டிசம்பர் 10, 2017 அன்று அட்லாண்டா ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவிலில், ராகபாவம் அமைப்பு வழங்கிய இசை நிகழ்ச்சியில் வளரும் இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தனர். பிற திறன்வாய்ந்த பெரியோரும் அருமையாகப் பாடினர்.
செல்வி. ப்ரணவி பிரசன்னாவின் வாய்ப்பாட்டுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. செல்வன். ஸ்கந்த பரத்வாஜ் (வயலின்), செல்வன். அனிருத் நாராயணன் (மிருதங்கம்) பக்கம் வாசித்தார்கள். ப்ரணவி மாயமாளவகௌளையில் பாடிய 'துளசிதல' வெகு அழகு.
அடுத்துப் பாடிய செல்வன். சித்தார்த் கௌசிக் நளினகாந்தியில் "நதஜன பாலினி", தர்பாரி கானடாவில் "கோவர்தன கிரிதாரி" இரண்டையும் அருமையாகப் பாடிக் கைதட்டலை அள்ளினார். வயலினில் குமாரி. ஸ்ரீ வரதராஜனும், மிருதங்கத்தில் செல்வன். அனந்த் ராஜனும் அழகாக வாசித்தார்கள். அனந்த் ராஜனின் தனி அருமை.
தொடர்ந்து திரு. பிரசாந்த் கிருஷ்ணமூர்த்தி பாடிய முத்துஸ்வாமி தீட்சிதரின் லலிதா ராக "ஹிரண்மயீம் லக்ஷ்மி"யில் "கீதவாத்ய விநோதினி" வரியில், நிரவலும் கல்பனா ஸ்வரம் பாடியது அமர்க்களம். புரந்தரதாசரின் "சலஹோ ஸ்வாமி" ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது. பக்கவாத்தியமாக திரு. சந்தோஷ் சந்துரு (மிருதங்கம்), திரு. அஸ்வின் கல்யாண் (வயலின்), செல்வன். அனந்த் ராஜன் (கடம்) அருமையாக வாசித்தனர்.
பின்னர், திரு. ஸ்ரீராம் கல்யாணராமன் வீணை வாசித்தார். சங்கராபரண ராகத்தில் "மஹாலக்ஷ்மி ஜகன்மாதா"வில் நிரவல் மற்றும் கல்பனா ஸ்வரம் மிக அருமை. பாரதியாரின் "தீராத விளையாட்டுப் பிள்ளை" மனதைக் கவர்ந்தது. அனுசரணையாக திரு. சந்தோஷ் சந்துரு (மிருதங்கம்), திரு. தேஜஸ் வீதுலூர் (கடம்) வாசித்தார்கள் மொத்தத்தில் நிறைவான நிகழ்ச்சி.
பத்மா மணியன், அட்லாண்டா |