அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 1)
ஞானம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாவற்றையும் துறந்து ஞானத்தைத் தேடியலைந்து, அனுபவம் பெற்று ஞானிகளாகவும், யோகிகளாகவும் பரிணமிக்கின்றனர் சிலர். மற்றும் சிலரோ வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளாலும், வன்கொடுமைகளாலும், சொல்லொணாத் துயருற்று, உண்மை வேட்கையுற்று, வாழ்வின் உண்மையைத் தேடியலைந்து உணர்ந்து, அவ்வாறு தான் உணர்ந்தவற்றை மற்றவருக்கும் உணர்த்தி, மக்கள் போற்றும் ஞானிகளாக, யுகபுருஷர்களாக உயர்கின்றனர். அவர்களுள் ஒருவர் அய்யா ஸ்ரீ வைகுண்டர்

"தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"
"எளியோரைக் கண்டு இரங்கியிரு மகனே"
"வரம்பு தப்பாதே, வழி தவறி நில்லாதே"
"நன்றி மறவாதே, நான் பெரிதென்று எண்ணாதே"

இவை போன்ற நன்மொழிகளைத் தம்மை நாடி வந்தவர்களுக்கு உபதேசித்து, அவர்கள் வாழ்க்கை உயரக் காரணமான மகாபுருஷர் அய்யா வைகுண்டர். இவர் ஞானியாக முகிழ்த்த வரலாறு சுவையானது.

முடிசூடா முத்துக்குட்டி!
அது 1809ம் ஆண்டு. சமஸ்தான அரசர்களும், ஜமீன்தார்களும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த காலம். அவர்கள் வைத்ததே சட்டமாக இருந்தது. ஏழைகளும் தாழ்த்தப்பட்டவர்களும் அடிமைகளாகவும், அன்றாடங் காய்ச்சியாகவும் காலம் தள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அடிப்படை வாழ்வியல் உரிமைகள்கூட மறுக்கப்பட்டிருந்தன. "காலணி அணியக் கூடாது; ஆண்கள் மேலாடை அணியக் கூடாது; தலைப்பாகை கூடாது. உயர்சாதியினரைப் பார்த்தால் கைகூப்பி வணங்க வேண்டும்; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது" எனப் பல்வேறு கொடுமையான சட்டதிட்டங்கள் புழக்கத்தில் இருந்தன. இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான், சாத்தான்கோவில்விளை என்ற ஊரில், பொன்னுமாடன் - வெயிலாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் அய்யா வைகுண்டர். மிகுந்த விஷ்ணுபக்தி கொண்ட குடும்பம் என்பதால், ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கும் வகையில் குழந்தைக்கு 'முடிசூடும்பெருமாள்' என்ற அழகான பெயரை இட்டனர் பெற்றோர். ஆனால், அந்தப் பெயர் நிலைக்கவில்லை.

'முடிசூடும் பெருமாள்' என்ற பெயரைத் தங்களை அவமானப்படுத்தும் பெயராக உயர்குடியில் பிறந்த சிலர் நினைத்தனர். 'முடி சூடுதல்' அரசர்களுக்கும், உயர்குலப் பிரபுக்களுக்கும் மட்டுமே உரியது. அதனைத் தாழ்ந்த குடியில் பிறந்த ஒருவன் வைத்துக் கொள்வதாவது? அதனை எப்படி ஏற்க முடியும்? இது எங்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துவது போல் உள்ளது" எனப் பலர் ஒன்றுகூடிப் பெற்றோரிடம் புகார் செய்தனர். "பையனின் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும், இல்லாவிட்டால் ஊரைவிட்டு விலக்கி வைக்கப்படுவதுடன், ராஜத் துரோகக் குற்றத்துக்கான கடும் தண்டனையைச் சந்திக்க நேரிடும்" என்று தந்தை பொன்னுமாடனை எச்சரித்தனர். பொன்னுமாடன் மனைவியுடன் கலந்தாலோசித்துவிட்டு குழந்தைக்கு 'முத்துக்குட்டி' என்ற பெயரைச் சூட்டினார்.

புத்திசாலி இளைஞர்
முத்துக்குட்டி வளர்ந்தார். இளமையிலேயே நல்ல அறிவுக்கூர்மை உடையவராக இருந்தார். அவர் வாழ்ந்த பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டது. அங்கே சாதிக்கொடுமைகளும், சமூக அநீதிகளும் தலைவிரித்து ஆடின. ஆனால் அதனை எதிர்த்துக் கேட்க அஞ்சி மக்கள் பயந்து வாழ்ந்தனர். இது கண்டு மனம் வருந்தினார் முத்துக்குட்டி. தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த அவருக்கு, மிக அழகாகப் பாடல் புனையும் ஆற்றல் கைவந்தது. எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், ஏன் எதற்கு என்று கேட்டுச் சிந்திப்பவராகவும் மற்றவர்களைச் சிந்திக்கத் தூண்டுபவராகவும் அவர் இருந்தார். இளைஞர்களிடத்தே அவர் பேச்சுக்கு நல்ல மதிப்பு இருந்தது. சமத்துவத்தை வலியுறுத்திய அவர் அனைவரையும் சமமாக மதித்து அன்புடன் பழகினார். அவரது மேதைமையும் அறிவுத்திறனும் அவரை ஒரு தலைவராக அங்குள்ள மக்களுக்கு அடையாளம் காட்டின. அதனால் அவர்கள் அன்புடன் அவரை "அய்யா" என்று அழைத்தனர்.

திருமணம்
Click Here Enlargeமுத்துக்குட்டிக்குத் திருமண வயது வந்தது. பரதேவதை என்னும் திருமாலம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. இனிய இல்லற வாழ்வு துவங்கியது. அவருடன் அவள் கருத்தொருமித்து, எளிய வாழ்க்கை நடத்தினாள். ஆனாலும் உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலையில் குடும்பத்தை வறுமை வாட்டியது. வயல்களில் கூலிவேலை செய்து பிழைத்தனர். பனைமரம் ஏறுதல், கருப்பட்டி, பனைவெல்லம் காய்ச்சுதல் அங்கு முக்கியத் தொழில்களாக இருந்தன. அதுவும் அதிக காலம் நிலைக்கவில்லை. அருகில் உள்ள தோட்டம், துரவுகள் எல்லாம் அயல்சாதியினர் கையில் இருந்தன. சில குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தன. அதனால் முத்துக்குட்டி தம்பதியினருக்கு வேலை கிடைக்கவில்லை. வயிறு பிழைக்க வழியின்றித் தவித்தார் முத்துக்குட்டி அய்யா.

சித்திகள் வாய்த்தன
இந்நிலையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றும் ஒருவரது நட்பு அய்யாவிற்குக் கிடைத்தது. பூவண்டர் என்ற பெயர்கொண்ட அம்மனிதரின் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கிய அய்யா அதனை மேற்பார்வையிட்டும், தனக்குத் தெரிந்த வேலைகளைச் செய்தும் வாழ்க்கை நடத்தினார். எஞ்சிய நேரத்தில் தனியாக அமர்ந்து தியானம் செய்தார் யோகசித்திகள் கைவரப் பெற்றார். தீவிரமாகச் செய்த தியானம் அவருக்கு அஷ்டமாசித்திகளை வழங்கியது. ஆனால், அதனை யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக வாழ்ந்துவந்தார்.

அவரது ஆற்றலை உணர்ந்து கொண்ட மக்கள், பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கவேண்டி அவரை நாடினர். அவரிடம் ஆலோசனை கேட்டு நடந்தனர். அய்யாவும் அவர்களுக்குப் பல்வேறு வாழ்வியல் உண்மைகளை, வாழ்க்கைத் தத்துவங்களைப் போதித்து வழிநடத்தினார். இது உயர்குடியினருக்குச் சற்றும் பிடிக்காமல் போனது. பொறாமையும் சீற்றமும் கொண்ட அவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான அமைச்சரிடம் முறையிட்டனர். முத்துக்குட்டி அய்யாவை அந்த ஊரிலிருந்து வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.

"நிமிர்ந்து நில்!"
அந்த முயற்சிகள் பலிக்கவில்லை. அய்யாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. ஏழை எளியவர்கள் அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுத் திரளாக நாடி வந்தனர். தாங்கள் வேதனைகளையும், உயர்சாதியினர் சிலர் செய்யும் அவலங்களையும் சொல்லி அழுதனர். அய்யா மிகவும் வேதனையுற்றார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், "பிறப்பால் யாரும் உயந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை. இறைவன்முன் அனைவரும் சமமே!. எனவே அனைவரும் சுயமரியாதையுடன் வாழுங்கள். வேட்டி, துண்டைத் தாராளமாக அணியுங்கள். தலைப்பாகை கட்டுங்கள். ஆலயங்களுக்குச் சென்று தாராளமாக வழிபடுங்கள். உங்களைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று அறிவுறுத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் ஏற்பாடு செய்தார்.

மக்கள் அய்யாவின் அறிவுரையை ஏற்று நடக்க ஆரம்பித்தனர். தலைப்பாகை கட்டினர். எவரையும் கண்டு நடுங்காமல் நேருக்குநேர் நின்று பதில்கூற ஆரம்பித்தனர். அய்யா முத்துக்குட்டியே இதற்கெல்லாம் காரணம் என அறிந்த உயர்குடியினரில் சிலர், அம்மக்களிடையே பிளவை உண்டாக்கினர். ஆனால் அது நீடிக்கவில்லை. சண்டையிட்டவர்கள், சதியை உணர்ந்து ஒருங்கிணைந்தனர். அய்யாவின் வழியைப் பற்றி ஒற்றுமையுடன் வாழ ஆரம்பித்தனர்.

தீயோர் வைத்த தீ
இது பொறுக்காத உயர்குடியினர் சிலர், ஏவலாட்கள் மூலம் அம்மக்களின் குடிசைகளுக்குத் தீ வைத்தனர். அய்யா தங்கியிருந்த இடத்துக்குச் சென்ற ஏவலாட்கள், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவரைத் தாக்க முற்பட்டனர். அவரைக் கொல்லும் எண்ணத்துடன் ஒருவன் கத்தியைக் கையில் ஓங்கினான். ஆனால்... ஓங்கிய கை ஓங்கியபடி நின்றது. அவனால் கை, கால்களை அசைக்க முடியவில்லை. உணர்ச்சியற்றுச் சிலைபோல நின்றான். வெறியுடன் அவரைக் கொல்லக் கத்தியை ஓங்கியபடி ஓடிவந்த மற்றவர்களுக்குத் திடீரென்று கண்பார்வை பறிபோனது. ஒருவர்மீது ஒருவர் மோதிக்கொண்டு 'ஐயோ, அம்மா' என்று அலறிக் கீழே விழுந்தனர்.

கண் விழித்த அய்யா நடந்தவற்றை உணர்ந்து கொண்டார். 'இவர்கள் வெறும் அம்புகள், ஏவியவர்கள் வேறு எங்கோ உள்ளனர்' என்பதைப் புரிந்துகொண்டார். அவர்களின் நிலைக்கு மனமிரங்கினார். அவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். "அரகர சிவ சிவா அரகர சிவ சிவா" என்று பார்வை தெரியும்வரை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்குமாறு அவர்களிடம் ஆணையிட்டார். அவர்களும் அவ்வாறே பிரார்த்தனை செய்தனர். தீயை அணைத்திருந்த ஊர்மக்கள் செய்தி அறிந்து அங்கே வந்து சேர்ந்தனர். சினம் கொண்டிருந்த அவர்களை ஆறுதல்படுத்தினார் ஐயா.

சிறிது நேரத்திலேயே அய்யாவைக் கொல்ல வந்தவர்களுக்குப் பார்வை திரும்பியது. உடல் பழைய நிலைக்கு மீண்டது. அவர்கள், அய்யாவின் காலில் விழுந்து மன்னிக்குமாறு வேண்டினர். அய்யா அவர்களை மன்னித்தார். அவர்கள் அதுமுதல் அய்யாவின் அடியவர்கள் ஆகி அவரது புகழைப் பரப்ப ஆரம்பித்தனர். அது தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளம்வரை பரவியது. பலரும் அய்யாவைக் காண வண்டி கட்டிக்கொண்டு வந்து பார்த்து வணங்கிச் சென்றனர். எளிமையே உருவான அய்யா அனைவரிடமும் அன்புடன் நடந்து கொண்டார். அன்பையே போதித்தார். அவரது புகழ் மென்மேலும் பரவியது.

விஷமும் கொல்லாத வியப்பு
சிலர் இதுகண்டு பொறாமை கொண்டனர். எப்படியாவது பழிவாங்கத் துடித்தனர். கூட்டமாக அவரைப் பார்க்கச் சென்று, வஞ்சகமாக, தாங்கள் மனம் திருந்திவிட்டதாகவும், அறியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுமாறும் கூறி, அவர் காலில் விழுந்து அழுதனர். பிறர் மனத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் பெற்றிருந்த அய்யாவிற்கு அவர்களின் சூழ்ச்சி புரிந்தது என்றாலும் அமைதியாக இருந்தார். அவர்கள் அய்யாவை தங்கள் பகுதியில் நடக்கும் விருந்துக்கு அழைத்தனர். அய்யா மறுப்பேதும் சொல்லாமல் கலந்துகொண்டார். அந்த வஞ்சகர்கள், விருந்தில் விஷம் கலந்த உணவை அய்யாவிற்குப் பரிமாறினர். அய்யாவும் அதனை எந்தவித மனமாறுபாடும் காட்டாமல் உண்டார். ஆயினும் அவர்கள் எதிர்பார்த்தபடி அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை. "அவர் இறந்து போய் விடுவார்; இனி தங்கள் ராஜ்யம்தான்!" என்று மனக்கோட்டை கட்டிய சிலருக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டது. அவர்கள் பயந்து அவ்விடம் விட்டு ஓடிப் போயினர்.

அய்யா தன் இருப்பிடம் திரும்பி, வழக்கம்போல் தன் பணிகளைத் தொடர்ந்தார். சில மாதங்கள் சென்றன. திடீரென நோய்வாய்ப்பட்டார் அய்யா. அது பல நாட்களுக்குத் தொடர்ந்தது. எந்த மருந்துக்கும் குணமாகவில்லை. உள்ளூர் மருத்துவர்களும் கைவிட்டனர். யாவரும் செய்வதறியாது திகைத்திருந்த வேளையில், அய்யாவின் தாய் வெயிலாளுக்கு ஒரு கனவு வந்தது. அதில் முத்துக்குட்டி அய்யாவை திருச்செந்தூருக்கு அழைத்து வரும்படி உத்தரவு வந்தது. அங்கு வந்தால் நோய் குணமாகிவிடும் என்றும் ஆணை கிடைத்தது. அதன்படி அன்னை வெயிலாளும், சில உறவினர்களும், படுத்த படுக்கையாய்த் தன்னுணர்வற்றுக் கிடந்த அய்யாவை தொட்டிலில் தூக்கியும், கட்டிலில் சுமந்தும் மிகுந்த கஷ்டப்பட்டு திருச்செந்தூருக்கு அழைத்து வந்தனர்.

செந்தூர் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே அய்யாவின் நோய் குணமாகத் தொடங்கியது. அவர் முன்போல் எழுந்து நடமாட ஆரம்பித்தார். இறைவனின் கருணையை எண்ணி அன்பர்கள் அனைவரும் வியந்து கொண்டிருந்த வேளையில், அய்யா ஆலயத்துக்குள் சென்றார். இறைவனை வணங்கினார். பின் கோயில் கொடிமரம் அருகே அமர்ந்து மௌன நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். வெகுநேரம் கழித்தே அவர் கண்களைத் திறந்தார். உணவை மறுத்தார். தன்னை மறந்த தவத்தில் திளைத்தார். நாட்கள் சென்றன.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com