லிவர்மோர் கோவில்: அதிருத்ர மஹாயக்ஞம்
2018 மார்ச் 1 முதல் 11ம் தேதிவரை லிவர்மோர் சிவாவிஷ்ணு கோவிலில் அதிருத்ர மஹாயக்ஞம் நடைபெறவுள்ளது. இதில் பங்குகொள்ள விரிகுடாப்பகுதி மற்றும் அமெரிக்காவெங்கிலும் உள்ள பக்தர்களைக் கோவில் நிர்வாகம் வரவேற்கிறது. இந்த மஹாயக்ஞம் மாபெரும் அளவில் முதன்முதலில் லிவர்மூர் கோவில் நடத்த உள்ளது. வேத விற்பன்னர்களும் ரித்விக்குகளுமாக 121 பேர் (இதில் பலர் இந்தியாவிலிருந்து வருபவர்கள்) கூடி 11 நாட்கள் தொடர்ந்து இதனை நடத்துவர். எல்லா நாட்களும் தொடர்ந்து இந்த மஹாயக்ஞத்தில் பக்தர்கள் பங்குகொள்ளலாம்.

ருத்ரமும் சமகமும் கிருஷ்ண யஜுர் வேதத்தின் பகுதியாக வருபவை. 11 முறை ஸ்ரீருத்ரம், ஒருமுறை சமகம் என்ற வகையில் ஓதுவது ஏகாதச ருத்ரம். 11 ஏகாதச ருத்ரம் ஒரு லகுருத்ரம். 11 லகுருத்ரம் ஒரு மஹாருத்ரம். 11 மஹாருத்ரம் அதிருத்ரம் என்று அறியப்படுகிறது. அதாவது, 11x11x11x11= 14,641 நமகங்களும், 1331 சமகங்களும் 121 வேதவிற்பன்னர்களால் 1331 ருத்ர ஹோமங்களாக 11 ஹோமகுண்டங்களில் நடத்தப்பட்டு அதிருத்ரம் முழுமை அடைகிறது.

பிரபஞ்ச அமைதியையும் உலக நன்மையையும் வேண்டி நடத்தப்படுவதே இந்த அதிருத்ர மஹாயக்ஞம்.

இத்துடன் சடசண்டி ஹோமமும் நடைபெறும். இது மஹாசக்தி வழிபாட்டின் உன்னத அம்சமாகும். சண்டி ஹோமத்துடன் தேவிமஹாத்மியமும் ஓதப்படும். தினமும் 100 முறை சண்டி சப்தஸதி பாராயணம் மற்றும் ஒருமுறை சண்டி ஹோமம் வீதம் 11 நாட்களுக்கு நடத்தப்படும் யக்ஞமே சடசண்டி ஹோமம் ஆகும்.

அதிருத்ர மஹாயக்ஞத்துடன் சேர்ந்து சடசண்டி ஹோமமும் செய்யப்படுகையில் அய்யன் சிவபெருமான், அன்னை பராசக்தி ஆகிய இருவரையும் ஒன்றாக வழிபட்டு, பேரருளைப் பெற்றுத்தரும் சக்திவாய்ந்த யாகமாக அது உருவெடுக்கிறது.

சிவாவிஷ்ணு கோவிலை நிர்வகிக்கும் ஹிந்து சமூக, கலாசார மையம் (HCCC) 1977ல் துவங்கப்பட்டது. பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சின்மயானந்தா ஆகியோரின் ஆசிகளுடன் 1983ல் பூமிபூஜை நடத்தப்பட்டு, லிவர்மோர் சிவாவிஷ்ணு கோவில் கட்டி முடிக்கப்பட்டது. 1986ல் கும்பாபிஷேகம், 1998 மற்றும் 2010ல் மஹா கும்பாபிஷேக வைபவங்களும் நடைபெற்றன.

சமயப் பணி மட்டுமன்றி சமூகம், கலாசாரம், இளையோர் கல்வி ஆகிய களங்களிலும் HCCC குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றது.

மேலும் நிகழ்ச்சி விவரங்கள் காண: livermoretemple.org
தொலைபேசி: 925-449-6255

சுந்தரேஷ் வேதபுரீஸ்வரன்

© TamilOnline.com