சுவாமி ஐயப்பன் மீதான பக்தியிசை நிகழ்ச்சிகளின் வரிசையை தத்-த்வம்-அஸி-17 என்பதாக ஸ்ருதிலயா அறக்கட்டளை தொடங்கியுள்ளது. கார்த்திகை மாதம் முதல் நாளன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி சுமார் மூன்றரை வார காலத்துக்குப் பல இடங்களில் நடைபெற்றது. பிரபல பக்திப் பாடகர் கலைமாமணி வீரமணி ராஜு தனது இசைக்குழுவினருடன் சென்னையிலிருந்து வந்திருந்து பாடி, அமெரிக்க பக்தர்களை பக்திக்கடலில் ஆழ்த்தினார்.
டெட்ராயிட் (மிச்சிகன்), ஹூஸ்டன் (டெக்சஸ்), சிகாகோ (இல்லினாய்ஸ்), செயின்ட் லூயி (மிசௌரி), போர்ட்லாந்து (ஆரிகன்), சியாட்டில் (வாஷிங்டன்), டாம்பா (ஃப்ளோரிடா), நியூ ஜெர்சி (நியூ ஜெர்சி), மேரிலாந்து (டி.சி.) ஆகிய நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. "இதுதான் இந்தத் தொடரின் தொடக்கம். வரும் ஆண்டுகளிலும் இதனை நடத்த விரும்புகிறோம். அமெரிக்காவில் வளரும் தலைமுறைக்கு நமது பாரம்பரியம் சென்றடைய வேண்டும்" என்கிறார் ஸ்ருதிலயா அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான ஜெயராஜ் நாராயணன்.
மேலும் அறிய விரும்புவோர் தொடர்புகொள்க: music@sruti-laya.com
செய்திக்குறிப்பிலிருந்து |