மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 1)
பின்புலம்: சிலிக்கான் சில்லுத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்துகொண்டு உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவுகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்டு மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவநுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

*****


ஷாலினி மரபணு தொழில்நுட்பக் கருத்தரங்கில் ஆர்வத்துடன் சொற்பொழிவுகள், உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள், பணிப்பட்டறைகள் (workshops) போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் திளைத்துக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டது!

அவசரமாக ஒரு கருத்துப் பரிமாற்ற நிகழ்விலிருந்து அடுத்த நிகழ்ச்சிக்கு ஷாலினி விரைந்து கொண்டிருந்தாள். அப்போது அவள் விழியோரத்தில் பரிச்சயமான உருவம் ஒன்று தென்பட்டது. ஷாலினி சட்டென நின்று யாரென்று கவனித்தாள். அட! என்ரிக்கே காஸ்ட்ரோ (Enrique Castro) அல்லவா! அவரைப் பார்த்துப் பேசி எவ்வளவு நாளாயிற்று! மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற முயன்று கொண்டிருந்த போது அதே மருத்துவக் கல்லூரியில் என்ரிக்கேயும் ஆராய்ச்சியாளராக இருந்தபோது பழகியதுதான். இருவரும் ஒரே பேராசிரியரின் ஆராய்ச்சிக் குழுவில் இருந்தனர். ஷாலினி பெருமூச்சுடன், 'எவ்வளவு நாட்கள் ஓடிவிட்டன!' என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.

ஆனால், ஷாலினிக்கு எதோ சரியாகப் படவில்லை. "இது என்ன, என்ரிக்கேயின் முகம் இவ்வளவு கவலை தோய்ந்திருக்கிறது. என்ரிக்கே எவ்வளவு ஜாலியான ஆசாமி! எப்போதும் புன்னகை மலர்ந்த தோற்றம். எடுத்ததற்கெல்லாம் ஒரு ஜோக், அட்டகாசமான சிரிப்பு. அவர் இப்படி! பாவம் என்ன பிரச்சனையோ தெரியவில்லையே" என்றெல்லாம் நினைத்தவள் சற்றே தயங்கினாள். விசாரித்தால் சொந்த விஷயத்தை குடாய்வதகாத் தவறாக உணர்ந்து கொள்வாரோ! சில நொடிகள் தயங்கிய பின் சுதாரித்துக் கொண்டு அருகில் சென்று சாதாரணமாக உரையாட ஆரம்பித்தாள்

"ஹே, என்ரிக்கே! என் கண்ணையே நம்ப முடியவில்லையே! எப்படி இருக்கீங்க? எவ்வளவு நாள் ஆச்சு? என்ன செய்யறிங்க? எங்க இருக்கீங்க?" என்று படபடவென தன் குழப்பத்தை மறைத்துக்கொண்டு பொரிந்து தள்ளினாள்.

ஒரு தூணில் சோர்வுடன் சாய்ந்து கொண்டிருந்த என்ரிக்கே சற்று சுதாரித்துக்கொண்டு, கவலையை முகத்திலிருந்து மறைத்து, மெல்லிய புன்னகையுடன் ஷாலினியுடன் கை குலுக்கினார். "வாவ், ஷாலினி, ஆமாம், எவ்வளவு வருடங்கள் ஆயிடுச்சு! நான் இன்னும் சான் ஃப்ரான்ஸிஸ்கோ பே ஏரியாவிலேயேதான் ஆராய்ச்சி நடத்திக்கிட்டிருக்கேன். நீ என்ன செய்யறே?"

ஷாலினி "நான் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சி செஞ்சிகிட்டிருக்கேன். மரபணு சம்பந்தமாக்கூட கொஞ்சம் வேலை கலந்திருக்கு. அதனாலதான் இங்க வந்தேன். நீங்க...?"

என்ரிக்கேயின் முகத்தில் மீண்டும் கவலையும் சோகமும் நிழலாடின. அவற்றை மறைத்துக் கொண்டு சாதாரணமாகப் பதிலளித்தார். "நான் செயற்கை மரபணு மாற்றத் துறையில ஒரு சொந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திக்கிட்டிருக்கேன். அதன் பெயர் டினாடா லேப்ஸ் (DiNAda Labs)"

ஷாலினி முறுவலித்தாள். "ஓ! DNA-வுக்கும் ஸ்பானிஷ்ல நன்றி சொன்னா மறுதலிக்கும் De Nada என்னும் வாக்கியத்துக்கும் கனெக்‌ஷனா? வெரி க்ளெவராப் பேர் வெச்சிருக்கீங்க! எப்படிப் போயிட்டிருக்கு நிறுவனம்?"

என்ரிக்கேயால் துக்கத்தை மறைக்க முடியவில்லை. "ஹூம்... ரொம்ப நல்லாத்தான் போயிட்டிருந்தது – போன மாசம் வரைக்கும். ஆனா இப்ப கொஞ்ச நாளா..."

ஷாலினி ஆதரவாகத் தலையாட்டி கை நீட்டினாள். "ஓ, என்ன ஆச்சு என்ரிக்கே? என்ன பிரச்சனை? சொல்லுங்க... என்னால எதாவது உதவ முடியுமான்னு பாக்கறேன்."

என்ரிக்கே சோகத்துடன் தலையாட்டினார். "இது ரொம்பக் கஷ்டமான விஷயம் ஷாலினி. ரொம்ப ரொம்ப நூதனமான தொழில்நுட்பம். உலகத்துலயே வேற எங்கயும் நாங்க செஞ்சிருக்கற அளவுக்கு முன்னேறிய மரபணுத் தொழில்நுட்பம் கிடையாதுன்னு அடிச்சு சொல்லுவேன். ஆனா..."

என்ரிக்கே மேற்கொண்டு விவரிக்கத் தயங்கவே ஷாலினி தொடருமாறு ஊக்குவித்தாள். "எதுவாயிருந்தாலும் பரவாயில்லை என்ரிக்கே. என்னால நேரடியா உதவ முடியாட்டா என்ன, யாரால உதவ முடியும்னு கண்டுபிடிக்கலாம். மேல சொல்லுங்க!"

என்ரிக்கே நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டுத் தொடர்ந்தார். "ஓகே ஷாலினி, சொல்றேன். உன்கிட்ட சொன்னாலாவது என் மன உளைச்சல் கொஞ்சம் குறையுமான்னு பாக்கலாம். நீ ரொம்ப புத்திசாலி, ரொம்ப நல்ல இதயமும் படைச்சவ. உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல முடியும். என் பிரச்சனை என்னன்னா, என் வாழ்க்கை பூரா செஞ்ச முயற்சிகள் ஒட்டு மொத்தமா வீணாப் போயிடும் போலிருக்கு!"

ஷாலினி பரிதாபப்பட்டாள். "அய்யய்யோ அவ்வளவு தீவிரமான பிரச்சனையா? என்ன ஆச்சு?"

என்ரிக்கே தொடர்ந்தார். "நான் இப்போ மரபணு தொகுப்புத் (gene editing) துறையில் மிக உயர்நிலை தொழில்நுட்பத்துல ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்கேன். அப்படின்னா என்னன்னு உனக்குத் தெரியுமா?"

ஷாலினி தலையாட்டிக்கொண்டு, "ஊம்... எதோ கொஞ்சம் அதைப் பத்தி படிச்சிருக்கேன், கேள்விப் பட்டிருக்கேன். எதோ க்ரிஸ்பர்னு (crspr) ஒரு வழிமுறையால செய்ய முடியும்னு... அதுவா?"

என்ரிக்கே சோகமாக முறுவலித்துவிட்டு விளக்கினார். "நீ கேள்விப் பட்ட தொழில்நுட்பம் ஒரு ஜூஜூபி! நான் உருவாக்கினது அதைவிடப் பல மடங்கு முன்னேறியது. அதுக்காக நானே ஒரு நிறுவனத்தை ஆரம்பிச்சு, அரசாங்கத்துக்கு மனுப் போட்டு, நிதியளிப்பு வாங்கி, இன்னும் சில மருந்து நிறுவனங்களிடமிருந்து மூலதனமும் வாங்கி, பல ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு வச்சு கொஞ்சம் கொஞ்சமா வளர்த்து... ஓ எவ்வளவு வருட உழைப்பு! போச்சு! எல்லாம் குட்டிச்சுவராப் போச்சு!" என்று கூறியவர் முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு விம்மவே ஆரம்பித்துவிட்டார்.

ஷாலினி பரிதாபம் கலந்த நேசத்துடன் அவர் தோள்மேல் தன் கைகளை வைத்துக்கொண்டு, "இதோ பாருங்க என்ரிக்கே, கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, என்னதான் ஆச்சுன்னு ஓரளவுக்காவது சொல்லுங்க. அப்பதானே நான் எதாவது உதவி செய்ய முடியுமான்னு யோசிக்கலாம். உம்... சொல்லுங்க" என்று ஊக்குவித்தாள்.

என்ரிக்கே சற்றுச் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தார். "ஓகே, சொல்றேன். என் மரபணு மாற்ற நுட்பம் க்ரிஸ்பரை விட மிகவும் முன்னேறியது என்று சொன்னேன் இல்லயா? அந்த நுட்பத்தைப் பற்றி இந்த கருத்தரங்குலதான் வெளியுலகுக்கு இலைமறை காயா கொஞ்சம் வெளிக்காட்டணும்னு இருந்தேன். ஒரு வாரம் முன்னால வரைக்கும் அது பிரமாதமா வேலை செஞ்சுது. எல்லா பரிசோதனைகளிலயும் சரியானபடி வேண்டிய பலன் தந்தது. ஆனா ஒரு வாரமா திடீர்னு..."

என்ரிக்கே நிறுத்தி மீண்டும் கைகளில் முகம் புதைத்து விம்மவே, ஷாலினி மீண்டும் தோள்களில் தட்டிக் கொடுத்து, "திடீர்னு என்ன? சொல்லுங்க?" என்றாள்.

"திடீர்னு ஒரு வாரமா என் நுட்பம் சரியா வேலை செய்யமாட்டேங்குது. க்ரிஸ்பரை விட படுமட்டமான பலனளிக்குது! எனக்கும் என்னுடைய ஆராய்ச்சியாளர்களுக்கும் ஏன் அப்படி ஆயிடுச்சுன்னு துளிகூடப் புரியல. வழிமுறைகளின் எல்லாப் படிகளையும் அக்கு வேறு ஆணி வேறா அலசியாச்சு. என் மண்டையைப் பிச்சிக்கறா மாதிரி ஆயிடுச்சு. ஒண்ணும் விளங்கலை! ஹூம்... என்னுடைய துரதிருஷ்டம். இந்த மகத்தான கருத்தரங்குல இதை வெளிப்படுத்த முடியல. என்ன செய்யறதுன்னும் தெரியலை. உன்னால என்ன செய்ய முடியும் ஷாலினி! உனக்கோ க்ரிஸ்பரே மேலோட்டமாத்தான் தெரியும். இதப்பத்தி புரிஞ்சிகறதே ரொம்ப கஷ்டம்..."

ஷாலினியின் மனத்தில் ஒரு மின்னல் எண்ணம் தோன்றவே அவள் முகம் பிரகாசம் அடைந்தது. "என்ரிக்கே, நீங்க சொல்றது சரிதான். என்னால மட்டும் பெரிசா ஒண்ணும் செய்ய முடியாதுதான். ஆனா எனக்குத் தெரிஞ்ச துப்பறிவாளர் சூர்யான்னு ஒருத்தர் இருக்கார். அவர் இப்படிப்பட்ட பல சிக்கலான நுட்பங்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வச்சிருக்கார். ரோபாட், நேனோ நுட்பம், முப்பரிமாண மெய்ப்பதிப்பு, இப்படிப்பட்ட பல துறைகளில் நிவாரணம் கொடுத்திருக்கார். அவர்கிட்ட பேசிப் பாருங்களேன். அவரோட சேர்ந்து என்னால ஒருவேளை உங்களுக்கு உதவ முடியலாம்!"

என்ரிக்கே அவநம்பிக்கையுடன், "துப்பறிவாளரா? ஹூம் எனக்கொண்ணும் நம்பிக்கையில்லை. சரி இருந்தாலும் நீ சொல்றதுனால பேசிப் பாக்கறேன். கருத்தரங்கு இன்னிக்கு முடிஞ்சு ஊர் திரும்பினதும் அறிமுகம் செஞ்சு வை, பேசலாம்."

அந்தச் சுவாரசியமான மர்மத்தைச் சூர்யா அவிழ்ப்பாரா? பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com