மயக்கும் மரகதத்தீவு! (பகுதி - 3)
இலங்கை மன்னர்களின் பழம்பெரும் தலைநகரான அநுராதபுரம் பல போர்களைப் பார்த்திருக்கிறது. அசோகச் சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரை புத்தர் ஞானமடைந்த போதிமரத்திலிருந்து ஓர் இளங்கன்றை இங்கே கொண்டு வந்து நட்டாள். அது அவள் கொண்டுவந்த புத்த மதத்தைப் போலவே செழித்துப் பரவியுள்ளது. இங்கே பல புத்தவிகாரங்களும் இருக்கின்றன.



நாங்கள் அநுராதபுரத்தை அடைந்தபோது பகல் 1:45. எங்களை அங்கே சந்திக்க வேண்டிய திரு. சந்திரன் வேறுபணியில் போக வேண்டியதாகிவிட்டது. சரி, பின்னால் அநுராதபுரத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று தீர்மானித்தோம். யாழ்ப்பாணத்தை நோக்கி வண்டியை விட்டோம். அந்தப் பகுதி தமிழர் குறைவாகவும் சிங்களவர் அதிகமாகவும் உள்ள பகுதி. அறிவிப்புப் பலகைகள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. மதவாச்சி (சிங்களத்தில் மதவாச்சியா) என்னுமிடத்தில் ஒரு சிங்களவர் ஹோட்டலில் எங்களுக்குக் கிடைத்த சைவ உணவு இனிப்பு பன்னும், தேநீரும்தான். அந்தப் பசிக்கு அதுவே அமுதமாக இருந்தது.

அச்சமயம் மறவன்புலவு சச்சிதானந்தம் எங்களுடன் பேசினார். நாங்கள் நேராக யாழ்ப்பாணம் வருவதாகக் கூறினோம். மன்னாருக்கு அருகிலிருக்கும், தேவாரத் திருத்தலமும், இலங்கையின் பழமையான ஐந்து சிவன் கோவில்களில் ஒன்றுமான திருக்கேதீஸ்வரத்திற்குச் சென்று மாலைப் பூசையைத் தரிசித்து, இரவுக்குள் மறவன்புலவிலிருக்கும் வீட்டிற்கு வருமாறு பரிந்துரைத்தார்.

"நீங்கள் இதை முன்கூட்டியே கதைச்சிருந்தா, புத்தளத்திலிருந்து நேரா மன்னார் போயிட்டிருக்கலாமே! தேவையில்லாம, உங்களுக்கு ரூவா விரயமாயிட்டுதே!" என்று வருத்தப்பட்டார் ரவி. தனது வருமானம் அதிகரிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், எனக்கு அதிகச் செலவாகிறதே என்றுதான் அவருக்குத் துயரமாக இருந்தது! மன்னாரை நோக்கி வண்டியைச் செலுத்தினோம். பத்து மைல் சென்றதும் மீண்டும் தமிழ் அறிவிப்புப் பலகைகளைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

இலங்கையிலிருந்து ஒரு விரல்போல இராமேஸ்வரம் தீவைநோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறது மன்னார் தீவு. அதன் மேற்கு நுனியிலிருக்கும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கும், பின்னர் ராமேஸ்வரத்திற்கும் கப்பல் போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது. இலங்கையில் உள்நாட்டுப்போர் துவங்கியபின் நின்றுபோனது.



திருக்கேதீஸ்வரம் இலங்கை நிலப்பரப்பினுள் இருந்தாலும், இலங்கையையும், மன்னாரையும் இணைக்கும் சாலையில் சென்றால் இயற்கைக் காட்சி உள்ளத்தை அள்ளும் என்று ரவி கூறவே, நேராக மன்னார் சென்றோம். இருபக்கமும் கடல்; நடுவில் சாலை! இந்தியாவிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பாம்பன் பாலம்போல் இல்லாமல் நீருக்குச் சிறிது மேலாகவே கிட்டத்தட்ட ஒன்றரை மைல் தூரம் கடல்வழிச் சாலை அமைந்துள்ளது.

சாலையின் இருமருங்கும் அடர்நீலத்தில் கடல் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. நடுத்தூரம் வந்தால், முன்னும் பின்னும் நிலம் தெரிகிறது. சுற்றிலும் கடல் சூழ்ந்துள்ளதால், படகில் செல்வது போன்ற உணர்வு. சாலையில் ஓரிரு வண்டிகளைத்தான் பார்க்க முடிந்தது. கடல்நாரைகள் ஆழமற்ற பகுதியில் மீன்களுக்காக மோனத்தவம் செய்துகொண்டிருந்தன. மீன்கள் தென்படுகின்றனவா என்று சில நீர்ப்பறவைகள் தாழ வட்டமிட்டன. மன்னாரின் கட்டிடங்களும், கிறித்தவ தேவாலயம் ஒன்றும் கண்ணில் பட்டன. வண்டியிலிருந்து இறங்காகலேயே மன்னாரைச் சுற்றிவிட்டுத் திரும்பவும் கடல்வழிச் சாலையில் திருக்கேதீஸ்வரத்தை அடைந்தோம்.

திருக்கேதீஸ்வரம்
திருக்கேதீஸ்வரம் கோவில் உட்பட இலங்கையின் புகழ்பெற்ற ஐந்து சிவன் கோவில்களும் போர்ச்சுகீசியர்களால் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டவையே. அங்கே மீண்டும் கோவில்கள் கட்டப்பட்டன. யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் 19ம் நூற்றாண்டில் திருக்கேதீஸ்வரம் கோவிலை எழுப்பும் முயற்சியைத் துவங்கினார். இப்பொழுது இந்திய அரசு திருக்கேதீஸ்வரம் கோவிலைப் புதுப்பிக்க நிதியுதவி வழங்கியுள்ளது. நாங்கள் சென்றபோது சன்னிதிக் கதவு சாத்தப்பட்டிருந்தது. இடைவெளி வழியே ஒரு சிறிய எண்ணெய் விளக்கு எரிவது தெரிந்தது. உற்றுப் பார்த்தால் லிங்கத்தைச் சுற்றி வெள்ளைத்துணி கட்டியிருப்பதும் தெரிந்தது.

பிரகாரத்தைச் சுற்றி இடிந்த சன்னிதிகளில் இருந்த கடவுளர் திருவுருவங்களை, கோவிலுக்கு வெளியே பாலாலயம் கட்டி, அங்கு வைத்திருக்கிறார்கள். முன்பிரகாரத்தில் வேலைப்பாடுள்ள கல்தூண்களும், மேல்தளமும் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. உட்பிரகாரத்தில் மகாலிங்கம் என்ற பெரிய சிவலிங்கம் காணப்பட்டது. இச்சிவலிங்கம் மிகவும் பழமையானது. நந்தவனத்திலிருந்த வில்வமரத்திலிருந்து வில்வ இலைகளைப் பறித்து அச்சிவலிங்கத்திற்குச் சாத்தித் தேவாரம் ஓதி வழிபட்டேன். நாதஸ்வர இசையுடனும், தவில் முழக்கத்துடனும், மாலை பூசை நடந்தது. எங்களையும் சேர்த்துப் பத்துப் பதினைந்து பக்தர்களே அங்கு இருந்தனர்.



மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் நண்பர், எண்பது வயதைத் தாண்டிய புலவர் திருநாவுக்கரசு ஐயா அவர்களைச் சந்தித்தேன். அமெரிக்காவிலிருக்கும் ஆலயங்களைப்பற்றி ஆவலுடன் கேட்டறிந்தார் அவர். அங்கிருந்த சிவாச்சாரியாரும், நாதஸ்வர வித்வானும் நாங்கள் அங்கு வந்திருப்பதைக் கண்டும், தமிழில் பேசுவதைக்கண்டும் மகிழ்ந்தனர்.

இலங்கையிலுள்ள பெரும்பாலான கோவில்களுக்குள் செல்லும்போது சட்டையைக் கழட்டிவிட்டுத்தான் செல்லவேண்டியுள்ளது. அதை ஒரு இடைஞ்சலாக அங்குள்ளவர்கள் எண்ணுவதேயில்லை. பிரிய மனமில்லாமல் திருக்கேதீஸ்வரத்தை விட்டுக் கிளம்பினோம்.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தை அடைய இரண்டு மைல் தொலைவு கடற்சாலையில் பயணிக்கவேண்டும். இரவாகிவிட்டதால் அதன் அழகை எங்களால் ரசிக்க இயலவில்லை.

சாவகச்சேரி சாலை பிரியுமிடத்தில் நின்ற எங்களை மறவன்புலவு சச்சிதானந்தம் எதிர்கொண்டு வரவேற்று மறவன்புலவிலுள்ள தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ரவி கொக்குவில்லில் உள்ள தனது தமக்கையைச் சந்தித்து மறுநாள் காலை வருவதாகச் சொல்லி விடைபெற்றார். இரவு மறவன்புலவு அவர்கள் எங்களுக்காகச் சமைத்த உணவை உண்டு, அவர் வீட்டிலேயே தங்கினோம்.

(தொடரும்)

ஒரு அரிசோனன்

© TamilOnline.com