டல்லாஸில் நடந்த தமிழர் திருநாள் விழாவில், சிம்·பொனியில் திருவாசகம் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, சாதனையாளர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழ் இலக்கிய உலகிற்கு அருமையான படைப்பொன்றை அரிதின் முயன்று அளித்துள்ள திருநெல்வேலி வை. ஆறுமுகம் பிள்ளை என்ற 87 வயதே ஆன இளைஞர் அவர். ஆம்! அவரது உழைப்பைப் பார்க்கும் போது அப்படித்தான் அவரை அழைக்க வேண்டும்.
சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாவது திருமுறையான மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தை ஆறுமுகம் அவர்கள் தலைமையில் இயங்கிய ஆசிரியர் குழு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பதுடன் ரோமன் எழுத்துகளில் குறி பெயர்ப்பும் செய்து, மேலும் அவற்றிற்கு அரும்பத உரையும், ஆராய்ச்சிக் குறிப்பு களும் தந்து இரண்டு தொகுதிகளாக (1300 பக்கங்கள்) வெளியிட்டுள்ளது. இந்தப் பணியைத் தனது 82வது வயதில் தொடங்கிய இவர், மதுரை நெசவு ஆலையில் மேலாளராக 37 ஆண்டுகள் பணியாற்றி 1974 இல் ஓய்வு பெற்றவர். இவர் தொழிலுக்கும் தமிழிலக்கியத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. மரகுருபரரின் பரம்பரையின் உறவுகாரரான இவருக்குப் படிப்பால் தமிழ்ப் புலமையும், தொழிலால் ஆங்கிலப் புலமையும் கிடைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவரின் சமயத் தொண்டைப் பாராட்டி 1962-ல் தருமபுர ஆதீனம் "செந்தமிழ்ச் சிவநெறிச்செல்வர்" என்ற பட்டம் அளித்து கெளரவித்தது. சைவ சமய தீட்சையும் பெற்றிருக்கிறார்.
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இவர், ஹ¥ஸ்டன் மீனாட்சி கோவிலில் அதிகாரியாகவும், சில வாரங்கள் பூசாரியாகவும் பணியாற்றியிருக்கிறார். சிகாகோ பாலாஜி கோவிலிலும் அதிகாரியாகப் பணிபுரிந்திருக்கிறார். இந்த இரண்டு கோயில்களிலும், சனி ஞாயிறுகளில் சமய வகுப்புகள் நடத்தி வந்தார். அப்படி வகுப்பு எடுக்கும் போது தான், இங்கு வாழும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்கள் பெற்றோர்களுக்கும் தம் சமயத்தைப் பற்றி தெரியவில்லை என்பதை அறிந்தார். அவர்களுக்குத் தம் சமயம் பற்றித் தெரிய வேண்டும் என்று சிந்தித்த போது தோன்றியதுதான், சைவத் திருமுறைகளுக்குள் பொதிந்திருக்கும் சமயச் சிந்தனை களைக் கற்பிக்க திருவாசகத்தை மொழி பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம்.
இந்த முயற்சிக்குப் பெரிதும் உதவியவர்களில் அமெரிக்கத் தமிழர்களும் மிக முக்கியமானவர்கள். ஹ¥ஸ்டன் மீனாட்சி கோயிலும், ஹ¥ஸ்டன் பாரதி கலை மன்றமும், பேராதரவு அளித்துள்ளன. 2004ல் தருமபுர ஆதீன மகாசந்நிதானம் தலைமையில் தில்லையில் நடராசப் பெருமாள் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் இவரது திருவாசகத் தொகுதிகள் இரண்டும் வெளியிடப்பட்டன. மாணிக்கவாசகரின் திருவாசகத்தைச் சிவபெருமானே கேட்டெழுதிய இடம் என்று மரபுவழிச் செய்திகள் கொண்டாடும் அதே மண்டபத்தில் தனது மொழிபெயர்ப்பு நூலும் அரங்கேறியது என்று சொல்லிப் பூரிக்கிறார் இந்தப் பெரியவர். இவரது உழைப்பினைப் பாராட்டிய மகா சந்நிதானம் மேலும் 11 திருமுறைகளையும் இதே போன்று மொழிபெயர்க்குமாறு கட்டளையிட்டுள்ளார். தனது 87வது வயதில் இந்த இமாலய முயற்சி முடியுமா என்று தயங்கினாலும், இறைவனின் திருச்சித்தம் எவ்வாறோ அவ்வாறே பணி செய்வோம் என்று தேவாரத்தை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேற்கொண்டு விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி apparva@yahoo.com. ஆறுமுகம் அவர்களின் அயரா உழைப்பில் மற்ற பதினோரு திருமுறைகளும் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவில் வெளிவர வாழ்த்துவோம்.
டாக்டர் அலர்மேலு ரிஷி மணி மு. மணிவண்ணன் |