தென்றல் பேசுகிறது...
அப்படி ஒரு பரிசுப்பொருளை அஜித் பை எதிர்பார்த்திருக்க மாட்டார். பரிசுப்பொருள்: கையால் செய்யப்பட்ட நீண்ட துப்பாக்கி. பரிசுக்குக் காரணம்: வலை நடுவுநிலையை (Net Neutrality) பாதுகாத்த தீரம். பரிசு கொடுத்தது: நேஷனல் ரைஃபிள் அசோசியேஷன். அஜித் பை ஐக்கிய கம்யூனிகேஷன் கமிஷன் தலைவர். நல்லவேளையாக அவர் அந்தப் பரிசை மறுத்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது.

இதையும் பாருங்கள்: ஃப்ளோரிடா பள்ளியில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுகிறார்கள். ஆறுதல் கூற அங்கே போன அதிபர் ட்ரம்ப் மிக நூதனமான தீர்வு ஒன்றைக் கூறுகிறார். என்ன தெரியுமா? மூன்று நிமிட நேரத்தில் வன்முறையாளன் சுட்டுவிடுகிறானாம், போலீஸ் வருவதற்கு ஏழெட்டு நிமிடங்கள் ஆகின்றனவாம். அங்கேயே இருக்கும் நன்கு சுடத்தெரிந்த ஆசிரியர்கள் சிலருக்குத் துப்பாக்கிகளைக் கொடுத்துவிட்டால் இத்தகைய சம்பவங்களுக்கு உடனடி மாற்றாக அமையுமாம்!

இன்னொரு சம்பவம்: ஜேரட் குஷ்னரை உங்களுக்குத் தெரியும். அதிபரின் மருமகன். Top Secret Security Clearance என்கிற நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு இவர் கீழே இறக்கப்பட்டுள்ளார். உலகின் பலநாடுகளுக்கும் அதிபரோடு இவர் பயணம் செய்துவந்தார். ஆனால், ட்ரம்ப் குடும்பத்தின் பிரம்மாண்டமான வணிக ஈடுபாடுகள், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவை, இவருக்குச் சாதகமாக இருக்கவில்லை. இப்போது 'Classified Information' மட்டும்தான் இவரால் பார்க்கமுடியும்! அரசியல் அனுபவமோ, வணிகத் துறையில் குறிப்பிடத் தக்க சாதனைகளோ இல்லாத இவரைத் தனது நெருங்கிய உதவியாளராக வைத்துக்கொண்டதும் ட்ரம்ப்பை மிகுந்த விமரிசனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

ரொபர்ட்டா ஜேகப்சன், மெக்சிகோவுக்கான அமெரிக்கத் தூதர், ராஜினாமா செய்துள்ளார். லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் தேர்ந்தவரும் 31 ஆண்டு அனுபவம் பெற்றவருமான ஜேகப்சனின் ராஜினாமா அமெரிக்கா, மெக்சிகோ இரண்டு நாடுகளுக்குமே பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அண்மையில் மெக்சிகன் அதிபரோடு ட்ரம்ப் தொலைபேசி உரையாடலில், இரு நாடுகளின் எல்லையில் சுவர் கட்டும் எண்ணத்தைக் கைவிட மறுத்ததால் ஏற்பட்ட சிக்கல்இது எனக் கருதப்படுகிறது.

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அட்டார்னி ஜெனரலாக இருக்கும் ஜெஃப் செஷன்ஸின் செயல்பாடு குறித்த ட்வீட்டை ட்ரம்ப் "DISGRACEFUL!" என்று முடித்துள்ளார். செஷன்ஸைப் பதவி விலகச் செய்யும் முயற்சி என்று இதைக் கருதுவோரும் உண்டு. அதிபர் ஒருவர் இப்படி உயர்பதவியில் தான் நியமித்த ஒருவரைப் பகிரங்கமாக அவமதிப்பது பொதுவாழ்வில் புதிய அடிமட்டம்.

மேலே கண்டவை தனித்தனி நிகழ்வுகள் போலத் தோன்றினாலும் ஒட்டுமொத்தத்தில் ஒரு பெரும் நோயின் அறிகுறி. பொதுவாழ்க்கையிலும் அரசியலிலும் நேர்மை, கண்ணியமான நடத்தை, ஒழுக்கம் ஆகியவற்றின் மேல் ஏவப்படும் விஷக்கணைத் தாக்குதல். ஆனால், இவற்றைத் தினமும் ஊடகங்கள் வழியே பார்த்து, கேட்டு, படித்து, அறநெறியுணர்வு மரத்துப் போய், "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!" என்று சராசரிக் குடிமகன் பேசுகிற நிலை வந்துவிடுகிறது. அப்போதுதான் மக்களாட்சி குணப்படுத்த முடியாத நிலைக்கு ஊறுசெய்யப் படுகிறது. மக்கள் அராஜகத்தை ஆட்சிமுறையாக மனமுவந்து தேர்ந்தெடுத்துவிட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

இடையறாத விழிப்புணர்வுதான் மக்களாட்சிக்கான விலை என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

*****


கோபி சங்கர் ஒரு வித்தியாசமான இளைஞர். துணிச்சல்காரர். இடைப்பாலினர் (Intersex) பிரச்சனைகளை இந்தியாவிலும் உலக அரங்கிலும் எடுத்துச் சென்று புரியவைக்கவும், அவர்களது வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்கவும் கடுமையாக உழைப்பவர். அவரது நேர்காணலைப் படித்தால் நமக்கு மனித இனத்தைப்பற்றி எவ்வளவு தெரியாது என்கிற புரிதலும் வியப்பும் ஒருசேர ஏற்படும். மகளிர் சிறப்பிதழாகவும் இந்தத் தென்றல் மலர்கிறது. தமிழ் இதயங்களில் தனியிடம் பிடித்த தென்றல் வந்து தீண்டுகிறது உங்களை, மீண்டும் ஒருமுறை.

வாசகர்களுக்கு ஸ்ரீராமநவமி, புனிதவெள்ளி வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

மார்ச் 2018

© TamilOnline.com