பொங்கல் கொண்டாட்டங்கள்: மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்
ஜனவரி 13, 2018 அன்று மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. இர்விங் SLPS சமுதாய மண்டபத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் அருண்குமார் வரவேற்றுப் பேசினார்.

டாலஸ் வட்டாரத்தில் உள்ள 7 தமிழ்ப் பள்ளிகள் விழாவில் பங்கேற்றன. குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மனதைக் கவர்ந்தது. பொங்கல் பானை, கரும்பு மற்றும் பள்ளிகளின் பதாகைகளைச் சுமந்து மாணவர்கள் மேடையேறியதும் எழுந்த கரவொலியில் விழா அரங்கமே அதிர்ந்தது. மாணவர்களின் 'பொங்கல் கலக்கல் ராசிபலன்' நாடகம் சிரிப்பலையை எழுப்பியது.

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற 'நல்லதொரு குடும்பம்' பயனுள்ளதாக இருந்தது. அனைவரும் 'கோமாதா பூஜை'யில் கலந்துகொண்டனர். கல்பனாவின் ஈஷ்வர் நாட்டியாலயா குழு வழங்கிய கரகாட்டம், மயிலாட்டம், கும்மி ஆகிய நாட்டுப்புற நடனங்கள் கலை விருந்தாக அமைந்தன. 'தகதிமிதா' நடனக்குழுவின் நடனம் பாராட்டைப் பெற்றது. 108 பெண்கள் கண்டாங்கிச் சேலை அணிந்து கும்மி அடித்தது கண்டோரைக் கிராமத்திற்கே அழைத்து சென்றது. உறியடி, கரும்பு கடித்தல், கயிறிழுத்தல், பூப்பறித்தல் பலவகைப் போட்டிகளிலும் மக்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

தொழில்துறையில் உள்ள மகளிர் அமைத்திருந்த கடைகள், புகைப்பட நிலையம், பொங்கலின் சிறப்பை விளக்கும் படங்கள், அலங்கார விளக்குகள் என அரங்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பிரபு ஷங்கரின் மெல்லிசை செவிகளுக்கு விருந்தாக அமைந்தது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வாழை இலை உணவு பரிமாறப்பட்டது.

விழாவில் பேசிய திருமதி. கோமதி, இவ்வாண்டில் பெண்கள் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு சங்கம் செயல்படும் எனத் தெரிவித்தார். அதற்காக மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் , உளவியல் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களை கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. குடும்ப வன்முறை மற்றும் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றங்களை இந்தக் குழுவுக்குத் தெரிவித்துப் பெண்கள் ஆலோசனை பெறலாம் என்று கூறினார். சுயதொழில் தொடங்க முன்வரும் பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் நலத் திட்டங்களுக்குச் சங்கத்தின் சார்பாக உதவத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அவ்வகையில் தன்னார்வலர் ஜவஹரின் கிராமப் பள்ளிக்கூடத்திற்கு கட்டட வசதிக்காக $1,100 டாலர் வழங்கப்பட்டது.

தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முன்னாள் தலைவர்களின் சேவையைப் பாராட்டி நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. 2016-17 ஆண்டின் நிர்வாகக் குழுவினர் கௌரவிக்கப்பட்டனர். வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை (FETNA) தலைவர் செந்தாமரை பிரபாகர் விழாவில் பங்கேற்றார். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து FeTNAவின் 31வது ஆண்டு தமிழ் விழா டாலஸில் ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை நடைபெற உள்ளது. அதற்கு அனைவரையும் நேரில் அழைப்பதற்காக வந்திருந்ததாக தெரிவித்தார். பேரவை தமிழ்விழா ஒருங்கிணைப்பாளரும், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவருமான கால்டுவெல் வேள்நம்பியும் விழாவில் பங்கேற்றார். 'மழலை, மரபு, மகளிர்' என்ற கருவை மையமாக வைத்து நடக்கவிருக்கும் பேரவையின் தமிழ்விழாவுக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com