டிசம்பர் 10, 2017 அன்று நியூஜெர்சி மாநிலம் எடிசன் நகரில், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. ஜான் ஆடம்ஸ் நடுநிலைப் பள்ளிக் கலையரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளில், 3 முதல் 15 வயது வரையிலான சுமார் 125 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் காலையில் நிகழ்ச்சி துவங்கியது. பள்ளி முதல்வர் சாந்தி தங்கராஜ் தமது வரவேற்புரையில் நடக்கவிருக்கும் போட்டிகளுக்கான நடுவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
3 முதல் 4 வயது வரையிலான மாணவர்கள் மாறுவேடப் போட்டியில் உழவன், கண்ணகி, ராஜராஜ சோழன், அரசி வேலுநாச்சியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இன்னபிற ஆளுமைகளின் வேடம் பூண்டு முகபாவனையோடு குறுவசனம் பேசிக் கலக்கினர். 5 முதல் 6 வயது வரையிலான மாணவர்கள் ஆத்திசூடி ககர வருக்கம், சகர வருக்கத்திலுள்ள 23 பாக்களை ஒரு நிமிட அவகாசத்திற்குள் இயன்றவரை பொருள் விளக்கத்தோடு ஒப்பித்தனர்.
7 முதல் 8 வயது வரையிலான மாணவர்கள் அறத்துப்பால், பொருட்பால் பிரிவுகளிலிருந்து ஏதேனும் ஒரு குறளை கூறி, அதனை அடிப்படையாகக் கொண்ட நீதிக்கதையைச் சொன்னார்கள். 9 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்குத் திருக்குறள் விளையாட்டு நடைபெற்றது. மாணவர்கள் வரிசையாக நின்று, ஒருவர்பின் ஒருவராகக் கொடுக்கப்பட்ட 30 குறட்பாக்களிலிருந்து ஒன்றைத் தத்தம் முறை வரும்போது ஒப்பிக்க வேண்டும். பிறர் கூறிய குறளை மீண்டும் ஒப்பித்தால் நீக்கப்படுவர்.
பேச்சுப்போட்டிகளில், 11 முதல் 12 வயது வரையிலான மாணவர்கள், "சமூகத்தில் என்ன மாற்றம் வேண்டும்?", "அன்றைய தலைவர்கள் இன்று இருந்தால்…" ஆகிய தலைப்புகளிலும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், "உலக வெப்பநிலை, ஒரு வெட்க நிலை!", "அழியும் உயிரினங்களின் கூக்குரல்" ஆகிய தலைப்புகளிலும் பேசினர். பங்கேற்ற மாணவர்களுக்குப் பதக்கமும், வெற்றிபெற்றோருக்குச் சான்றிதழும், பணப்பரிசும் அளிக்கப்பட்டன.
பின்னர், பெரியவர்களுக்கான 'கேள்வி நேரம்' நடத்தப்பட்டது. தமிழ்நாட்டு வரலாறு, தமிழ் அரசர்கள்/தலைவர்கள், வரலாற்றுச் சின்னங்கள், தமிழ்த் திரைப்படங்கள், கலை, இலக்கியம் எனப் பல துறைகளிலிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
முதல்வர் சாந்தி தங்கராஜ், துணைமுதல்வர் லட்சுமிகாந்தன் இருவரும் முன்னின்று, பிற ஆசிரியர்கள், பெற்றோர்களின் துணையோடு, அனைத்துக் குழந்தைகள் போட்டிகளையும் நடத்தினர்.
இறுதியில், துணைமுதல்வர் லட்சுமிகாந்தன் நன்றியுரை ஆற்றினார்.
2010-ஆம் ஆண்டில் லாப-நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்ட எடிசன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி நியூ ஜெர்சியில் வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்களின் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்து வருகிறது. தற்போது, 100 தன்னார்வலர்களின் உதவியுடன் சுமார் 575 மாணவர்களுக்குத் தமிழைப் பேச, படிக்க, எழுத உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு: www.jerseytamilacademy.org
பார்த்திபன் சுந்தரம், எடிசன், நியூ ஜெர்சி |