அவர் அலுவலக வேலையை முடித்துவிட்டுச் சாலையில் இறங்குகிறார். திடீரெனக் காலடியில் ஒருவர் வந்து விழுகிறார் . முகமெல்லாம் ரத்தம். கண்முன்னால் நடந்த விபத்தைப் பார்த்துப் பதறித் துடிக்கிறார் அந்தப் பெண். அருகிலிருந்த பூக்காரப் பெண்ணிடம் இருந்த துணியை வாங்கி, அந்த நபருக்குக் கட்டுப்போட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைகிறார். அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த நபர் பிழைத்துக் கொள்கிறார்.
சில மாதங்களுக்குப் பின், அடிபட்டுப் பிழைத்த அந்த நபர் இவரைத் தேடி வருகிறார். கையில் ஒரு பத்திரிகை. அது அவரது திருமண அழைப்பிதழ். "எனக்கு உயிர் கொடுத்தது பெத்த அம்மான்னா... மறுபடியும் வாழ உயிர்கொடுத்தது நீங்கதான்" என்று சொல்லி வணங்குகிறார். அந்தத் தருணம் இவரது வாழ்வில் முக்கியத் தருணமாகிறது. இவரை சமூகசேவையை நோக்கித் திரும்ப வைக்கிறது.
அதன்பின் எண்ணற்ற சேவைகள், ஏகப்பட்ட பயணங்கள். இந்தச் சேவைகளுக்குச் சூட்டப்பட்ட மகுடம்தான், சாதனைப் பெண்கள் நூற்றுவரில் சிறந்த சமூக சேவையாளராக, பெண்கள் நலம் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இவரைத் தேர்ந்தெடுத்தது. அவர் தமிழ்ச்செல்வி நிக்கோலஸ். சென்னை BSNL அலுவலகத்தின் கிளை ஒன்றில் பணியாற்றிவரும் இவருக்குச் சமூகசேவைதான் மூச்சு.
"என் தந்தை பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர். பலருக்கு உதவியிருக்கிறார். அவையே எனது சேவை மனப்பான்மைக்கு உந்துசக்தி" என்கிறார். தனது ஆசிரியர்களே இன்றைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் வித்திட்டவர்கள் என்கிறார். ஓவியம் வரையத் தெரியும். கதை, கவிதைகள் எழுதுகிறார்.
'பொதுவாழ்வில் பெண்கள்' (women in public life) என்கிற தலைப்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம், நாடு முழுவதிலும் இருந்து பல துறைகளைச் சேர்ந்த பெண்களில் 100 பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுள் தமிழ்ச்செல்வி ஒருவர். "யாருக்காவது உதவி தேவை எனத் தெரியவந்தால், உண்மைதானா என்று முதலில் உறுதி செய்துகொள்வேன். அவர்களுக்கு உதவ யாரேனும் முன்வந்தால், நேரடியாக தேவைப்படுவரையும், கொடுக்க விரும்புவரையும் தொடர்புகொள்ளச் செய்வேன். இத்தகைய உதவிகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் அது மற்றவர்களுக்கும் உதவத் தூண்டுகோலாக இருக்கும் என்பதால் அவற்றைப் பகிர்வது வழக்கம்" என்று விவரிக்கிறார் தனது செயல்முறையை.
நண்பர்களுடன் இணைந்து இவர் தொடங்கியுள்ள 'நேச விழுதுகள்' மூலம் கல்லூரியில் படிக்கும் இவரது மகள் மற்றும் அவரது நண்பர்களைக் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வுக் கருத்தரங்களை நடத்தி வருகிறார். சுற்றுச்சூழலிலும் ஆர்வம் மிக்கவர். 3000த்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை 'நேசக்கரம்' சார்பாக இலவசமாக வழங்கியுள்ளார். இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் உண்டு. தனது ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் தனது கணவர் துணை நிற்கிறார் என்கிறார் பெருமையுடன்.
தமிழ்ச்செல்வி மனநல ஆலோசகரும் கூட. தற்கொலை எண்ணம் கொண்ட பலரின் மனங்களை மாற்றியிருக்கிறார். தமிழ்மீது பற்றுக்கொண்ட தமிழ்ச்செல்வி தனது புதுமொழிகள் அடங்கிய புத்தகத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்.
ஸ்ரீவித்யா ரமணன் |