பொங்கல் கொண்டாட்டங்கள்: சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றப் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, ஜனவரி 27, 2018 அன்று மில்பிடாசிஸ் இந்திய சமூகமையக் கூடத்தில் பொங்கல் கலைவிழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

விழாவை மாலை 3.30 மணியளவில் திருமதி. பாரதி (விரிவுரையாளர், தமிழ் & தெலுங்கு, தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள் துறை, பெர்க்லி பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா) குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். தமிழ் மன்றத் தலைவர் திரு. தயானந்தன் 2018 ஆண்டின் செயற்குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். மேலும், கலை விழாவுக்கு உழைத்த தன்னார்வலர்களுக்கு மேடையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு. ராஜ் சல்வான் (நகர்மன்ற உறுப்பினர், ஃப்ரீமான்ட் நகரம், கலிஃபோர்னியா) தனது பொங்கல் பண்டிகை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து மற்றுமொரு சிறப்பு விருந்தினரான இந்திய தூதரக அதிகாரி திரு. வெங்கடரமணா (சமூகவிவகாரம், தகவல்தொடர்பு மற்றும் கலை, சான் ஃபிரான்சிஸ்கோ) வாழ்த்திப் பேசினார்.

ஒருபுறம் ஏர்க்கலப்பையுடன் உழைக்கும் விவசாயியையும் மறுபுறம் மாட்டு வண்டி அமைப்பினையும் மேடையில் நேர்த்தியாக வடிவமைத்து இருந்தது அழகூட்டியது. சிறுவர், சிறுமியர் ஆர்வமாகப் பங்கேற்ற 'குறளுக்குக் குறள்' போட்டி, பேச்சுப் போட்டி சிறப்பாக இருந்தது. சிறுவர்-சிறுமியர், பெண்கள் மற்றும் ஆண்கள் களிப்புடன் பங்கேற்ற ஆடல், பாடல் நிகழ்வுகள் மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

'தேநீர்க் கடை' அமைப்பு அனைவரையும் கவர்ந்தது. அதன்முன்பு குழு குழுவாக நின்று மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பஞ்சுமிட்டாய் கடை, ஆடை அணிகலன் கடைகள் போன்றவை வரிசையில் நின்று ஜொலித்தன. தமிழ் மன்ற உறுப்பினர்களே சொந்தப் பாடல்வரிகளை எழுதி இசைத்த “ஜிமிக்கிப் பொங்கல்” பாடல் கலகலப்பாக இருந்தது. இறுதியில் நடந்த பெரியவர்களின் துள்ளல் நடனங்கள் பரவசப்படுத்தின.

தெய்வேந்திரன் முருகன்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com