நடிகை ஸ்ரீதேவி துபாயில் காலமானார். இவர், ஆகஸ்ட் 13, 1963 அன்று, சிவகாசியில், ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். நான்கு வயதில் 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் முருகன் வேடத்திலும், குழந்தை நட்சத்திரமாகவும் நிறைய நடித்தார். பாலசந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். '16 வயதினிலே' வாழ்வின் திருப்புமுனைப் படமானது. தொடர்ந்து 'சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, ப்ரியா, மூன்றாம் பிறை உட்படப் பல வெற்றிப்படங்களில் நடித்தார். ரஜினி, கமல் போன்றோருடன் அதிகப் படங்களில் நடித்தவர்.
பின்னர் ஹிந்தித் திரையுலகில் புகுந்தார். ஹிம்மத்வாலா, சத்மா, கர்மா, மிஸ்டர் இந்தியா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். போனிகபூரைக் காதலித்து மணம் செய்து கொண்டார். ஜான்வி, குஷி என இவருக்கு இரண்டு மகள்கள். திருமணத்திற்கு பின் நடிப்பைத் துறந்திருந்தவர், 15 ஆண்டுகளுக்கு பிறகு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ரசிகர்களை மகிழ்வித்தார். தமிழில் விஜயுடன் 'புலி' படத்தில் நடித்தார். கடைசியாக நடித்தது கடந்த ஆண்டு வெளியான 'மாம்'.
தமிழக அரசின் கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது (ஆறு முறை) பெற்றவர். இந்திய அரசு இவரது கலைச்சேவைக்காக 2013ம் ஆண்டில் 'பத்மஸ்ரீ' வழங்கிக் கௌரவித்தது. உறவினர் வீட்டுத் திருமணத்திற்காகத் துபாய் சென்றவர் அங்கேயே காலமானார்.
|