பிப்ரவரி 2017: வாசகர் கடிதம்
லலிதாராம் அவர்களின் நேர்காணல் படித்தேன். ஜி.என்.பி., மதுரை மணி ஐயர், எஸ். ராஜம் போன்ற கர்நாடக சங்கீத மேதைகளின் வாழ்க்கையை தோண்டித் துருவி விடாப்பிடியாக ஆராயும் அவரது ஆர்வம் என் மனதை நெகிழ்த்தியது. பட்டப்படிப்புக்குப் பின் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடராமல், வரலாறு மற்றும் இசையுலக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக இந்தியாவுக்குச் சென்ற லலிதாராம் போன்றோரைக் காண்பது அரிது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் தியாக உணர்வை வியக்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

பிரந்தியங்கரா ராமபத்ரன்

*****


2017ம் வருடத்திற்கான 'Prince Mahidol' விருதுக்கு டாக்டர் மதுரம் சந்தோஷம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. லலிதாராம் நேர்காணல் அருமை. இசை விமர்சனத் துறையில் பாரபட்சமின்றி எளியோரும் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையுடன் எழுதியவர் சுப்புடு. அவரது நூற்றாண்டில் அவரை நினைவு கூர்ந்தமைக்கு தென்றலுக்கு நன்றிகள்.

சாகாவரம் பெற்ற அப்புசாமி, சீதாப்பாட்டியை உருவாக்கிய ஜ.ரா.சு. அவர்கள்தான் பாக்கியம் ராமசாமி என்று முன்னர் தெரிந்திருக்கவில்லை. பலவித புனைபெயர்களில் வேறுபட்ட நடையில் அவர் எழுதியவை மக்களை மகிழ்வித்தது உண்மை. எழுத்தாளர் சூரியகாந்தன் கோவை வட்டார மொழியில் எழுதிய 'வாழப்பிறந்தவர்கள்' சிறுகதை அற்புதம்.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா



© TamilOnline.com