BATM: பொங்கல்விழா
ஜனவரி 20, 2018 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் எலிசபெத்ஏரி பூங்காவில் திறந்தவெளிப் பொங்கல்விழாவை விமரிசையாகக் கொண்டாடியது.

காலை 11 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொங்கல்விழா துவங்கியது. கிராமிய மணம் கமழப் பதினைந்திற்கும் மேலான குடும்பங்கள் நண்பர்களுடன் பொங்கல் வைத்தனர். ஒவ்வொரு முறை பால் பொங்கி வரும்பொழுதும் குலவையிட்டுப் பொங்கலரிசியை இட்டனர். விழாவில் பங்கேற்ற விரிகுடாப்பகுதி மகளிர் மற்றும் ஆடவர் வட்டமாகக் கிராமிய இசைக்கு ஏற்றாற்போல் கும்மியடித்தனர்.

சிறார்களுக்காக பரமபதம், எலுமிச்சைக் கரண்டி போன்ற விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பெரியவர்களுக்கான உறியடிப் போட்டியில் பலரும் பங்கேற்றனர். தவிர, தம்பதிகளுக்காக நடைபெற்ற புதுமையான 'மூன்றுகால் நடைப்போட்டி' அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

திரு. ராஜ் சல்வான் (கவுன்சில் உறுப்பினர், ஃப்ரீமான்ட் நகரம்) சிறப்புரை ஆற்றினார். இறுதியில் பெரியவர்கள் மற்றும் சிறார்களுக்கான கயிறிழுத்தல் போட்டி நடைபெற்றது. மன்றத் தலைவர் திரு. தயானந்தன் வெங்கடாச்சலம் விழாவில் பங்கேற்றவர்களுக்குக் கரும்புத் துண்டுகள் வழங்கினார். அனைவருக்கும் பொங்கல்படி வழங்கப்பட்டது.

தமிழ்மன்ற நிர்வாகிகளான திருவாளர்கள் தயானந்தன் வெங்கடாச்சலம் (தலைவர்), ரமேஷ்சத்தியம் (துணைத்தலைவர்-நிர்வாகம்), குமார் நல்லுசாமி (துணைத்தலைவர்-கலாசாரம்), ரமேஷ் குப்புசாமி (செயலாளர்), சங்கர் நடராஜன் (பொருளாளர்), கார்த்திகேயன் பெருமாள் (ஒருங்கிணைப்பாளர்), குணசேகரன்பதக்கம் (கௌரவ உறுப்பினர்) நன்றிதெரிவித்தனர். மாலை 5 மணியளவில் விழா நிறைவுற்றது.

ரமேஷ் குப்புசாமி,
ப்ளெசன்டன்

© TamilOnline.com