சிகாகோ: தங்கமுருகன் விழா
டிசம்பர் 9, 2017 அன்று சிகாகோ பெருநகர் இந்துக் கோவிலில், ஶ்ரீ சுப்பிரமணியசுவாமி உத்சவத்தில் தங்கமுருகன் விழாவை சுமார் ஆயிரம் அன்பர்கள் பக்தியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். விடியலில், திருப்பள்ளி எழுச்சி பாடி, பால்குடம் எடுத்தனர். லெமாண்ட் முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தேறியது. அவ்வேளையில் திருப்புகழ், சஷ்டிகவச பாராயணம் ஓங்கி ஒலித்தது. சிறுவரும் பெரியவர்களும் காவடி எடுத்துவர, பல்லக்கில் ஊர்வலமாய், வாத்திய இசையுடன் உற்சவமூர்த்தி பவனிவந்தார். கோவில் தர்மகர்த்தா திரு. சதீஷ் மருதூர் வரவேற்புரை வழங்கினார். அரங்க மேடையின் இடதுபுறம் முருகன் கொலு வீற்றிருக்க ஆரம்பமானது 17ம் ஆண்டு தங்கமுருகன் விழா.

இந்தியாவில் இருந்து வந்திருந்த திரு. ச. நமச்சிவாயம் தலைமையில், அவரது மகள் திருமதி. கலைவாணி சோமசுந்தரம் விளக்கேற்றி வைக்க, கலைவிழா தொடங்கியது. ஆரம்ப அம்சமாக ராஜ அலங்காரத்துடன் சிறுவன் மேடையேறிய தருணம், திருச்செந்தூர் முருகனே வந்தானோ என்ற ஐயமேற்பட்டதென்றால் மிகையல்ல. கிட்டதட்ட 250 சிறுவர், சிறுமியர் பல்வகை கலைநிகழ்ச்சிகளை முருகனுக்குச் சமர்பித்தார்கள். பஜன், பரதம், குறவஞ்சி, கர்நாடக இசை, வாத்திய இசை, சொற்பொழிவு, மழலையர் பாடல் எனத் தொடர்ந்து 12 மணிநேரம் சுமார் 1,000 பேர் பார்த்துப் பரவசமடைந்தனர்.

இந்த ஆண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர் ஔவையாரை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடந்தன. அவரது விநாயகர் அகவலுக்குத் தியான மார்க்கத்தில் பொருள் கூறி விளக்கினார் திரு. இராமசாமி. ஆறுவயதுக் குழந்தை ஒன்று, குட்டி கிருபானந்த வாரியார் போலக் கதாகாலட்சேபம் பண்ணிப் பிரமிக்க வைத்தான். அதே குழந்தை சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று பேசி நடித்துப் பாராட்டும் பெற்றான். ஔவையாக நடித்தார் திருமதி. பூமா சுந்தர். எட்டு வயதுக்குட்பட்ட 30 குழந்தைகள், முருகனாகவும், வள்ளி தெய்வானையாகவும் வேடம் அணிந்து 'Little Muruga Show' என்னும் பகுதியில், அணிவகுத்தது கண்கொள்ளாக் காட்சி. பக்கவாத்தியங்களுடன் கந்தர் அனுபூதி பாராயணம் அருமை. 'குறும்பு முருகன்' என்னும் தலைப்பில், முருகன் தீப்பொறியில் தோன்றியது முதல் வள்ளியை மணம்புரிந்தது வரை சுமார் 60 சிறுவர் சிறுமியர் மேடையில் நிகழ்த்திக் காட்டினர்.

தன் குரலினால் நாதஸ்வர ஒலி எழுப்பி மகிழ்வித்தார் திருமதி. மினு கார்த்திக். குறத்தி நடனம் பிரமாதம். சிகாகோவில் இசை மற்றும் நாட்டியப் பள்ளி நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பங்கேற்க உதவினர். விழாத்தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன் ராமசுவாமியின் நன்றி நவில விழா இனிதே முடிந்தது.

குழலி முத்து,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com