ஃபிப்ரவரி 13, 2018 அன்று, நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாஸ்டன் அருகே உள்ள நாஷுவா நகரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சிவபெருமான் நர்மதை லிங்கம், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், மேதா தக்ஷிணாமூர்த்தி என்று பல வடிவங்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். காஞ்சி மகாபெரியவருக்கும் இந்த ஆலயத்தில் தனி சன்னிதி உண்டு.
ஜனவரி 6ம் தேதி அன்று துவங்கிய மகாருத்திர பூஜை ஃபிப்ரவரி 4 அன்று ருத்திர ஹோமத்துடன் நிறைவுற்றது. மகாருத்திர அபிஷேகம் நடைபெற்றது. சிவராத்திரி அன்று மாலை ஐந்து மணியளவில் தொடங்கிய நான்குகால பூஜை மறுநாள் காலை ஐந்து மணிவரை நடந்தது. பூஜையின்போது தேவார திருமுறைப் பாடல்கள் ஓதப்பட்டன. அர்ச்சகர் திரு. பாலகிருஷ்ண சாஸ்திரிகள் செய்த சிவசக்தி அலங்காரம் (முன்புறம் சிவ உருவம் பின்புறம் சக்தி உருவம்) கண்கொள்ளாக் காட்சி. அதிகாலை ருத்திர கிரம அர்ச்சனையுடன் சிவராத்திரி விழா நிறைவுவுற்றது.
சிவன், மீனாக்ஷி அம்மன், ஸ்ரீனிவாசர், சீதாராம பரிவாரம், ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், ஐயப்பன், நவக்கிரங்கள், காஞ்சி மகாபெரியவர் என்று இறைவனின் பல வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம், மீனாக்ஷி கல்யாணம், ஸ்ரீனிவாச கல்யாணம், ஐயப்ப மகரவிளக்கு பூஜை போன்ற உத்சவங்கள் கொண்டாடப்பட்டன. சென்ற ஆண்டு நியூ ஹாம்ப்ஷயர் மாநில சட்டசபையில் இந்துமத முறையில் துவக்கப் பிரார்த்தனை செய்ய அழைத்திருந்தனர்.
மேலும் அறிய: www.hindutemplenh.org
அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, நியூ ஹாம்ப்ஷயர் |