பாரதியார் தமிழ்ப் பள்ளி: கலைவிழா
டிசம்பர் 15, 2018 அன்று, சான் டியகோ தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் பாரதியார் தமிழ்ப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு கலைவிழா நடைபெற்றது. 'எனக்குப் பிடித்த பாரம்பரியப் பண்டிகைகள்' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

விநாயக சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ், பொங்கல், சிவராத்திரி, ரம்ஜான் பண்டிகைகள் பற்றிய இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை, கவிதை, பேச்சு, காவடி ஆட்டம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் வழங்கினர். பண்டிகை என்றாலே பலகாரம் இல்லாமல் இல்லை என்பதை நினைவூட்டும் விதமாக லட்டு, வடை, பாயசம், சீடை போன்றவை பற்றிய பேச்சு கேட்டோரின் நாவில் எச்சில் ஊற வைத்தது. இந்தியப் பண்டிகைகளுக்கும் அமெரிக்கப் பண்டிகைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை பற்றிய நிகழ்ச்சி அறிவூட்டும் விதமாக இருந்தது.

பொங்கல் பண்டிகைக்கு அமெரிக்காவில் விடுமுறை வேண்டும் என்ற குழந்தைகளின் கோரிக்கையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

பூபதி,
சான் டியகோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com