மகரிஷி
'வார்த்தைகளைக் கொட்டி, வார்த்தைகள் எழுப்புகிற உணர்ச்சி வசப்படாமலிருக்கிறார் எழுத்தாளர் மகரிஷி. இதையே இன்றைய தமிழில் உள்ள படைப்பு நிலையில் ஒரு தனிச் சிறப்பாகச் சொல்லலாம்' என்று இலக்கிய விமர்சகர் க.நா.சு.வால் பாரட்டப்பட்டவர் மகரிஷி. இயற்பெயர் டி.கே. பாலசுப்ரமணியம். இவர், மே 1, 1932ல் தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், டி.என். கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்பருவத்திலேயே எழுதத் துவங்கிவிட்டார். சமுதாய நிகழ்வுகளும், வறுமை மற்றும் வாழ்க்கைச் சூழல் இவரை எழுதத் தூண்டின. இந்து மதத்தின்மீது கொண்ட பற்றாலும், ஞானிகள்மீது கொண்ட பெருமதிப்பாலும் 'மகரிஷி' என்ற புனைபெயரில் எழுத ஆரம்பித்தார். பாரததேவி பத்திரிகை நிறுவனரான ராமரத்தினம் இவரது தந்தைவழி உறவினர். அவரது வாழ்க்கையும் நெறிமுறைகளும் இவருக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தன. இவரது முதல் படைப்பு 'பனிமலை' 1962ல் வெளியானது. மதுரையைச் சேர்ந்த மீனாட்சி புத்தக நிலையம் இதனை வெளியிட்டது.
தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், பத்திரிகைத் தொடர்கள் யாவும் எழுதினார்.

மின்சார வாரியத்தில் வேலை செய்தபடியே ஓய்வுநேரத்தில் எழுதினார். பணியிட மாறுதல்களும், சந்தித்த மனிதர்களும், அனுபவங்களும் அவர்தம் பிரச்சனைகளும் இவரை எழுத வைத்தன. கல்கி, தினமணிகதிர், ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள், தொடர்கள் வெளியாகிப் புகழ் சேர்த்தன. 'ஒரத்தநாட்டிற்குச் சமர்ப்பணம்' என்ற இவரது கட்டுரை அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்ட ஒன்று. இவரது படைப்புகளில் மிகவும் முக்கியமானதாக 'ஸ்படிகம்' குறுநாவலைச் சொல்லலாம். காந்தியக் கொள்கைகளின் பெருமையைப் பேசும் இப்படைப்பு கல்கியில் வெளியானது. இதனைப் பிரபல மொழிபெயர்ப்பாளரான ஆன்டி சுந்தரேசன் 'Pure As a Crystal' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரே தெலுங்கிலும் இதனை மொழிபெயர்த்திருக்கிறார்.

'மகாநதி', 'உயிர்த்துடிப்பு', 'மேகநிழல்', 'எதிர்காற்று', 'புழுதிப் புயல்', 'இலையுதிர்காலம்', 'காந்தமுனை', 'அக்கினி வளையம்', 'அண்ணா', 'ஒன்றுக்குள் ஓராயிரம்', 'துயரங்கள் உறங்குவதில்லை', 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு', 'ஒரு முன்பனிக்காலம்', 'பனிப்போர்', 'புதிய பூ', 'ஜோதி வந்து பிறந்தாள்', 'நிழலைத் தேடியவர்கள்', 'வண்டிச்சக்கரம்', 'பாடிப் பறந்தவள்', 'தேர்க்கால்', 'வாழ்ந்துகாட்டுவோம் வா', 'விட்டில் அணைத்த விளக்கு' போன்ற இவரது படைப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இவரது முக்கியப் படைப்பான 'பனிமலை', 'என்னதான் முடிவு?' என்ற தலைப்பில் திரைப்படமாக வெளியாகி ஜனாதிபதி பரிசு பெற்றது. 'பத்ரகாளி' திரைப்படத்தின் கதை இவருடையதுதான். நடிகர் ரஜினிகாந்திற்குத் திருப்புமுனை ஏற்படுத்திய 'புவனா ஒரு கேள்விக்குறி'யும் இவருடையதே! ஜெயலலிதா நடித்த கடைசிப் படமான 'நதியைத் தேடிவந்த கடல்' இவரது கதைதான். 'வட்டத்துக்குள் சதுரம்', 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' போன்ற திரைப்படங்களின் கதைகளும் இவருடையனவே. தமிழ்த் திரையுலகில் இதுவரை அதிகம் திரைப்படமானது இவரது கதைகளே! 'பூர்ணிமா' என்ற இவரது நாவல் முக்கியமானது. இது தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாகிப் புகழ்பெற்றது. 'அண்ணா', 'பட்டுக்குடை', 'செல்லியம்மன் திருவிழா', 'சத்தியசோதனை' போன்றவை இவரது பிற முக்கியமான தொலைக்காட்சித் தொடர்களாகும். 'சூரியப் பாதை', 'வீரசுதந்திரம்' போன்றவை குறிப்பிடத்தகுந்த வானொலித் தொடர்களாகும். இவரது கதைகள் மற்றும் படைப்புகளின் பல பகுதிகள், சம்பவங்கள் இவரது அனுமதியில்லாமலே திரைப்படங்களிலும், தொலைக்காட்சிப் படைப்புகளிலும் எடுத்தாளப்பட்டதும் உண்டு. பஞ்சபூதங்களின் பின்னணியைத் தலைப்பாகக் கொண்ட 'மண்ணின் மாண்பு', 'மகாநதி', 'அக்னி வளையம்', 'எதிர்காற்று', 'மேக நிழல்' போன்ற படைப்புகள் முக்கியமானவை. 'புதிய அர்த்தங்கள்' என்ற நாவல் நவீன யுகத்தின் சிக்கல்களைப் பேசுகிறது.

பெண்ணியம், குடும்ப உறவுகள், தன்னம்பிக்கை, அறம் போன்றவற்றை வலியுறுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்துள்ளன. புரட்சிகரமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. பெண்ணியச் சிந்தனைகளை அந்தக் காலத்திலேயே எழுதியவர். மத்தியதரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது பல நாவல்களில் முன்வைத்திருக்கிறார். இவரது கதை மாந்தர்கள் மத்தியமர்கள். எளிமையானவர்கள். வாழ்க்கையை, பண்பாட்டை, கலாசாரத்தை மிகைப்படுத்தாது சித்திரிப்பவை என்று இவரது படைப்புகளை மதிப்பிடலாம். இவற்றை ஆராய்ந்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது சில படைப்புகள் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன.

"சிறுகதைகளுக்கு இலக்கணம் என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது. ஒவ்வொரு தலைசிறந்த எழுத்தாளர்களின் கையில் அது ஒவ்வொருவிதமாக வெளிப்பட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது" என்கிறார் மகரிஷி. மௌனி, தி. ஜானகிராமன், ந. பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம் போன்றோர் இவரது மனங்கவர்ந்த எழுத்தாளர்கள். அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனை எழுத ஊக்குவித்தவர், அவரது வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் மகரிஷி.

300க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல், சமுக விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கல்கி சிறுகதைப் போட்டிப் பரிசு, எழுத்துச் சித்தர் விருது, நாவல் திலகம், நாவல் மணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். கவியோகி சுத்தானந்த பாரதியார் 'நாவல் மகரிஷி' என்ற பட்டத்தை இவருக்களித்து கௌரவித்திருக்கிறார். Salem Metro Jaycees என்ற அமைப்பு, இவருக்கு Man of Excellence of Salem என்ற விருது வழங்கியது.

குடும்பத்தினருடன் சேலத்தில் வசித்துவரும் மகரிஷி, 85 வயதைக் கடந்து இன்றும் சுறுசுறுப்பாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com