மஹாபெரியவர் ஆராதனை மஹோத்சவம்
2017 டிசம்பர் 14 முதல் 17 தேதிவரை ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவரின் ஆராதனை மஹோத்சவம் சான்ட க்ளாரா, கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள ஸ்ரீ காமாக்ஷி சமுதாய மைய அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. தினமும் மாலையில் 75க்கும் மேற்பட்ட ரித்விக்குகளின் ஏகாதச ருத்ரஜபம், மஹாபெரியவர் திருமூர்த்திக்கு அபிஷேகம் ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.

9 மற்றும் 10 தேதிகளில் காலையும் மாலையும் ஏகாதச ருத்ர ஜபங்கள் நடைபெற்றன. மஹாபெரியவர் ஆராதனை தினமான 14ம் தேதியன்று மிகப்பெரிய அளவில் மஹோத்சவ வைபவம் ஏராளமான பக்தர்களால் சிறந்தமுறையில் கொண்டாடப்பட்டது.

16ம் தேதி அன்று மஹோத்சவம் மில்பிடாஸில் அமைந்துள்ள சிலிகான் ஆந்திரா பல்கலைக்கழக அரங்கில் தொடர்ந்தது. காலையில் மஹாபெரியவரின் அபிஷேகத்துடன் ஆரம்பித்த உத்சவம், விரிகுடாப்பகுதியின் தலைசிறந்த சங்கீத குருமார்களின் சங்கீத ஆராதனையுடன் தொடர்ந்தது.

மஹோத்சவத்தின் முக்கியப் பகுதியாக மஹாபெரியவர் திருமூர்த்தி, திருத்தேரில் வீதியுலாவாக சண்ட வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. தேரின் இரு மருங்கிலும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் கட் அவுட்கள் அலங்கரித்தன. தேரின் முன்னால், நகரும் பீடத்தின் மேல் அமைக்கப்பட்ட மஹாபெரியவரின் திருவுருவ கட்-அவுட், பக்தர்களுக்கு நடுவில் மஹாபெரியவரே நடந்து வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. காஞ்சி காமகோடி பீடத்தின் முந்தைய 67 ஆசார்யர்கள் மற்றும் இன்றைய ஆசார்யர்களின் திருவுருவ ப்படங்களை ஏந்திக்கொண்டு 70 சிறார்கள் ஊர்வலத்தின் முன்னே அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலம் மஹா ஆரத்தியுடன் முடிந்து. பக்தகோடிகளுக்கு மஹா பிரசாதம் வழங்கி நிறைவடைந்தது.

இடைவேளைக்குப் பிறகு மஹோத்சவம் விரிகுடாப்பகுதி பள்ளி மாணவர்களின் சங்கீத சேவையுடன் நாள் முழுவதும் தொடர்ந்தது.

ஞாயிறு 17ம் தேதி அன்று ஸ்ரீ காமாக்ஷி கம்யூனிடி சென்டர் திருக்கோவிலில் மஹோத்சவம் தொடர்ந்தது. காலையில் சங்கீத சேவையுடன் தொடங்கி மாலையில் நியூ ஜெர்சி சுவாமிநாத பாகவதரின் மஹாபெரியவர் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியுடன் இனிதே முடிவுற்றது.

மஹாபெரியவரின் திருமூர்த்தியுடன், அவரது செப்புத் திருப்பாதுகைகளுக்கும் தினமும் ஏகாதச ருத்ர அபிஷேகம் பூஜைகள் முதலியன செய்யப்பட்டன. முடிவில் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.

K. கோபாலகிருஷ்ணன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com