நவராத்திரிக் கொற்றவை
நவராத்திரியில் பெண்கடவுளர் சிலரை வணங்குவதும் கொலுவைத்துக் கொண்டாடுவதும் வழக்கம். அந்தக் கடவுளரில் காளியும் கலைமகளும் உளர். இங்கே சங்க இலக்கியத்தில் அவர்கள் பற்றிய சில குறிப்புகளைக் காண்போம்.

கொற்றவை:
காளி, துருக்கை என்னும் கடவுளைச் சங்க இலக்கியங்களில் கொற்றவை என்ற பெயரில் காண்கிறோம். கொற்றவை பாலை நிலக்கடவுளாக விளங்குகிறாள். பாலை என்பதை நாம் மணல்வெளியாக நினைக்கக்கூடாது. சங்க இலக்கியத்தில் பாலை என்பது முல்லைக்காடும் குறிஞ்சிமலையும் வெயில்காலத்தில் திரிந்து வாடியிருப்பதே ஆகும். "முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்று சிலப்பதிகாரம் சொல்லும். எனவே அடிப்படையில் காடும் கரடும் பாலை ஆகும். எனவே கொற்றவையைக் கானமர்செல்வி என்று சங்கக்கவிதைகள் கூறும். இன்றுகூடப் பொட்டல் காட்டுப் பகுதிகளில் அங்காயி அல்லது மாரியாயி கோவில்கள் இருப்பதைக் காணலாம். அவைகள் பழைய கொற்றவையின் பெயர்களாக இருக்கவேண்டும்.

மகிசாசுரமர்த்தினி:
பாலைத்திணையின் அகப்பொருள் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ஆகும். புறப்பொருளில் அதன் குறிப்பு வெற்றிவாகையாகும். எனவே பாலைக்கடவுள் கொற்றவை போர்க்கோலம் கொண்டவள். நவராத்திரியில் கொண்டாடும் ஒரு முக்கிய உருவம் மகிசாசுரமர்த்தினி அதாவது எருமைசெற்றாள் ஆகும். கொற்றவை எருமையுருவான எதிரியைக் கொன்று நிற்கும் கோலம் சிலப்பதிகாரத்தில் சொல்லியுள்ளது. இந்தப் பாட்டுக் கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளுடன் வேடர்கோயிலில் தங்கும்பொழுது வேடர்கள் பாடுவது:"ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்" (சிலம்பு: வேட்டுவவரி)

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரிதோலை உடுத்திக் கானகத்து எருமையின் கருந்தலைமேல் நின்றாய் என்று கொற்றவையைப் பாடுகிறார்கள். [தோராயம் 1800 ஆண்டுகள் ஆகியும் செந்தமிழ்மொழி ஒரே அமைப்போடே மொழிவதைக் காணலாம்; மேற்செய்யுளை விளக்கும் இன்றைய சொற்களும் இலக்கண அமைப்பும் அப்படியே இருப்பது உலகவியப்பாகும்.]

எனவே வெற்றிக்குக் கடவுள் கொற்றவை. அவளை "வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை" என்று வேட்டுவவரியில் சிலப்பதிகாரம் கூறும். "வலிமை மிகுந்த வெற்றியுடைய நினைத்தவாறு வாய்க்கும் வாளையுடைய கொற்றவை" என்று அவளைப் பாராட்டுகிறது.

கலைமகளாக விளங்கிய கொற்றவை!
சங்க இலக்கியத்தில் செஞ்சொல்வஞ்சியாகிய வாணியென்னும் கலைமகளைப் பற்றிய குறிப்புக் காண்பதாகத் தெரியவில்லை. புலவர்கள் வாய்ச்சொல்லுக்கு மகிழ்ந்து வேண்டும் வரங்களை அளிப்பவள் கலைமகள் என்று வழக்குண்டு. ஆனால் அந்தச் செயலைக் கொற்றவையே செய்வதாக அகநானூறு சொல்கிறது. ஏழில்குன்றம் என்றொரு மலையைச் சொல்லும்பொழுது குடவாயிற்கீரத்தன் என்னும் கவிஞர் அந்த மலையை ஒரு மிக உயர்ந்த புலவன் பாடியுள்ளதாகச் சொல்கிறார். அந்தப் புலவன் கானமர்செல்வியாகிய கொற்றவையிடம் வெள்ளைக்கால் கொண்ட குதிரைகளைப் பெற்றதாக வரலாறொன்று இதில் தெரிகிறது:

"ஓங்குபுகழ்க்
கானமர் செல்வி அருளலின் வெண்கால்
பல்படைப் புரவி எய்திய தொல்லிசை
நுணங்குநுண் பனுவல் புலவன் பாடிய
... ஏழில் குன்றம்" (அகநானூறு: 345: 3-6)
[புரவி = குதிரை; இசை = புகழ்; படை = சேணம்; நுணங்கு = நுண்ணிய; பனுவல் =
நூல், கவிதை]

ஓங்கிய புகழையுடைய கொற்றவை அருளியதால் வெண்கால் கொண்டவையும் நல்ல முதுகுச்சேணம் உடையவுமான குதிரைகளை எய்திய பழம்புகழ் கொண்டவனும் நுணுகி நுண்ணிய செய்திகள் உடைய நூல்பாடியவனுமான புலவன் என்று சொல்கிறது. எனவே கலைமகள் போலப் பண்டைநாளில் கொற்றவை சொல்லுக்கும் தலைவியாக இருந்ததை அறிகிறோம்.

அந்தப் புலவன் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அவன் மிகப் பழைய புலவன் என்றும் அவன் மிக நுண்ணிய செய்திகளைச் சொல்லும் நூல்பாடியவன் என்றும் சொல்வது பெரியதாகும். சங்ககாலப் புலவர் அவனை அப்படிப் பாராட்டுவது மிகமிகப் பெரிய உயர்வாகும். அவையெல்லாம் எப்படியோ கிடைக்கவேண்டும் என்று ஏங்கத் தக்கதாகும். ஆயினும் சங்க இலக்கியமே ஒரு அரிய கருவூலம், அதைக் காப்பது நம் கடமையாகும். அவற்றை நேரடியாகப் பயில்வதும் குடும்பத்தாரைப் பயில்விப்பதுமே அவற்றைக் காக்கும் வழியாகும். மற்றவர்கள் கவனிப்பார்கள் என்பது இல்லை.

மேற்கண்ட புலவன் பரிசில் பெற்ற செய்தி இங்கு மட்டுமே காணும் செய்தி. இது தமிழர்களிடையே விக்கிரமாதித்தன் கதைகள், காளிதாசன், தெனாலி இராமன் காளியிடம் வரம்பெற்றது ஆகிய செய்திகள் போலப் பல புராணங்கள் இருந்ததைக் காட்டுகிறது. நம் தமிழ்மரபு பாரதத்தின் அடித்தளமாக இருந்து நினைவுக்கெட்டாத நாள்முதல் வளம்சேர்ப்பது பெருமிதமும் பொறுப்பும் தரும் உண்மையாகும்.

"பெருந்திருவும் சயமங்கையும் ஆகிஎன் பேதைநெஞ்சில் இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லா உயிர்க்கும் பொருந்திய ஞானம்தரும்; இன்ப வேதப் பொருளும் தரும்; திருந்திய செல்வம் தரும்; அழியாப்பெருஞ் சீர்தருமே" (சரசுவதியந்தாதி) [திரு = திருமகள்; சயமங்கை = வெற்றிச் செல்வி]

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com