காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம்
பாரதநாட்டின் புண்ணியத் தலங்களுள் ஒன்று காஞ்சிபுரம். இங்கு அநேக ஆலயங்கள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. "நகரேஷு காஞ்சி" என்று சிறப்புப் பெற்ற தலம் இது. நகரில் எங்கு நோக்கினும் உயர்ந்த மதில்கள், கோபுரங்களைப் பார்க்கலாம். காசியிலும் விஞ்சியது என்பர். பஞ்சபூதத் தலங்களில் காஞ்சிபுரம் பிருத்வி (பூமி) க்ஷேத்திரமாகும். பிரம்மாவின் வேள்வியில் அவிர்பாகம் அடைந்து சங்கு, சக்ர கதா பாணியாக மங்கள ஸ்வரூபனாக திருமால் சேவை சாதித்த தலம் காஞ்சி. பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட தலம் என்பதால் இதற்கு 'காஞ்சி' என்று பெயர்.

இத்தலத்தில் ஏகாம்பரேஸ்வரர் ருத்ரகோடி விமானத்திலும், காமாட்சி அம்மன் காமகோடி விமானத்திலும், வரதராஜப் பெருமாள் புண்யகோடி விமானத்திலும் எழுந்தருளி உள்ளனர். இக்கோயில் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகும். கோயில் காஞ்சி மகாநகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியை விஷ்ணு காஞ்சி என்றும், சின்ன காஞ்சிபுரம் என்றும் அழைக்கின்றனர்.

தீர்த்தங்கள், அனந்தசரஸ் தீர்த்தம், வராக தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சக்ர தீர்த்தம். அனந்தசரஸ் தீர்த்தத்தில் ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் கோயில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. வராஹ தீர்த்தம் அனந்தசரஸ் குளத்தில் ஸ்ரீ வராஹர் சன்னதிக்கு எதிரில் உள்ளது. பிரம்ம தீர்த்தம் பெருமாளின் நித்ய ஆராதனைக்கு பயன்படுத்தப்படுகிறது. சக்ர தீர்த்தம், அனந்தசரஸ் குளத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரில் உள்ளது.

பெருமாளின் திருநாமங்கள், ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ தேவராஜ சுவாமி. தாயார் திருநாமம் பெருந்தேவி. திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மங்களாசாசனம் செய்துள்ளனர். மணவாள மாமுனிகள், அப்பய்ய தீக்ஷிதர், வேதாந்த தேசிகர் ஆகியோர் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர்.

பிரம்மா வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவைத் தான் கண்ட காட்சியாகக் காண்பதற்கு காஞ்சி சென்று அஸ்வமேத யாகம் செய்தார். தவம் மேற்கொண்டார். அவரது தவத்தின் பலனாக மஹாவிஷ்ணு, கிருதயுகத்தில் யுவ வருடம் சித்திரை மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில் ஞாயிறு உதய காலத்தில் கோடிசூரிய பிரகாசத்துடன் தோன்றினார். அவரைப் பலரும் கண்டு தரிசிக்கும்படி இந்திரனால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தில் புண்ணியகோடி விமானத்தின் மத்தியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்படிச் செய்தார். வெள்ளிக்கிழமை மட்டும் திருமாலுக்குத் திருமஞ்சனம் நடக்கிறது.

கோயில் இரண்டு ராஜகோபுரங்களும், சிறிய கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் கொண்டது. பொது யுகம் 1018-1054ம் வருடம் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. 96 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் நுழைந்தபின் அனந்தசரஸ் குளம், அதனருகே அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.

கோயிலினுள் அமைந்த சிறுமலையின் மீது பெருமாள் நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். திருமலை, ஸ்ரீரங்கம், காஞ்சி என மூன்று தலங்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தரிசிக்கும் பெருமை இத்தலத்திற்கு உண்டு. தாயார் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். பிருகு மகரிஷி நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தில் பங்குனி மாதத்து உத்திர நக்ஷத்திர தினத்தில் அவதரித்ததால் 'பார்கவி' எனப் போற்றப்படுகிறார். தாமரை மலர்களால் ஸ்ரீ தேவராஜனை பூஜித்து மணம் செய்துகொண்டார். வேதாந்த தேசிகர், ஓர் ஏழையின் திருமணத்திற்கு இந்தத் தாயாரை ஸ்ரீஸ்துதி செய்து தங்கமழை பெய்வித்தார். தாயார் படிதாண்டா பத்தினி என்பதால் திருவீதிப் புறப்பாடு இல்லை. வெள்ளிக்கிழமை ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் தெப்பம் விசேஷம். அதில் பெருமாளுடன் தாயாரும் எழுந்தருளுவதால் "பெருந்தேவித் தாயார் தெப்பம்" என்று இது அழைக்கப்படுகிறது.

இங்கு அனந்தசரஸ் திருக்குளத்தில் நீராழி மண்டபத்தின் தென்புறம் விமானத்துடன் கூடிய நான்குகால் மண்டபத்தில் ஸ்ரீ அத்திகிரி வரதர் எழுந்தருளியுள்ளார். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவர் திருக்குளத்தில் இருந்து வெளியே வருவார். 48 நாட்கள் பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார். அக்காலத்தில் பெருமாள் நின்ற கோலத்திலும் சயனக் கோலத்திலும் காட்சி தருவது சிறப்பு. 1979ம் வருடத்திற்குப் பின் வரும் 2019ல் இந்நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இங்கு இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளைத் தொட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இவற்றைப் பிரதிஷ்டை செய்தவர் இந்திரன். ஆலயத்தில் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், ஆண்டாள், ரங்கநாதர், வராஹர் என பலருக்கும் சன்னிதிகள் உள்ளன.

ஆண்டுக்குச் சுமார் 250 நாட்கள் இங்கே சுவாமி புறப்பாடு நடக்கிறது. வைகாசியில் பிரமோத்சவம், கருடசேவை, தேர் யாவும் பல ஆண்டுகளாகவே மிகவும் புகழ்பெற்றவையாகும். வருடத்தில் மூன்று நாள் பெருமாள் இங்கே கருட வாகனத்தில் எழுந்தருளுவது மிகவும் விசேஷம். மூன்று நாள் தெப்ப உற்சவமும் வெகு சிறப்பானதாகும்.

அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின்
துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் - மூத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்
- பூதத்தாழ்வார்


சீதாதுரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com