அந்த அரங்கில் பெரும் கூட்டம். பார்வையாளர்கள் பலரும் இளம் வயதினர். அவ்வப்போது உற்சாகக் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். மேடைக்கு மெள்ள நடந்து வருகிறார் அவர். பார்வையாளர்களை வணங்குகிறார். அறிவிப்பாளர் அவரைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அப்படியே உடலை வில்லாய் வளைத்துக் குனிந்து இரு கைகளாலும் தரையைத் தொடுகிறார். இடுப்பு வரை மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. உடனே சபையில் உற்சாகக் கூச்சல் எழுகிறது. அவர் செய்தது பாத ஹஸ்தாசனம் என்கிறார் அறிவிப்பாளர். தனக்கான பாராட்டைச் சட்டை செய்யாமல் சட்டென்று விரிப்பில் அமர்கிறார். இரு கால்களையும் நேராக நீட்டுகிறார். அப்படியே உடலை வில்லாய் வளைத்து தலையைத் தன் கால்களில் புதைத்துக் கொள்கிறார். இது பச்சிமோத்தாசனம். அடுத்து விரிப்பில் நேராகப் படுத்தவர், கால்களை உயரே தூக்கி, மெள்ள மெள்ள முன்னால் கொண்டு வந்து... தலைக்கு முன்பாகக் கால்களைத் தொங்கவிட்டுத் தரையைத் தொடுகிறார். தலையும், தோளும் மட்டும் தரையில் பதிந்திருக்க முதுகு முற்றிலுமாக முன்னால் வளைந்திருக்கிறது. பார்வையாளர்களின் கரவொலியும் விசில் சப்தமும் காதைக் கிழிக்கிறது. 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என்ற பழமொழியும் ஞாபகத்திற்கு வருகிறது. இதற்குப் பெயர் ஹாலாசனம் என்கிறார் அறிவிப்பாளர். அதோடு நிற்கவில்லை, அடுத்து தலைகீழாக நின்று பாதங்களை வளைத்து தரையில் பதிக்கிறார். இதற்குப் பெயர் அர்த்த சிரசாசனம். அவையே சிலிர்க்கிறது, வியக்கிறது. தொடர்ந்து பல ஆசனங்களைச் செய்து அசர அடிக்கிறார் அவர்.
இத்தனையும் செய்தவர் சிறுவரோ, இளைஞரோ அல்ல. ஒரு பாட்டி. ஆம். உங்களுக்கும் எனக்கும்கூட அவர் பாட்டிதான். அவருடைய வயது... அதிகமில்லை ஜென்டில்மென்... ஜஸ்ட் 98 தான். என்ன ஆச்சரியத்தில் வாயைப் பிளக்கிறீர்களா? பாட்டியைப் பற்றி அறிந்தால் வாயை மூடவே மறந்து விடுவீர்கள். முப்பது வயதில் மூட்டுவலி; நாற்பது வயதில் நீரிழிவு; ஐம்பதில் ஹார்ட் பிராப்ளம் என்று அலைந்து திரிவோருக்கு மத்தியில், இந்த 98 வயதிலும் ஒருநாள்கூட உடல்நலக் குறைவு என்று மருத்துவமனைக்குப் போகாத யோகா பாட்டியின் வாழ்க்கை உண்மையிலேயே வியப்பிற்குரியதுதான்.
இவர் பெயர் நானம்மாள். பிறந்தது பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில். 1920ல் பிறந்த இவர், மூன்று வயதிலிருந்தே ஆசனங்களைச் செய்து வருகிறார். பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தாத்தா மன்னார்சாமி வேலைகளை எல்லாம் முடித்து விட்டு யோகா செய்வாராம். சிறு வயது முதலே அதனைப் பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொண்டவர், வயதானதும் முழுக்க முழுக்க தாத்தாவிடமே சீடராகி யோகக்கலையைக் கற்றுத் தேர்ந்தார். கணவராக அமைந்தவரும் சித்த வைத்தியர். தமிழ்ப் பாரம்பரியத்தை முழுமையாக அறிந்தவர். அதனால் நானம்மாளின் யோக முயற்சிகளுக்குத் தடை போடவில்லை. தன்னை நாடி வருபவர்களுக்கு சிறு சிறு யோகாசனங்களைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் நானம்மாள். அதுதான் தொடக்கம். இன்றைக்கு நானம்மாளிடம் யோகா பயின்றவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாடுகளிலும் யோகக்கலை நிபுணர்களாக விளங்குகின்றனர்.
இவருக்கு 6 குழந்தைகள் 12 பேரக்குழந்தைகள், 11 கொள்ளுப் பேரக் குழந்தைகள். அனைவருமே சுகப் பிரசவத்தில் பிறந்தவர்கள். காரணம் யோகாவேதான். 'முணுக்' என்றாலே கத்தி வைத்து சிசேரியன் செய்யத் தயங்காத இந்த நாளில் 29 பேரும் சுகப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்பது இந்தக் கலையின் மகத்துவத்தை விளக்குகிறது. இன்றைக்கு இவரது வாரிசுகள் அனைவருமே யோகக்கலை நிபுணர்களாக விளங்குவதுடன், தாங்கள் வாழும் பகுதிகளில் யோகக்கலைப் பயிற்சி கொடுக்கின்றனர்.
இவருக்கு ரத்தக் கொதிப்பு இல்லை. சர்க்கரை இல்லை. கண்கள் நன்கு தெரிகின்றன. காது நன்றாகக் கேட்கிறது. மூட்டுவலி இல்லை. தலை சுற்றல், மயக்கம், நினைவாற்றல் குறைவு, கை, கால் குடைச்சல், வலி என வயதானவர்களுக்கு வரும் எந்தப் பிரச்சனையும் இல்லை. சுறுசுறுப்புடன் தனக்கான பணிகளைத் தானே செய்து கொள்கிறார். தனது தினசரி நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லும்போது, "காலைல எழுந்திருப்பேன். குளிப்பேன். சூரிய நமஸ்காரம் செய்வேன். அப்புறம் கொஞ்சநேரம் மூச்சுப் பயிற்சி. யோகா. அப்புறமா ராகிக், கம்பு, குதிரைவாலி, மக்காச்சோளம், கோதுமை, தினை, வரகு இதுனால ஆன ஏதாவது சாப்பிடுவேன். கஞ்சியாத்தான் குடிப்பேன். மதியம் கீரையோட சாப்பாடு. கீரை எதுவுமே கிடைக்கலன்னா வீட்ல இருக்குற முருங்கைக் கீரைய ஆஞ்சு கூட்டு வச்சு சாப்பாடு. ராத்திரி ஒரு பழம். ஒரு டம்ளர் பால். அவ்வளவுதான்" என்கிறார். மிக எளிய உணவு. இதைத்தான் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறார். இவர் ஆரோக்கிய ரகசியம் யோகாவும், இந்த உணவுமுறையும் தான்.
கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வரும் நானம்மாள், இன்றும் தினந்தோறும் யோகா செய்கிறார். விதவிதமான ஆசனங்களை அசத்தலாகச் செய்கிறார். "ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் யோகா செய்வேன். தனியாக இருந்தால் காலை, மாலை அரைமணி நேரம் செய்வேன். கற்றுக் கொள்பவர்கள் வந்தால் எவ்வளவு நேரமானாலும் அவர்களுக்குச் சொல்லித் தருவேன்" என்கிறார். இவரது மகன் பாலகிருஷ்ணன், கோவை கணபதியில் ஓசோன் யோகா சென்டர் என்ற பெயரில் யோகப்பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்களது மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து எனப் பல்வேறு நாடுகளில் நடக்கும் யோகப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். தனது தாயைப் பற்றி பாலகிருஷ்ணன், "அம்மா இன்றைக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆசனங்களைச் செய்வார். சிரசாசனம் உள்ளிட்ட கடினமான பல ஆசனங்களை முன்பு செய்துகொண்டிருந்தார். நாங்கள்தான் மிகவும் வயதாகி விட்டதால் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறோம். பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்கள் செய்கிறவர் இந்திய அளவில் இவர் மட்டுமே" என்கிறார் பெருமையுடன்.
நானம்மாள் பெங்களூரில் நடந்த சர்வதேச யோகா விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானோரை மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்திருக்கிறார்.
இவரை பற்றிய குறும்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. மிகவும் நெகிழ்ச்சியான அந்தக் குறும்படம் இங்கே
இவர் செய்யும் யோகப்பயிற்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் பார்க்கலாம்.
திருப்பூரில் சர்வதேச இளைஞர் யோகா கூட்டமைப்பு சார்பாக நடந்த போட்டியில் முதலிடம் பெற்றிருக்கிறார் இவர். அந்தமானில் 60 பேர் பங்கேற்ற போட்டிகளில், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார். தமிழக அளவில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளையும், கோப்பைகளையும் வென்றிருக்கிறார் கடந்த ஆண்டு குடியரசுத்தலைவரிடம் 'பெண்சக்தி' விருதைப் பெற்ற இவருக்கு, மத்திய அரசு 2018ம் ஆண்டிற்கான 'பத்மஸ்ரீ' வழங்கிக் கௌரவித்துள்ளது.
இதுவரை நானம்மாள் பாட்டியை 'யோகா பாட்டி' என்று அழைத்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது 'பத்மஸ்ரீ பாட்டி' என்றும், 'பத்மஸ்ரீ யோகா பாட்டி' என்றும் அழைக்கின்றனர். "விடியற்காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து, மூச்சுப் பயிற்சி செய்து, சிறிதுநேரம் யோகா செய்தால் எந்த ஆரோக்கியக் குறைவும் வராது" என்கிறார் இந்த பத்மஸ்ரீ பாட்டி. அவர் அனுபவத்தில் கண்ட உண்மை, இல்லையா?
ஸ்ரீவித்யா ரமணன் |