எர்த்தாம்டனின் சுடர்: ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 5)
அருண் தும்மியது நல்ல வேளையாக யாருக்கும் கேட்கவில்லை. அதுவும், திருமதி ரிட்ஜுக்குக் கேட்காதது அருணுக்கு ஒரு ஆசீர்வாதம் போலப் பட்டது. யாருக்கும் தெரியாமல் ஒரு சின்ன டிஷ்யூவை எடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டான். ரிட்ஜ் தன்னைக் கவனித்தாரா என்று ஒரு நோட்டம் விட்டான். அவர் மற்றொரு மாணவனிடம் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

3 மைல் நடந்த பின்னர் கிராம மையத்தை வந்தடைந்தனர். ஒரு சில நிமிடங்களுக்கு, மலை ஏறிய களைப்பில் யாரும் பேசவில்லை. பின்னர், சலசல என்று பேச்சு ஆரம்பித்தது. திருமதி ரிட்ஜ், மிஸ் மெடோஸ் இருவரும் மாணவ மாணவியரை அமைதியாக இருக்கக் கூறினர்.

அப்பொழுது அங்கு வயதானவர்கள் சிலர் வந்து, மாணவ மாணவியரை வரவேற்றனர். அவர்கள் அனைவரும் பலவர்ணப் பட்டைகளை கொண்ட உடைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள் முதிர்ந்த வயதினராக இருந்தார்கள். எல்லோர் கையிலும் தடி இருந்தது. ஒருவர் தடியில் மட்டும் பலவிதமான கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவர்தான் அந்த கிராமத்தின் தலைவர் போன்று தோன்றியது. அவர் கண்களில் தீட்சண்யமும், முகத்தில் சாந்தமும் நிறைந்திருந்தது.

அவர் பேசினார். "வணக்கம் ஆசிரியர்களே, மாணவ, மாணவியரே! உங்கள் அனைவரையும் Pueblo Del Indegna கிராமவாசிகள் சார்பாக நாங்கள் பணிவன்போடு வரவேற்கிறோம். என் பெயர் Flowing Waterfall. நான் இந்த கிராமத் தலைவன். எனது முன்னோர்கள் இங்குள்ள அருவியருகில் வாழ்ந்தவர்கள். நீங்கள் என்னை சீஃப் ஃபால்ஸ் என்று அழைக்கலாம். எங்களின் கிராமம் அற்புதமானது. இங்குள்ள மரங்கள், செடிகள், ஏன் விலங்குகள் கூடப் பல கதைகள் சொல்லும். எங்களைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள எங்களைப் போலவே நடந்து கொள்ளுங்கள். எல்லா இடங்களுக்கும் காலாற நீங்களே சென்று பாருங்கள். ஏதாவது கேள்விகள் இருந்தால், மதிப்போடு எங்கள் மக்களைக் கேளுங்கள். நீங்கள் இன்றைய பொழுதை மிகவும் சந்தோஷமாகவும், பயனுள்ளதாகவும் கழிப்பதற்கு எங்களாலான எல்லா உதவியையும் செய்வோம்."

அவரைப் பார்தவுடனேயே மிஸ் மெடோஸுக்கு உணர்ச்சி வசப்பட்டு கண்ணில் நீர் வந்தது. அருணிடம் தனக்கு அங்கு வர முடிந்தது ஒரு பாக்கியம் என்று முன்னர் அவர் சொல்லிருந்தது அவனுக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

"கிளாஸ், நாம கிராமத்தை சுத்திப் பாக்கலாமா? சீஃப் ஃபால்ஸ் கேட்டுக்கொண்டது போல நாமே சென்று, இந்த கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ளலாமா? வாருங்கள்" என்றார் திருமதி ரிட்ஜ்.

அப்போது திரு. கிளென்னைக் கவனித்தான். அவர் எதிலும் நாட்டம் இல்லாதவர்போல் ஏதோ சிந்தனையில் இருந்தார். இன்னொருபுறம் மெடோஸ் மிகவும் உற்சாகமாக இருந்தார். அவர் "போலாமா?" என்று ஒரு துள்ளலோடு கேட்டார்.

மாணவ மாணவியர் அனைவரும் ஒரு சின்ன குழுவாகக் கூடிக்கொண்டு கிராமத்தை துருவிப் பார்க்க ஆயத்தம் ஆனார்கள். அருண் கையை உயர்த்தினான். அவனை சீஃப் ஃபால்ஸ் கவனித்தார். அவன் ஏதோ கேட்கத்தான் அப்படிச் செய்தான் என்று புரிந்துகொண்டு, ரிட்ஜும் மெடோஸும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தனர்.

"குழந்தாய், உனது அறிவை நான் எப்படி விஸ்தரிக்கலாம்?" என்று சீஃப் கேட்டார். அவர் கேட்டவிதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் மாணவர்கள் சிரித்தனர். "கேளப்பா... உன் சந்தேகம் என்னவோ?" என்று அருணைப் பார்த்துக் கேட்டார் சீஃப்.

அருண் தயக்கத்தோடு ரிட்ஜைப் பார்த்தான். அவர் தலையசைத்து அனுமதித்தார்.

"ஐயா, உங்கள் உடைகளில் பலவிதமான நிறங்களில் பட்டைகள் இருக்கின்றனவே. அதன் அர்த்தம் என்ன?" என்று அருண் கேட்டான்.

சீஃப், அருணின் கேள்விக்கு நேரடியாக விடை சொல்லாமல், பொதுவாகப் பார்த்துப் புன்னகைத்தார். அவரை அருணின் கேள்வி சந்தோஷப்படுத்தியது என்பதை அவரது முகம் கூறியது.

"என் உடையில் உள்ள நிறங்கள் என்னென்ன, சொல்லுங்கள்?" என்றார் அவர்.

"பழுப்பு" என்றான் அருண்.

"பச்சை" என்றது மற்றொரு குரல்.

"நீலம்."

"ஆழ்நீலம்"

"வெள்ளை."

"சிகப்பு."

பதில்கள் உற்சாகத்துடன் வந்தன.

"சரியாகச் சொன்னீர்கள். எங்கே, நீங்களே அதன் அர்த்தத்தையும் சொல்லுங்களேன்?" என்று தூண்டினார். சில நிமிடங்களுக்கு யாரிடம் இருந்தும் பதில் வரவில்லை.

"ம்ம்ம்…பச்சை இயற்கையின் அடையாளமோ?" என்று கேட்டார் மெடோஸ்.

"சரியாகச் சொன்னீர்கள்! எங்கே, அதுபோல மற்ற நிறங்களின் அர்த்தத்தை கூறுங்களேன் பார்ப்போம்" என்றார் சீஃப்.

பதில்கள் பல முனைகளிலிருந்து புறப்பட்டன.

"பழுப்பு, பூமியின் நிறம்."

"சிகப்பு, நெருப்புக்கு."

"நீலம், வானத்தின் நிறம்."

"ஆழ்நீலம், தண்ணீர்."

பட்டுப்பட்டென்ரு பதில்கள் வந்தன. "இன்னும் வெள்ளை மட்டும் இருக்கே. எங்கே அதன் பொருளையும் சொல்லுங்க பார்ப்போம்?" என்றார் சீஃப்.

யாருக்கும் தெரியவில்லை. அனைவரும் யோசித்தார்கள்.

"நான் ஒரு குறிப்பு கொடுக்கிறேன். சொல்லுங்கள், இது இல்லாமல் நாம் உயிர்வாழ முடியாது." என்றார் சீஃப்.

"காற்று!" என்று ஒரு குழந்தைபோலத் துள்ளிக்கொண்டு பதில் அளித்தார் திருமதி ரிட்ஜ்.

"பார்த்தீர்களா! நீங்களே இந்த நிறங்களின் நெறியைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். நாங்கள் இயற்கையை தெய்வமாக வணங்குபவர்கள். அது எங்களுக்குத் தாய் போன்றது" என்றார் சீஃப் ஃபால்ஸ்.

சில நிமிடங்களுக்குப் பின்னர் அவர் மற்றப் பெரியவர்களோடு விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். அருணுக்குத் திடீரென்று மீண்டும் மூக்கை என்னவோ செய்தது. தனக்குத் தும்மல் வரப் போகிறது, அதுவும் சாதாரணமானதல்ல என்று தோன்றியது. எங்கே தும்மினால் அங்கிருந்து வெளியேற்றி விடுவார்களோ என்று பயந்து ஓய்வறை இருக்கும் பக்கம் மூக்கை மூடிக்கொண்டு ஓடினான். ஓடிய வேகத்தில் ஒரு திருப்பத்தில் எதிரே வருபவர் யாரென்று பார்க்காமல் படாரென்று மோதினான்.

"ஆ!" ஒரு பெண்ணின் குரல். அருண் தலையைத் தடவிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தான். தன் வயதில் ஒரு சிறுமி அங்கு நின்றாள். அவன் மோதியதில் அவளுக்கு பலமான அடி.

"நண்பா, உனக்கு ஏதாவது அடி பட்டதா? மன்னிக்கவும், நான் உன் பாதையில் வந்ததிற்கு" என்று அந்தச் சிறுமி கேட்டுக்கொண்டாள்.

அருணுக்கு அவள் அவ்வாறு கூறியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மோதியவன் அவன். தப்பும் அவனுடையது. ஆனால், அவள் மன்னிப்பு கேட்டது விசித்திரமாக இருந்தது. அருண் ஒன்றும் சொல்லத் தெரியாமல் விழித்தான்.

"நண்பா, ஏன் ஒன்றுமே பேசாமல் இருக்கிறாய்? நான் ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா?" என்று மீண்டும் கேட்டாள் அவள்.

"தப்பு என்மேல்தான். நான்தான்..."

அருண் முடிக்குமுன் அவள், "என் பெயர், ஹேலோ ஆன் ஹில். சுருக்கமாக, ஹிலரி ஹில். என்னை ஹிலரி என்றே கூப்பிடு நண்பா" என்றாள்.

"என் பெயர் அருண். நான்..." முடிக்குமுன், "அச்சூ" என்று தும்மினான். அவ்வளவுதான். அருணின் முகத்தில் பீதி பற்றிக்கொண்டது. தனது தும்மல் கிருமிகளை ஹிலரிக்கு பரப்பிவிடுமோ என்ற பயத்தில் நடுங்கினான். தன்னால் அந்த கிராமத்திற்கே தொற்றுநோய் ஏற்படுமோ என்று வருத்தத்தில் ஆழ்ந்தான்.

"சாரி ஹிலரி, நான் தப்பு பண்ணிட்டேன். இந்த தும்மலால உங்க கிராமமே என் கிருமியால பாதிக்கப்படப் போவுது" என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.

அருண் சொன்னதைக் கேட்டு ஹிலரி கலகலவென்று சிரித்தாள். அருணின் அப்பாவித்தனம் அவளைச் சிரிப்பில் ஆழ்த்தியது.

"நண்பா, யார் சொன்னார்கள் எங்கள் கிராமத்தை பற்றி அவ்வாறு? மன்னித்துவிடு, என்னால் உன் அப்பாவித்தனத்தைப் பார்த்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை" என்றாள்.

அருண் தான் படித்தது, ஆசிரியர்கள் சொன்னது எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான்.

ஹிலரி சிரித்துக்கொண்டே, "நண்பா, எங்கள் கிராம மக்கள்போல வலுவானவர்கள் யாருமே கிடையாது. எங்களைப்பற்றி உங்கள் மக்கள் தப்பாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால், எங்களை எந்தக் கிருமியும் எதுவும் செய்யாது. அந்த அளவுக்கு நாங்கள் பலசாலிகள். வா நண்பா, எங்களின் அற்புதங்களை உனக்கு காட்டுகிறேன்" என்று அழைத்தாள்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com