தெரியுமா?: வண்ணதாசனுக்கு இயல் விருது - 2017
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்வாண்டுக்கான இயல் விருது (2017) வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன். தமிழ்நாட்டின் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு இவரே வாசிக்க வெளிவந்துள்ளது. `எல்லோர்க்கும் அன்புடன்' எனும் பெயரில் இவரது கடிதங்களின் இரண்டு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நவீன தமிழ்ச் சிறுகதை ஆக்கத்தில் அதிக கவனம் பெற்றுள்ள இவருடைய படைப்புகள் பல்கலைக்கழகத்தில் பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன.

வாழ்வின் ஓரத்தில் உட்கார்ந்து அதன் மையத்தை உற்று நோக்குவதுபோலச் சிறுகதைகள் அமைப்பது இவரது சிறப்பு. 'வாசகனிடம் பெற்றதை அவனுக்கே திரும்ப நீண்ட கடிதமாக எழுதுகிறேன்' என்று அவர் தன் படைப்பைப்பற்றி கூறுகிறார்.

சாகித்திய அகாடமி விருது, சிற்பி விருது, பாவலர் விருது, விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றை இவர் பெற்றிருக்கிறார்.

இயல் விருதைப் பெறும் 19வது தமிழ் இலக்கிய ஆளுமை இவர் ஆவார். இதற்கு முன்னர் சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன், கவிஞர் சுகுமாரன் உட்பட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பரப்பில்தொடர்ந்து இயங்கி வரும் வண்ணதாசன் இந்த விருதைப் பெறுவது மிகவும் பொருத்தமே. 2500 டாலர் பணப்பரிசும் விருதுக் கேடயமும் கொண்டது இயல் விருது. ரொறொன்ரோவில், 2018 ஜூன் மாதம் விருது வழங்கும் விழா நடைபெறும்.

அப்பாதுரை முத்துலிங்கம்,
டொரண்டோ, கனடா

© TamilOnline.com