அரங்கேற்றம்: அஞ்சனாதேவி கோவிந்தராஜ்
டிசம்பர் 23, 2017 அன்று, அமெரிக்காவின் நாஷுவாவில் திருமதி ஷீக்கல் துவாரகா நடத்தும் சௌபர்ணிகா நடனப்பள்ளி மாணவியான செல்வி அஞ்சனாதேவி கோவிந்தராஜின் பரதநாட்டிய அரங்கேற்றம் தமிழகத்தின் தஞ்சாவூர் ஹோட்டல் ஓரியண்டல் டவரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாட்டியத் தென்றல் கலைமாமணி திருமதி ரேவதி முத்துசுவாமி, கவிஞர் திரைப்பாடல் ஆசிரியர் திரு. அறிவுமதி, செவாலியே சிவாஜி விருதுபெற்ற திருபுவனம் G. ஆத்மநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி புஷ்பாஞ்சலியுடன் தொடங்கியது. ஔவையார் இயற்றிய 'விநாயகர் அகவல்' அடுத்து வந்தது. தொடர்ந்தது ஜதீஸ்வரம். இதற்கு நடனம் அமைத்தவர் பிரியதர்ஷினி கோவிந்த். ஞானசம்பந்தர் தேவாரமான “தோடுடைய செவியன்” மற்றும் “ஒருமை பெண்மை உடையன்” பாடல்களுக்குப் பின் வர்ணம் இடம்பெற்றது. மதுரை ஆர். முரளிதரன் இதனை வடிவமைத்திருந்தார். தொடர்ந்து வந்த திருப்பாவை ஆண்டாளின் கதையை விளக்கும் பதமாக அமைந்திருந்தது. இதற்கு அழகாக அபிநயம் செய்து மனம் கவர்ந்தார் அஞ்சனா. தொடர்ந்து புறநானூற்றிலிருந்து பெண்களின் வீரத்தை விளக்கும் பாடல், திருக்குறளின் 'அன்புடைமை' அதிகாரத்தில் இருந்து சில பாடல்கள் வந்தன. இவற்றுக்கு அஞ்சனாவின் குரு திருபுவனம் ஆத்மநாதன் இசை வடிவம் தந்திருந்தார்.

லால்குடி ஜெயராமன் தில்லானா, மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. குரு திருமதி. ஷீக்கல் துவாரகா (நட்டுவாங்கம்), திரு ஈ.பி. சுதேவ் வாரியார் (வாய்ப்பாட்டு), எச்.எஸ். சுதாமன் சுப்ரமணியன் (மிருதங்கம்), ரமணி தியாகராஜன் (புல்லாங்குழல்), என். வீரமணி (வயலின்) ஆகியோரது பக்கவாத்தியம் நிகழ்ச்சிக்கு இனிமை கூட்டியது.

இடைவேளையில் செல்வன் ருத்ரஜீவி வெங்கட் வயலின் வாசித்து மனதைக் கொள்ளை கொண்டார். இவரது குரு லால்குடியின் சீடரான திரு. விட்டல் ராமமூர்த்தி ஆவார்.

நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் திரு. கோவிந்தராஜ், திருமதி. பூங்கோதை, செல்வன் ருத்ரஜீவி வெங்கட் ஆகியோர். அஞ்சனாதேவியின் மோகினி ஆட்ட அரங்கேற்றம் குருவாயூர் கோவில், மேல்பத்தூர் அரங்கில் டிசம்பர் 25, 2017 அன்று நடைபெற்றது. தொடர்ந்து 28ம் தேதி அன்று சென்னை இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையினரின் 13ம் ஆண்டு மார்கழி இசை விழாவில் பரத நிகழ்ச்சியையும் 29 அன்று கர்நாடக இசை நிகழ்ச்சியையும் வழங்கினார் அஞ்சனாதேவி.

பூரணி,
நாஷுவா, நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com