அந்தக் குழந்தைக்கு கதைகள் மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். அவன், "அப்பா, இந்தக் கதைகள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறதே. இது மாதிரிக் கதைகளைப் படிப்பதற்காகவே நான் தமிழ் கற்றுக்கொள்கிறேன்" என்றானாம். இதைக் கேட்க என் மனதிற்கு மிக நிறைவாக இருந்தது.
- எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
*****
அன்றும், இன்றும் அந்தக் காலத்தில் நாடகம், கதை, திரைப்படம் என எல்லாமே நமது பண்பாட்டைப் பேணுவதாக, அதன் அருமையை உணர்த்துவதாக, சமூகத்திற்கு நல்ல செய்திகளைச் சொல்வதாக அமைந்திருந்தன. அந்தப் பண்பாடுகளைப் பற்றி இப்போது யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஜாலியாக இருக்கவேண்டும் என்பதே எண்ணமாக உள்ளது.
பாரதி சொல்வார், "வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்" என்று. ஆனால், இன்றைக்கு அப்படிப்பட்ட படைப்புகள் அருகிக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் காமிக்ஸ் புத்தகங்களை நிறைய வாசிக்கிறார்கள். இல்லாவிட்டால் மாயாஜால, மந்திர, தந்திர பொழுதுபோக்குப் புத்தகங்கள். சிந்தனையை மேம்படுத்தும் படைப்புகள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.
குழந்தைப் பாடல் என்பது ஆறு அல்லது எட்டு வரிக்குள் இருக்க வேண்டும். அதுபோலக் கதைகள் வயதுக்குத் தகுந்தவையாக இருக்க வேண்டும். படங்கள் இருக்க வேண்டும். படம் இல்லாத கதைகள் ஜன்னல் இல்லாத வீடுகள் மாதிரி என்பார் வள்ளியப்பா. குழந்தைகளுக்காக எழுதும்போது மிகவும் கவனமாகக் கருவைத் தேர்ந்தெடுத்து எழுதவேண்டும். கொலை, கொள்ளை, வன்முறை போன்றவை கருவாக இல்லாமல் கவனமாக எழுத வேண்டும். அப்படியெல்லாம் எழுதினால் ஜெர்மனியில் கைது செய்து விடுவார்களாம். அங்கே குழந்தைகளுக்கு எழுத நெறிமுறைகள் உள்ளன. கடல், மலை, ஆறு, இயற்கை, பூக்கள், மிருகங்கள் போன்றவை பற்றியதாக படைப்புகள் இருக்க வேண்டும். சிறுவர், சிறுமியர் உலகம் சீர்பட்ட திசையில் நடந்தால் எதிர்காலச் சமுதாயம் சிறந்துவிடும். "குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும்" என்பதே எனது கொள்கை.
- எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
*****
நான் ஏன் எழுதுகிறேன்? எனது நோக்கம் பணம், புகழ் சம்பாதிப்பதல்ல. நாம் எழுதிய விஷயங்கள், செய்திகள் குழந்தைகளுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதுதான். வணிகநோக்கம் எதுவுமில்லை. சேவை நோக்கம்தான். என்னுடைய புத்தகங்கள் குழந்தைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகப் பள்ளிகளுக்குச் சென்று அங்கு பொறுப்பில் இருப்பவர்களிடம் பேசி, புத்தகங்களைக் கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் நூலகத்திற்காகச் சில பிரதிகளை வாங்கிக் கொள்வார்கள். சமயத்தில் நினைப்பேன், இவ்வளவு பேர் எழுதியிருக்கிறார்களே, நாம் எழுதி எதைச் சாதிக்கப் போகிறோம் என்று. ஆனாலும் உள்ளத்திலே தோன்றும் உந்துதல் காரணமாக எழுதி வருகிறேன். இதற்கு எனக்கு உறுதுணையாக இருக்கும் என் மனைவியும் ஒரு காரணம்.
SBOA பள்ளியில் ஆறு வருஷம் எனது புத்தகங்களைப் பாடமாக வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 50 பள்ளிகள் எனது நூல்களைத் துணைப்பாட நூல்களாக வைத்தன. பாரத் சீனியர் செகண்டரி ஸ்கூல், (அடையாறு) இப்போது எனது நூலைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும், நாம் எழுதிய நூல்கள் குழந்தைகளுக்குப் போய்ச் சேர்கின்றன என்ற உற்சாகத்தையும் அளிக்கின்றது. இப்போது எனது நாடகங்களைத் தொகுத்து நூலாக்கிக் கொண்டிருக்கிறேன். அது விரைவில் வெளிவர இருக்கிறது. அடுத்து தேசத்தை, தேசப்பற்றை மையமாக வைத்து 12 சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். மாணவர்களுக்கு அடிப்படை தேச உணர்ச்சியை ஊட்டவேண்டும் என்பது இந்தக் கதைகளின் நோக்கம். அந்தத் தொகுப்பு அடுத்த மாதம் வெளிவர உள்ளது.
- எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
*****
விருதுகளும் பரிசுகளும்
பாரதிதாசன் விருது (1991) - சென்னைத் துறைமுக நிர்வாகம் திருக்குறள் விருது (1993) - உலகத் திருக்குறள் உயராய்வு மையம் பாரதி பணிச்செல்வர் (1999) - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இளங்கோ விருது (2009) - வசந்தவாசல், கோவை பாலர் படைப்புச் செம்மல் (2012) - 'வாசல்' கவிதை அமைப்பு தமிழ் இலக்கிய மாமணி (2014) - உலகளாவிய மானிடநேய சேவை மையம் சிறுவர் நாவல் பரிசு - குழந்தை எழுத்தாளர் சங்கம் கட்டுரை நூல் பரிசு - பாரத ஸ்டேட் வங்கி சிறுவர் சிறுகதைப் போட்டி பரிசு - NCERT சிறுவர் சிறுகதைத் தொகுப்பு - AVM அறக்கட்டளை சிறுகதைப் போட்டி பரிசு - கவிதை உறவு கவிதைப் போட்டி பரிசு - படைப்பாளர் குரல்
பட்டியல் நீள்கிறது....
***** |