இது ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் நடந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ஓவியர் ஒருவர் பல இடங்களுக்கும் பயணம் செய்து மிகுந்த கீர்த்தி பெற்றிருந்தார். பெயரும் புகழும் பெற்றிருந்தும், வெற்றிகள் பல அடைந்திருந்தும், பலரையும் தனது கலைத்திறனால் கவர்ந்திருந்தும், அவரால் கிருஷ்ண பரமாத்மாவை நேரில் சந்திக்க முடியவில்லை.
எல்லார் இதயத்திலும் கோலோச்சுகிறவரும், மிகுந்த கலாரசிகருமான ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து, அவரது பாராட்டுதலைப் பெறவேண்டும் என்று ஓவியர் விரும்பினார். ஆனால் அந்த வாய்ப்புக் கிட்டவில்லை.
விடாமல் முயற்சித்தபின், ஒருநாள் அவரைச் சந்திக்க ஸ்ரீகிருஷ்ணர் நேரம் ஒதுக்கினார். அவரைப் பார்த்த ஓவியர், படம் வரையும் பொருட்டாக ஸ்ரீகிருஷ்ணரை அசையாமல் உட்காரும்படிக் கூறினார். கிருஷ்ண பரமாத்மாவின் சம்மதத்துடன் அவரது கோட்டோவியத்தை வரைந்துகொண்ட பின், இன்னும் ஒரு வாரத்தில் முழு ஓவியம் தயாராகிவிடும் என்று கூறினார்.
அனைத்துமறிந்தவர் ஸ்ரீகிருஷ்ணர். ஓவியரின் அகங்காரத்தை அறிந்திருந்த போதும், அப்போது ஏதும் சொல்லவில்லை. ஒருவாரம் கழித்து ஓவியர் படத்தை ஒரு வெள்ளைத்துணியால் மூடி, கொண்டுவந்தார். அந்தத் துணியை விலக்கிப் பார்த்த ஓவியர், தானே அதிர்ச்சி அடைந்தார். படத்துக்கும், நிஜமான கிருஷ்ணருக்கும் சற்றும் ஒற்றுமை இருக்கவில்லை. ஏமாற்றமடைந்த ஓவியர், படத்தை முடித்துத்தர இன்னும் ஒருவாரம் வேண்டினார்.
இப்படியாகப் பல வாரங்கள் போயின; ஆனால் அவரால் ஸ்ரீகிருஷ்ணரைத் தனது ஓவியத்தில் துல்லியமாகப் பிடிக்கவே முடியவில்லை.
மனம் நொந்துபோன ஓவியர் அந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்தார். ஆனால் கடவுள் அவருக்கு வேறு திட்டம் வைத்திருந்தார். அவர் கிளம்பிப் போக நினைக்கையில் மகரிஷி நாரதரைச் சந்தித்தார்.
ஓவியரின் சிரமத்தை அறிந்திருந்த நாரதர், ஸ்ரீகிருஷ்ணரை வரைய நினைப்பது அசட்டுத்தனம், ஏனென்றால் அவருக்கென ஒரு நிரந்தர வடிவமில்லை, ஒவ்வொரு விநாடியும் அவரால் தன் முகத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை உணர்த்தினார்.
"உண்மையாகவே பிரபுவை நீ வரைய விரும்பினால், அதற்கான வழியை நான் சொல்கிறேன்" என்று கூறிய நாரதர், ஓவியரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். நாரதரின் அறிவுரைப்படி ஓவியர் மீண்டும் எதையோ வெள்ளைத்துணியால் மூடி எடுத்துக்கொண்டு ஸ்ரீகிருஷ்ணரிடம் வந்தார்.
இந்தமுறை நாரதரின் அறிவுரையால் புத்திசாலியாகிவிட்ட ஓவியர், "பிரபு, நீங்கள் என்ன வேண்டுமானால் மாற்றம் செய்யுங்கள், அப்போதுகூட ஓவியம் உங்களைப் போலவே இருக்கும்" என்று கூறினார். இப்படிக் கூறியபடி அவர் துணியை விலக்கினார். அதன்பின்னே ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தது. அதில் ஸ்ரீகிருஷ்ணரின் பிம்பம் அப்படியே தெரிந்தது.
ஆகவே, கடவுள் இப்படி இருப்பார், அப்படி இருப்பார் என்றெல்லாம் கற்பனை செய்தால் அது சரியாகாது. கடவுளை வர்ணிக்க முயன்றால் அது தோல்வியைத்தான் தழுவும். உன் மனதைப் பளிச்சென்று தூய்மையாக்கி, அதனை அன்பாலும் பக்தியாலும் நிரப்பி வை. அந்த அன்பும் பக்தியுமே உன்னைக் கடவுளின் தரிசனத்தைப் பெற வல்லவனாக்கும்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா
நன்றி: சனாதன சாரதி, ஜூலை 2016 |