ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்.

*****


கேள்வி: ஒரு நிறுவனம் ஆரம்பிக்க என்னிடம் ஒரு பிரமாதமான யோசனை உள்ளது; என்னுடன் சேர ஒரு குழுவும் உள்ளது. ஆனால், "அவசரப்பட்டு மூலதனம் திரட்டாதே; உடனே திரட்டினால் நிறுவனத்தில் பெரும்பங்கு மூலதனத்தாருக்கு அளித்துவிட வேண்டியிருக்கும்; கூடுமானவரை நிறுவனத்தை வளர்த்து, அதன் மதிப்பீட்டைப் பெருக்கிவிட்டு அப்புறம் திரட்டு" என்று தொழில்முனைவோர் சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். வேறு சிலரோ, மூலதனம் திரட்டினால்தான் சரியாக வளர்க்கமுடியும், இல்லாவிட்டால் மிகத் தாமதமாகி, வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்கிறார்கள்! நான் மிகக் குழம்பியுள்ளேன். எது சரி? மூலதனம் திரட்ட எது சரியான தருணம்? (தொடர்கிறது)

கதிரவனின் பதில்: சென்ற பகுதிகளில், எப்போது மூலதனம் திரட்டுவது என்று தீர்மானிப்பதில் பல அம்சங்கள் கூடியுள்ளன; உங்கள் நிறுவன வகை, குழு பலம், வணிகத்துறை, தற்போதைய வளர்ச்சி நிலை (current progress), போன்ற பல அம்சங்களையும் எடையிட்டு எது சரியான தருணம் என்று கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மேலும், மூலதனத்துக்கு ஈடாகப் பெரும்பங்கு அளிக்க வேண்டி வந்தாலும் உடனே மூலதனம் திரட்டுவதற்கான சில காரணங்களையும் பார்த்தோம். சென்ற பகுதியில், நிறுவிய உடனேயே பெரும் மூலதனம் திரட்டாமல் சற்று தாமதிப்பதற்கான காரணங்கள் சிலவற்றையும் விவரித்தோம். இரண்டுக்கும் இடையில் சிறிதளவாவது மூலதனம் பெறுவதற்கான வழிமுறைகள் சிலவற்றைப் பற்றியும் அறிந்து கொண்டோம்.

இப்போது, சிறிதளவே மூலதனம் பெற்று, அல்லது காலணிப்பட்டை முறையில் (bootstrapping) நிதி திரட்டி நிறுவனத்தை நடத்தும்போது, எவ்வாறு குறைந்த செலவில் நிறுவனத்தின் மதிப்பீட்டை உயர்த்தலாம் என்பதற்கான வழிமுறைகளைக் காண்போம்.

முதலாவதாக, நிறுவனத்தில் நிறைய ஊழியர்களின்றி, மிகக்குறைந்த ஊதியத்தில் மிக அதிக உழைப்பளிக்கும் தீவிர ஆர்வமுள்ள ஒரு சிலரையே வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும். அத்தகைய தியாகிகளுக்கு(!) நிறுவனர் பங்குகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் அதிகச் சதவிகிதம் பங்குகள் அளித்து ஊக்குவிக்க வேண்டும்.

இரண்டாவது, குறைந்த ஊதிய அளவுள்ள இடங்களில் மற்றொரு அலுவலகத்தை வைத்து அங்கு வேலையாட்களைச் சேர்த்து முன்னேற வேண்டும். சிலிக்கான் வேல்லி, சான் ஃப்ரான்ஸிஸ்கோ போன்ற இடங்களில் ஊதியத் தேவை மிக அதிகம். எனவே இந்தியா, கிழக்கு ஐரோப்பா போன்ற திறனாளிகள் அதிகமுள்ள ஆனால் செலவு குறைந்த இடங்களில் அலுவலகம் வைக்கலாம்.

அடியேன் நிறுவிய ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, நோயிடா போன்ற இடங்களில் தூரக்கரை மையம் (offshore development center) வைத்து நடத்தியே குறைந்த செலவில் அதிக முன்னேற்றம் கண்டன. முக்கியமாக டாட்காம் கொப்புளம் வெடித்து மூலதனமே கிட்டாதபோது பெங்களூரில் மென்பொருள் பொறியாளர்களை ஈர்த்து நடத்தியதால்தான் நெட்ஸ்கேலர் நிறுவனம் முதலில் பிழைத்திருந்து பிறகு தழைத்தது!

இந்தியா போன்ற இடங்களில் இன்னொரு அலுவலகம் வைத்து நிறுவனம் நடத்தினால் சரிப்பட்டு வராது, சிலிக்கான் வேல்லி போன்ற இடங்களில் ஒரே கட்டிடத்தில் விற்பன்னர்கள் நிரம்பிய சிறு குழுவினால்தான் பெரும் தொழில்நுட்பச் சாதனை படைக்கமுடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனால். அப்படிப் பட்ட வழிமுறை வேண்டுமானால், பெரும் மூலதனம் பெற்றாலோ அல்லது அவ்விற்பன்னர்கள் ஊதியமின்றி அல்லது மிகக் குறைந்த ஊதியத்துடன் இயங்கினால்தான் முடியும். அது எல்லா நிறுவனங்களுக்கும் சாத்தியமாவதில்லை.

இந்தியா போன்ற தூர மையங்களை அமைத்து விற்பொருள் தயாரிப்பது எளிது என்று நான் கூற வரவில்லை. அதிலும் பல அபாயங்கள் நிச்சயமாக உள்ளன. தூர மையக் குழுவினருக்கு விற்பொருள் அம்சங்களைப் பற்றி சரியாகப் புரியவைத்து, வேண்டிய நேரத்துக்கு உருவாக்க வேண்டுமானால், படாதபாடு பட்டுத்தான் ஆகவேண்டும். கணக்கற்ற நாட்கள் இரு மையத்தினரும் அதிகாலை மற்றும் நள்ளிரவில் தொலைபேசி மற்றும் மின்வலை மூலமாக ஒன்று சேர்ந்து உழைத்தாக வேண்டும். ஆனால், அவ்வாறு திறனுடன் நடத்துவது எப்படி என்பதை நன்கு புரிந்துகொண்டு செய்தால் குறைந்த செலவில் அதிக முன்னேற்றம் அடைந்து நிறுவன மதிப்பீட்டை உயர்த்த முடியும்.

இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சில நிறுவனங்கள் அமெரிக்கக் கண்டத்திலேயே குறைந்த செலவில் மையம் அமைத்து அனுகூலம் பெறுகிறார்கள்! அதெப்படி? கனடா! அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் (USA) அண்டை நாடான கானடா, ஒரே கால மண்டலத்தில் இருக்கும் (time zone) இடங்களில், மிக்க திறனாளிகளைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமாகிறது. அதுவும் கானடாவில் ஊதியமும் சற்றுக் குறைவு, மேலும் கனேடிய டாலர், அமெரிக்க டாலரில் 80 சதவிகிதம் மதிப்புக் குறைவாக உள்ளது. அதனால் அமெரிக்க டாலர் கணக்கில் பார்த்தால் ஊதியம் கிட்டத்தட்டப் பாதியாக வாய்ப்புள்ளது.

மேலும், கானடாவின் சில மாநிலங்கள், தாங்களும் உயர் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காகத் தங்கள் நகரங்களில் சில ஊழியர்களை வைத்து மையங்கள் நடத்தினால், ஒவ்வொரு ஊழியருக்கும் தலா இவ்வளவு ரொக்கம் என்று அளிக்கிறார்கள். அது செலவை இன்னும் குறைக்க வழியமைக்கிறது.

குறைந்த செலவில் முன்னேற்றம் காண இன்னொரு வழி, சிறு நிறுவன மானியம் என்னும் திட்டம். இது அமெரிக்க அரசின் திட்டம். இதன்படி, சில சிறு நிறுவனங்கள் தாங்கள் திரட்டும் நிதியளவில் ஐம்பது சதவிகிதத் தொகையை அமெரிக்க அரசிடமிருந்து மானிய ரொக்கமாகப் பெற முடிகிறது. இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றை இங்கு விவரிப்பது கடினம். அமெரிக்க அரசின் சிறு நிறுவனங்களைப் பற்றிய இணைய தளங்களில் ஆராய்ந்தால் பெறமுடியும்.

இறுதியான வழி, வாடிக்கையாளர்களிடமிருந்து நிதி பெற்றே விற்பொருளை உருவாக்குவது. சில சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்களின் தேவை மிக உச்சமாக இருக்கும். அவர்களுக்குச் சாதகமான முறையில் விற்பொருள் உருவாக்கித் தர ஒப்புக்கொண்டால் முன்பணமாகவோ, அல்லது வேறு அனுகூல ஒப்பந்தங்களுடனோ நிதி பெறுகிற வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைப்பது எளிதல்ல. ஆனால் சில அதிர்ஷ்டக்கார நிறுவனங்களுக்கு அவ்வாய்ப்புக் கிட்டியுள்ளது. ஆனால் சற்று ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும். நிதியளிக்கும் நிறுவனத்தின் தேவைக்கேற்ப மட்டும் விற்பொருளை அமைத்துவிட்டால், பொதுச்சந்தையில் விற்க முடியாமல் போகலாம். அதனால், பொதுச்சந்தை விற்பனைக்கும் சாதகமானபடி கவனமாக உருவாக்க வேண்டும்.

நீங்கள் மூலதனம் இப்போதா, பிறகா என்று எழுப்பிய கேள்வியின் பலதரப்பட்ட அம்சங்களையும் அலசியாயிற்று! இத்தோடு இந்த யுக்திக்கான விளக்கம் போதும் என்று எண்ணுகிறேன். இந்தக் கட்டுரைத் தொடர் சிறிது காலத்துக்கு இடைவேளை பெறுகிறது! யுக்தி-16 பற்றிய கட்டுரையுடன் சில மாதங்களுக்குப் பின்னர் சந்திப்போம்.

(இடைவேளை)

கதிரவன் எழில்மன்னன்

*****


மரபணு மாற்றத்தின் மர்மம்!
சூர்யாவின் துப்பறியும் திறன் தென்றல் வாசகர்கள் அறியாததல்ல. அவரது சகா கிரண் அடிக்கும் அட்டகாசமும் சாஃப்ட் கார்னர் ஷாலினியின் சாகசமும் முன்னரே உங்களைக் கவர்ந்தவை தாம்.

சூர்யா மற்றுமொரு சிக்கலைச் சாமர்த்தியமாக அவிழ்க்கும் விறுவிறுப்புக் கதையோடு வருகிறார் கதிரவன் எழில்மன்னன். அதுதான் மரபணு மாற்றத்தின் மர்மம். செயற்கை மரபணுத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு சிக்கல். சூர்யாவைத் தவிர வேறு யாரால் அதைத் தீர்த்து வைக்க முடியும்!

காத்திருங்கள் மீண்டும் சூர்யாவைச் சந்திக்க... அடுத்த இதழில்.

© TamilOnline.com