இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் போர்வீரர்கள் இருந்த கப்பல் ஒன்றை ஜப்பானிய விமானம் குண்டு வீசி மூழ்கடித்தது. பலர் உயிரிழந்தார்கள். அதில் ஐந்துபேர் மட்டும் உயிர்காப்புப் படகில் ஏறித் தப்பிவிட்டனர். அவர்கள் பலமணி நேரம் கடல் அலைகளில் தத்தளித்தனர்.
அவர்களில் ஒருவர் மிகவும் சோர்வடைந்து, "கடல் என்னை விழுங்கிவிடும்; நான் சுறாமீன்களுக்கு உணவாகிவிடுவேன்" என்று அலறினார். அந்த அச்சத்திலேயே அவர் கடலில் முழுகிப்போனார்.
மற்றொருவர் தன் குடும்பத்தை எண்ணி அழுதார். "ஐயோ! என் குடும்பத்தின் எதிர்காலத்துக்கு எதுவும் செய்யாமலே நான் இறக்கிறேனே" என்று கதறிய அவர் நம்பிக்கையிழந்து உயிரைவிட்டார்.
"என்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி என்னிடம் இருக்கிறது. அடடா! இதை நான் வீட்டில் அல்லவா வைத்திருக்கவேண்டும்! இப்போது என் மனைவி என்ன செய்வாள்? நான் சாகத்தான் போகிறேன்" என்று எண்ணினார் மூன்றாவது வீரர். நம்பிக்கையிழந்து அவரும் உயிர் நீத்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!
மற்ற இருவரும் கடவுள் நம்பிக்கையை ஒருவருக்கொருவர் உறுதிப்படுத்தியபடி இருந்தனர். "நாங்கள் அச்சத்துக்கு இரையாக மாட்டோம். நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், கடவுள்மீது நமது நம்பிக்கை உறுதியானதாக இருந்தால் அவர் காப்பாற்றுவார் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்" என்றனர்.
இவ்வாறு அவர்கள் ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டு இருந்தபோது அங்கே ஒரு ஹெலிகாப்டர் வந்தது. கரையோரக் கப்பல் ஒன்று இவர்களுடைய உதவிக்கான சமிக்ஞயைப் பார்த்து ஹெலிகாப்டரை அனுப்பி வைத்தது. இருவரும் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் மீண்டும் பாதுகாப்பாகத் தரைக்கு வந்ததும், "வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி ஐந்து நிமிடம்தான். நம்பிக்கை வெற்றியைக் கொடுத்தது. அதில்லாமை தோல்வியையும் மரணத்தையும் கொடுத்தது" என்று கூறினர்.
நன்றி: சனாதன சாரதி, ஃபிப்ரவரி 2016
ஸ்ரீ சத்திய சாயிபாபா |