ஹார்வர்டு தமிழிருக்கை: நியூ யார்க் விழா
ஜனவரி 7, 2018 அன்று நியூ யார்க் மற்றும் சுற்றுப்புறங்களில் வாழும் தமிழர், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கான நிரந்தர இருக்கை அமைக்க நிதி திரட்டும் விழா ஒன்றை நடத்தினர். நியூ யார்க், கார்டன் சிட்டியிலுள்ள ஓர் உணவகத்தில் நடைபெற்றது. விழாவை நியூ யார்க் தமிழ்ச் சங்கம், நியூயார்க் தமிழ் அகடமி, தமிழ்நாடு அறக்கட்டளையின் நியூ யார்க் கிளை, முத்தமிழ் முன்னேற்ற மன்றம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணைந்து நடத்தினர்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைய வித்திட்ட காரண கர்த்தாக்களான மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம் ஆகியோர் தமது துணைவியாருடன் வந்து சிறப்பித்தனர். ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலிருந்து திரு. ஜானதன் ரிப்ளி, நியூயார்க் ஸ்டோனிபுரூக் கல்லூரியிலிருந்து திரு. டெக்ஸ்டர் பெயிலி, மற்றும் பென்சில்வேனியா பல்கலையிலிருந்து முனைவர். வாசு ரங்கநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

நிகழ்வில் நியூ யார்க் தமிழ் அகடெமியின் முனை. பாலா சுவாமிநாதன், மரு. ஜானகிராமன், மரு. சம்பந்தம் மற்றும் முனைவர் வாசு ரங்கநாதனுடன் நடத்திய கலந்துரையாடல், தமிழிருக்கை குறித்த புரிதலை மக்களுக்கு அதிகரிக்க உதவியது.

திரு. ஜானதன் ரிப்ளி தான் மதுரையில் வாழ்ந்த நாட்களில் கிடைத்த அனுபவங்களை உற்சாகமாகத் தமிழில் பகிர்ந்துகொண்டார். திரு. டெக்ஸ்டர் பெயிலி தமிழ்ச் சமூகம் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கூறியதுடன், பாலா சுவாமினாதனும், அவரது துணைவியார் பிரபாவும் ஸ்டோனிபுரூக் கல்லூரியில் தமிழிருக்கை ஏற்பட உதவியமைக்கு நன்றி நவின்றார்.

விழாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் நியூ யார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ரங்கனாதன் புருஷோத்தமன், துணைத்தலைவர் திரு விஜயக்குமார், திரு. செல்வன், திரு. ஶ்ரீராம், தமிழ்நாடு அறக்கட்டளை, மரு. குப்தா, திருமதி பிரகஷிதா குப்தா, தமிழ்ச் சங்க முன்னாள் தலைவி திருமதி காஞ்சனா பூலா, மரு. கிருஷ்ணா மற்றும் பல தன்னார்வலர்கள்.

விழாவை நியூ ஜெர்சியின் புவனா கருணாகரன் தொகுத்து வழங்கினார். சிறுவர்கள் ஆதி, தருண், உதயா, உதய் ஆகியோரின் பறையடி பிரமாதம். விழா மதியம் 12 மணியளவில் துவங்கி மாலை 5 மணிக்கு "ஜெர்சி ரிதம்ஸ்" இன்னிசையுடன் முடிந்தது.

இந்த நிகழ்வில் சுமார் 125,000 அமெரிக்க டாலர்கள் ஹார்வர்டு தமிழிருக்கைக்குத் திரட்டப்பட்டது.

புவனா கருணாகரன்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com