"அமெரிக்காவின் சாஃப்ட்வேர் உலகில் லேப்டாப்பே கதி என்றிருந்தேன். அது பிடிக்கவில்லை. இதயத்தைக் கேள், அது சொல்லும்படி செய் என்றார்கள். அதைக் கேட்டேன். அது 'லப் டப்' என்றது. தமிழ் சினிமாவின் அடுத்த விவேக்காகிவிட வேண்டும் என்று என் நண்பர்கள் ஒரு பார்ட்டியில் முன்மொழிய, நானும் வழிமொழிந்து உறுதி பூண்டேன்" என்று கலையுலகத் தொடக்க காலத்தை விவரிக்கிறார் அலெக்ஸ். சாலமன் பாப்பையாவிலிருந்து ஜிம் கேரி வரைக்கும் இவரது நகைச்சுவை உணர்வைப் பட்டை தீட்டினார்கள். அதுவும் தவிர, சிலிக்கன் வேலி காலத்தில் தபலா, கர்னாடக இசை என்று பிற திறன்களையும் வளர்த்துக்கொண்டார்.
2000 ஆண்டின் தொடக்கத்தில் தில்லானா கலை இரவுகளும், தமிழ்மன்ற மேடைகளும், 'நாடக்' நாடகங்களும், லோட்டஸ் மேடைகளும் இவரைக் கலிஃபோர்னியா விரிகுடாப்பகுதியின் மிகப் பரிச்சயமான முகமாக ஆக்கியது. கலையார்வம் உந்தித் தள்ள, புறப்பட்டார் இந்தியாவுக்கு.
சிலிக்கான வேலியிலிருந்து கார்டன் சிட்டி சென்றாயிற்று. கல்யாணம் ஆனது, குழந்தைகள் பிறந்தன. "ஒருநாள், என் மனைவி 'பதினஞ்சு வருஷம் வேலை செஞ்சுட்ட. ஒரு வருஷம் பிரேக் எடுத்துக்கிட்டு பிடிச்சதைச் செய்துட்டு, பிறகு விட்ட இடத்திலேர்ந்து பிடிச்சிக்கலாமே' என்று ஒரு பிட் போட்டாள்," நினவுகூர்கிறார் அலெக்ஸ். அப்போது ஏற்பட்ட திடீர்த் துணிச்சலில் "வந்தால் மலை. போனால்... கலை" என்ற சூளுரையோடு கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டார் அலெக்ஸ். இப்போது அவர் முழுநேர காமெடியன்!
எதையும் சிரிக்கும்படிச் சொல்லுகிற திறமையும், சிலிக்கன் வேலி காலத்தில் கேட்ட இளையராஜா பாடல்களும், இனிய குரலும் இன்றைக்கு அவரை மிகப் பிரபலமான Stand up Comedian ஆக்கியிருக்கின்றன. சென்னை, பெங்களூர் அரங்குகளில் இவரைக் கேட்டு ரசிக்க மக்கள் திரளாக வருகிறார்கள். விரசம் இல்லாத இயல்பான இவரது நகைச்சுவை குழந்தைகளையும் கவருகிறது. இவரை One Man Orchestra என்று சொல்வதும் பொருத்தமே. இப்படித் தன்னை நிரூபித்துக் கொண்ட அலெக்ஸ் மீண்டும் வருகிறார் அமெரிக்காவுக்கு. பாட்டும், கதையும், சிரிப்புமாக இரண்டு மணிநேரம் பறந்துபோகும் அலெக்ஸின் அதிசய உலகத்தில். தவற விடாதீர்கள்.
Alex in Wonderland சுற்றுப்பயணம் பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 8 வரை அமெரிக்காவின் 18 நகரங்களில் நடக்கவிருக்கிறது.
பயண விவரம் மற்றும் டிக்கெட்டுகளுக்கு: www.AlexInWonderland.in
உங்கள் கருத்துக்கள் பதிவிட: www.facebook.com/ilikeslander/reviews
சுற்றுப்பயண மேலாண்மை: US - aiwusa2018@gmai.com; India - est@evam.in;
அலெக்ஸைத் தொடர்பு கொள்ள: team@alexanderthecomic.com
தொகுப்பு: மதுரபாரதி |