தெரியுமா?: ஜார்ஜியா மாநிலம்: தமிழ் கலாசார வாரம் அறிவிப்பு
ஜனவரி 10, 2018 அன்று ஜார்ஜியா மாநில ஆளுநர் நேத்தன் டீல் அவர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 8-12, 2018 வாரத்தை, தமிழ் மொழி மற்றும் கலாசார வாரமாக அறிவித்தார். மாநிலத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் இதற்கான அறிவிப்புப் படிவத்தை ஆளுநர் வழங்க ஜார்ஜியாவாழ் தமிழன்பர்கள் பெற்றுக் கொண்டனர்.

தமிழ்ச் சமுதாயம் தன்னுடைய செழுமையான பாரம்பரியத்தைத் காப்பாற்றிக் கொண்டதோடு, அமைதியாகவும் ஒற்றுமையாகவும் ஜார்ஜியாவின் பன்முகக் கலாசாரத்திற்குத் தன்னுடைய பங்கை ஆற்றியிருக்கிறது. கலை, கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், சுகாதார பராமரிப்பு, கல்வி, கொடையுள்ளம், தொழில்துறை ஆகியவற்றில் தமிழ்ச் சமுதாயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2500 வருடப் பழமையான இலக்கியத்தைக் கொண்ட, ஏறத்தாழ 76 மில்லியன் மக்களால் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் உலகின் பல்வேறு இடங்களில் பேசப்பட்டு வரும் தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. ஜனவரி மாதத்தில் தமிழ் மக்கள் அறுவடைத் திருநாளாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்பது போன்ற பல சிறப்பம்சங்களை முன்னிட்டு, ஆளுநரின் இந்த அறிவிப்பு வந்தது.

அரும்பி வரும் தொழிலதிபரும், மூர் ஹௌஸ் கல்லூரியின் மருத்துவத் துறைப் பேராசிரியருமான, திருமதி. நஷீரா தாவுத் அவர்களின் முனைப்பும், முழு முயற்சியும்தான் இந்த மாநில அளவிலான அங்கீகாரத்தை நமக்குப் பெற்றுத்தந்தது. முன்னதாகத் திருமதி. நஷீராவின் முயற்சியால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பெரு முயற்சிகளைப் பாராட்டி, ஜார்ஜியாவின் க்வின்னெட் மாவட்டம், டிசம்பர் (2017) மாதத்தைத் தமிழ் மாதமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

டாலஸிலிருந்து வந்து விழாவில் பங்கு கொண்ட தமிழிருக்கை அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு. வெற்றிச் செல்வன், ஆளுநருக்குத் தமிழின் பெருமைகளை விளக்கி "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரியைச் சொல்லித்தர, அவரும் சிறு குழந்தை போல உற்சாகத்துடன் திருப்பிச் சொன்னார். பிறகு ஆளுநருக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு, சிறு அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

விழாவில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து வலம்): Dr. ராஜகோபால ஸ்ரீதரன், ஜெயா மாறன், மரகதம், தீபா ஸ்ரீராம், Dr. நஷீரா தாவூத், வெற்றிச்செல்வன், ராமநாதன் மாறன், சிவா சரவணன், ராஜன் மற்றும் முருகப்பன்.

அரசாங்க அறிவிப்புப் படிவத்தைக் காண: gov.georgia.gov

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com