அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 2)
ஸ்ரீ வைகுண்டர் அவதாரம்
ஒருநாள். கொடிமரத்தருகே அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த அய்யா, திடீரென ஏதோ ஓர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர் போல கடலை நோக்கிச் சென்றார். அவர் நீராடச் செல்கிறார் எனச் சிலர் நினைத்தனர். அவர் கடலுக்கு அருகே அமர்ந்து தவம் செய்யச் செல்கிறார் எனச் சிலர் நினைத்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தண்ணீருக்குள் இறங்கிய அய்யா, மற்றவர்கள் ஓடிவந்து தடுக்குமுன் தண்ணீருக்குள் மூழ்கி மறைந்தார்.

பதைபதைத்துப் போயினர் அவருடன் வந்தவர்கள். சிலர் கடலுக்குள் இறங்கித் தேடிப் பார்த்தனர். பலனில்லை. நீருள் மறைந்தவர் மறைந்தவர்தான். வெளியே வரவில்லை.

சிலர் அவர் இறந்து விட்டிருப்பார் என்றனர். சிலர் அவரைச் சுறாமீன் இழுத்துச் சென்றிருக்கும் என்றனர். சிலரோ அவர் கடலின் நடுவே ஆழத்தில் சென்று மாட்டியிருப்பார். திரும்ப வருவது கடினம் என்றனர். இப்படிப் பலரும் பலவிதமாகக் கூறிக் கொண்டிருக்கையில், அய்யாவின் தாய் வெயிலாள் மட்டும், தன் மகன் கண்டிப்பாய்த் திரும்ப வருவான் என்று நம்பிக்கையுடன் சொன்னார். கனவில் கடவுளால் வந்த உத்தரவு என்பதால் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்.

இப்படியே இரண்டு நாளாயிற்று. போனவர் போனவர்தான். திரும்பி வரவே இல்லை.

மூன்றாவது நாள். அதிகாலை நேரம். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். திடீரெனக் கடலின் நடுவிலிருந்து தோன்றி மேலே வந்தார் அய்யா. அதைப் பார்த்து அங்கு நீராடிக் கொண்டிருந்த கூட்டம் திகைத்துப் போனது. தாய் வெயிலாளுக்குத் துணையாக அங்கேயே அமர்ந்திருந்த உறவினர்கள் ஆச்சரியப்பட்டனர். "எப்படி உயிரோடு திரும்ப வருகிறார் இவர், அதுவும் இவ்வளவு நாட்கள் கழித்து? இதுவரை எங்கே இருந்தார்? என்ன செய்தார்? எப்படிச் சாத்தியம்? இது கனவா நனவா?" என்று குழம்பினர். தங்களுக்குள் வியந்து பேசிக் கொண்டனர்.

தாய் வெயிலாள் அய்யா முன்பு ஓடிவந்து அவரை வரவேற்றாள். "எங்கு போனாயப்பா?" என்று அன்புடன் விசாரித்தாள்.

"வைகுண்டத்திலிருந்து வருகிறேன்!" என்று மட்டும் பதிலளித்தார் அய்யா. வேறேதும் பேசவில்லை. அதுவரை இல்லாத பொலிவும் ஒளியும் சாந்தமும் அவர் முகத்தில் கூடியிருந்தன. கண்கள் சுடர்விட்டன.

அன்பர்கள் அவர் காலில் விழுந்து வணங்க முற்பட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய அய்யா, "அன்பர்களே, நாம் அனைவரும் சகோதரர்கள். நம்மில் உயர்வு தாழ்வில்லை. மக்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து, புவியில் தர்மயுகத்தை நிறுவ, அந்த ஸ்ரீமன் நாராயணனின் அருள் பெற்றே நான் வைகுண்டத்திலிருந்து வந்திருக்கிறேன்!" என்று தெரிவித்தார். பின் அனைவருடனும் புறப்பட்டுத் தமது இருப்பிடமான பூவண்டர் தோப்பு என்னும் சாமித்தோப்பை அடைந்தவர் அங்கே தவ வாழ்வைத் தொடர்ந்தார்.

அரசரின் சினம்
செந்தூர் பதியில் அய்யா செய்த அற்புதமும், "வைகுண்டத்திலிருந்து வருகிறேன்" என்று அவரளித்த பதிலும் திக்கெட்டும் பரவியது. மக்கள், "அய்யா வைகுண்டர்" என்று அன்புடன் போற்றித் திரளாக வந்து தரிசித்துச் செல்ல ஆரம்பித்தனர். உயர்குடியினரில் சிலருக்கு இதனைப் பொறுக்க முடியவில்லை. அவர்கள் அய்யா வைகுண்டரை, ஒரு புரட்சிக்காரராகவும், தீவிரவாதியாகவும், தேசத்துரோகியாகவும் சித்திரித்து திருவிதாங்கூர் மன்னரிடம் புகார் செய்தனர். மன்னரும் தீர விசாரிக்காமல் அவரைக் கைது செய்யக் காவலர்களுக்கு ஆணையிட்டார்.

காவலர்கள் சாமித்தோப்பு சென்றனர். அங்கே அய்யாவைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் அய்யாவின் குடிசையை இடித்துத் தரைமட்டமாக்கினர். அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தினர். அவரது சீடர்களைத் துன்புறுத்தினர். பின் நிகழ்வுகளைத் தெரியப்படுத்த மன்னரை நாடிச் சென்றனர்.

நடந்தவற்றை அறிந்த அய்யா சீடர்கள்முன் தோன்றினார். அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறியவர், தன்னைக் கைது செய்ய அமைச்சரும், படைவீரர்களும் வரப்போவதைத் தெரிவித்து, அனைவரும் பொறுமையாக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். அவர்களும் அமைதியாகினர்.

அமைச்சர் திரளான காவலர்களுடன் அங்கே வந்தார். வைகுண்டர் மீது பல்வேறு குற்றங்களைச் சாட்டினார். அய்யா பதில் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். சினமுற்ற அமைச்சர் அய்யாவைச் சிறையில் அடைக்குமாறு ஆணையிட்டார். மக்கள் எதிர்த்தனர். கொந்தளித்தனர். ஆனால் அய்யாவோ அமைதி காக்க ஆணையிட்டார். காவலர்கள் அவரைக் கைது செய்து, திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். சிங்காரத்தோப்பு என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைத்தனர்.

சிறையில் அற்புதங்கள்
சிறைச்சாலையில் யாருடனும் பேசாது தியானத்தில் ஆழ்ந்தார் அய்யா. தன்னை வருத்திய காவலர்கள் வெறும் கருவிகள்தாம் என்பதால் அவர்களைக் கடியவில்லை. அவர்களது வாழ்க்கைப் பிரச்னைகளைத் தவயோகத்தால் தீர்த்து வைத்தார். நோய்களைக் குணமாக்கினார். அதனால் காவலர்களும் வைகுண்டர் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் செலுத்த ஆரம்பித்தனர். இது மன்னருக்குத் தெரியவந்தது. அவர் புதிய காவலர்களை நியமித்தார். அய்யா வைகுண்டரைச் சித்ரவதை செய்ய உத்தரவிட்டார். அவர்கள் அய்யாவை அடித்துத் துவைத்தனர்.

அய்யா வைகுண்டரோ எதுவுமே நடக்காதது போல அமைதி காத்தார். இவரிடம் ஏதோ மந்திரசக்தி இருக்கிறது போலும், இவரைத் துன்புறுத்துவது பாவம் என்ற முடிவிற்கு வந்த காவலர்கள், செய்தியை மன்னருக்குத் தெரிவித்தனர். ஆனால், மன்னர் ஏற்கவில்லை. "மந்திரமாவது சக்தியாவது.. எல்லாம் பித்தலாட்டம். இந்த வைகுண்டருக்குப் பாலில் விஷத்தைக் கலந்து கொடுங்கள். அவர் சாகாமல் தப்பிக்கிறாரா என்று பார்க்கலாம்!" என்று கொக்கரித்தார்.

காவலர்கள் பாலில் விஷத்தைக் கலந்து அய்யாவிடம் அளித்து, அருந்துமாறு வற்புறுத்தினர். அப்போது உண்ணாநோன்பு இருந்ததால் அய்யா அதனை ஏற்க மறுத்தார். காவலர்கள் தொடர்ந்து வலியுறுத்தவே வேறு வழியின்றிப் பாலைக் அருந்தினார். அவருக்கு ஏதும் ஆகவில்லை. அதனை அறிந்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். செய்தி மன்னரை எட்டியது. அவர் நம்பவில்லை. விறகுக் கட்டைகளை அடுக்கி, காய்ந்த மிளகாய் வற்றலைக் கொட்டி, அவர் இருந்த அறைக்குத் தீ வைக்குமாறு ஆணையிட்டார். அதன்படி அவர் இருந்த அறையைச் சுற்றிலும் காய்ந்த விறகுக் கட்டைகள் அடுக்கப்பட்டு, வறமிளகாய் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டது. அந்த நெருப்பு சுவாமிகளை ஒன்றுமே செய்யவில்லை. அவர் எப்பொழுதும்போலப் புத்துணர்ச்சியுடன் அமர்ந்திருந்தார். பின் மன்னரின் ஆணைப்படி நீற்றறையில் இட்டனர் காவலர்கள். அதுவும் அவரை ஒன்றும் செய்யவில்லை.

இந்நிகழ்வுகளை, அய்யா வைகுண்ட சுவாமிகள், தமது அருள்நூலில்,

அரங்கதனை அடைத்து
வத்தல் போட்டுத் தீ வைத்தும்
அசையாமல் இருந்தேன்
சிவனே ஐயா!"


என்று குறிப்பிட்டுள்ளதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு நடந்தும் மன்னர் மனம் மாறவில்லை. அடுத்து, பலநாள் பட்டினி போடப்பட்ட காட்டுப்புலியை அய்யா வைகுண்டர் மீது ஏவக் கட்டளையிட்டார். குறிப்பிட்ட நாளில், மக்கள் முன்னிலையில் பொது மைதானத்தில் அய்யா வைகுண்டரின் மீது பசித்த காட்டுப்புலியை ஏவச் சொன்னார் மன்னர். புலிக்கூண்டு மைதானத்திற்கு வந்தது. கூண்டு திறக்கப்பட்டது. சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த அய்யா வைகுண்டர்மீது சீறிப்பாய்ந்தது புலி. ஆனால் அவரருகே நெருங்கியதும் பின்வாங்கியது. அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவர் காலருகே படுத்துக்கொண்டு விட்டது. காவலர்கள் பலமுறை ஈட்டிகொண்டு அதனைக் குத்தியும் பலனில்லை. காவலர்களுக்குத்தான் உயிர்ச்சேதம் உண்டானதே தவிர, புலி அய்யாவைத் தொடவில்லை.

நிகழ்ச்சியை நேரடியாகக் கண்ட மன்னர் அதிர்ந்தார். திகைத்தார். அய்யா வைகுண்டரின் பெருமையை உணர்ந்தார். உடனே அவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். அய்யாவும் தனக்கு இன்னா செய்த அந்த மன்னர்மீது பகைமை பாராட்டாமல் அங்கிருந்து, அடியவர்களுடன் தனது இருப்பிடம் திரும்பித் தவ வாழ்வைத் தொடர்ந்தார்.

அய்யா வழி
தன்னை நாடிவந்த பக்தர்களுக்கு பல்வேறு உண்மைகளைப் போதித்து அவர்களை நல்வழிப்படுத்தினார் அய்யா. சுவாமிகள், திருநீற்றை நெற்றியில் நாமம்போல் அணியச் சீடர்கள், பக்தர்கள் அனைவருக்கும் ஆணையிட்டார். "கடவுள் படைப்பில் அனைவரும் ஒன்றானவரே! எந்த மனிதனும் மற்றவனைவிட உயர்ந்தவனில்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது செருக்கால் ஒருவருக்கு ஒருவர் கற்பித்துக் கொண்டதே!" என்று வலியுறுத்திய அய்யா வைகுண்டர், தம்மைப் பின்பற்றுவோருக்கான புதிய வழிபாட்டு முறைகளை உருவாக்கினார். அது "அய்யா வழி" என்று அன்பர்களால் போற்றிப் புகழப்படுகின்றது. அய்யாவழி மக்களின் ஞானநூலாக 'அகிலத்திரட்டு அம்மானை' கருதப்படுகிறது. 'அருள்நூல்' என்பதும் முக்கியமான நூலாகப் போற்றப்படுகிறது. அந்நூல்களில் வழிபாட்டு முறைகளையும், வழிபாட்டின்போது பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்களையும், எதிர்கால நிகழ்வுகள் பலவற்றையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் அய்யா.

அய்யா வழிபாட்டு முறை
அய்யா வழிபாட்டு முறை மிகவும் புதுமையானது. ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாகப் பாவித்து, நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடியை வைத்து, நாற்காலியின் மேல் தாமரை மலரை வைத்து, அதன்மேல் விளக்கேற்றி வைத்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும் என்பது அதில் முக்கியமான ஒன்று. முக்கியமாக நெற்றியில் நாமம் அணிந்திருக்க வேண்டும். மற்றும் மார்பிலும், தோளிலும் நாமம் அணிந்திருக்க வேண்டும். தலையில் தலைப்பாகை கட்டி இருக்கவேண்டும். கண்ணாடிமுன் இருக்கும் தன் உருவத்தை வணங்குவது என்பது, தன்னுள் இறைவன் இருக்கிறான் என்பதை அனைவரும் உணரவே!

"வழிபாட்டில் தூய்மை அவசியம். எளிமையாக வழிபாடு நடத்தப்பட வேண்டும். மாமிச உணவுகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அனைவருடனும் அன்புடனும், சகோதரத்துவத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். அனைவரும் தமக்குச் சமமே. தமக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று யாரும் இல்லை. கூட்டுப் பிரார்த்தனை மிகச்சிறந்த ஒன்று. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். தாம் நாராயணரின் அம்சம், ஆகவே தம்மை அனைவரும் 'அய்யா' என்றே அழைக்க வேண்டும்" என்றெல்லாம் அய்யா தனது வழிபாட்டுக் கோட்பாடுகளைக் குறிப்பிட்டுள்ளார். அய்யாவின் பக்தர்கள் அனைவரும் அதனை இன்றுவரை தவறாமல் பின்பற்றி வருகின்றனர் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

"துவையல் பந்தி" என்பது அய்யாவின் ஆணைப்படி அவர் வகுத்துத் தந்த கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் ஒன்றாகச் சேர்ந்த அமைப்பு. அவர்கள் தமக்குள் ஒன்று சேர்ந்து, மூன்றுவேளை குளித்து, நனைந்த ஆடைகளையே அணிந்து, தமக்கான உணவைத் தாங்களே ஒன்று சேர்ந்து தயார்செய்ய வேண்டும். பின்னர் உண்ண வேண்டும். இத் துவையல் பந்தியை அய்யா அவர்களே 'வாகைப்பதி' என்னும் இடத்தில் நடத்தினார். பின் 'தாமரைப்பதி', 'முட்டப்பதி' எனப் பல இடங்களிலும் தங்கி, தம்மை நாடி வந்தவர்களுக்குப் பல்வேறு உண்மைகளைப் போதித்தார். நல்வழிப்படுத்தினார்.

அய்யா வைகுண்டரின் அறிவுரைகள்
தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்
எளியோரைக் கண்டு இரங்கியிரு மகனே
இரப்போர் முகம் பார்த்து ஈவது நன்றாகும்
வரம்பு தப்பாதே, வழி தவறி நில்லாதே
நன்றி மறவாதே, நான் பெரிதென்று எண்ணாதே
கோபமாய் விள்ளாதே குவியச் சிரிக்காதே
கொல்லென்ற பேச்சு கூற நினையாதே
சத்துருவோடும் சாந்தமுடனே இரு
கோபத்தைக் காட்டாதே கோளோடு இணங்காதே

என்றெல்லாம் பலவாறாக அய்யா வைகுண்ட சுவாமிகள் கூறியிருக்கும் அறிவுரைகள் முக்கியமானவை. மக்கள் எல்லாரும் பின்பற்றத்தக்கவை.

மகாசமாதி
இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய அய்யா வைகுண்ட சுவாமிகள், 1851 ஜூன் 9 அன்று மகாசமாதி அடைந்தார். அய்யா, 'அம்பலப்பதி'யில் சமாதி அடைந்ததாகவும், பின்னர் சாமித்தோப்பில் அவரது உடல் சமாதி செய்விக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

சமாதி அமைவிடம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள கிராமம் சாமித்தோப்பு. அது அக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டதாக இருந்தது. சுசீந்திரம் நகருக்கு அருகிலுள்ள தாமரைக்குளத்திற்கு மிக அருகில் சாமித்தோப்பு அமைந்துள்ளது. தோப்பினருகே உள்ள முத்திரிக் கிணற்றுத் தீர்த்தம் புனிதமான ஒன்றாகும். அதில் குளித்து நீராடிவிட்டே வழிபாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது அய்யாவின் கட்டளை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ் மலையில் அய்யா வைகுண்டரின் ஆசிரமம் உள்ளது. இன்றும் அங்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனை நடந்து வருகிறது. அய்யா வழியில் 'நிழல் தாங்கல்கள்' என்பவை ஆதரவற்றோருக்கும், ஏழைகளுக்கும், இன்ன பிற நோயாளிகளுக்கும் ஆதரவளிக்கும் இல்லமாகச் செயல்பட்டு வருகின்றன. அய்யாவின் பிறந்தநாள், அவர் வைகுண்டராய் அவதரித்த நாள் போன்றவை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

"அய்யா! அர கர சிவ சிவ அர கர சிவ சிவ அர கர சிவ சிவா"

என்பதும்

"சிவசிவா ஆதி குரு சிவசிவா"

என்பதும் அய்யா வலியுறுத்திய திருமந்திரங்களாகும். இவற்றையும் இன்னும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பை போன்ற பல பாடல்களையும், வழிபாட்டின் போது பாராயணம் செய்கின்றனர் அன்பர்கள்.

அன்பையும், மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் அனைவருக்கும் உணர்த்தி, எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற சித்தாந்தத்தை வலியுறுத்தி, தனியாகப் 'புதுயுகம்' படைத்த மகான் அய்யா வைகுண்டர்.

(முற்றும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com