கூப்பர்டினோ இந்திய சமுதாய மையத்தில் (India Community Center) நான் 15 வருடங்களாக அங்கத்தினராக இருந்து வருகிறேன். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் இங்கே நிகழ்ச்சிகள் நடைபெறும். அவை காலை 11.00 மணிக்கு ஆரம்பித்து 1.00 மணி அளவில் முடிவடையும்.
மாதம் ஒருமுறை FOSWL meeting பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அறிஞர்கள் வந்திருந்து மனங்கவரும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுவர். வெள்ளிக்கிழமைகளில் யோக வகுப்புகள் நடக்கின்றன. கூப்பர்டினோ மியூசிக் சர்க்கிள் நிகழ்ச்சியில் ஹிந்தி, தமிழ், மராட்டி, கன்னடம், சம்ஸ்கிருதம், பெங்காலி, குஜராத்தி ஆகிய மொழிகளில் பக்திப்பாடல் பாடச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. புதன்கிழமை நிகழ்ச்சிகளில் பாடல், பேச்சு, நகைச்சுவைப் பேச்சு உண்டு. தவிர, அறிஞர்கள் சங்கீதம், விஞ்ஞானம், அரசியல், மருத்துவம், இலக்கியம் எனப் பலவிதத் தலைப்புகளில் தமது வாழ்க்கை அனுபவங்களைப் பேசி அசத்துகின்றனர்.
வியாழக்கிழமைகளில் நூல் விமரிசனம், கேள்வி-பதில் ஆகியன நடைபெறுகின்றன. சில வாரம் திரைப்படப் பாடல்கள், திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. பாடத் தெரிந்தவர்கள் கூடச் சேர்ந்து பாடவும் சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது. வெளியிலிருந்து சங்கீத, நாட்டியப் பள்ளிச் சிறுவர், சிறுமிகள், நிகழ்ச்சிகள் வழங்குவர். தீபாவளி, பொங்கல், நவராத்திரி, ஹோலிப் பண்டிகை சமயங்களில் அவை பற்றிய வர்ணனை, நாடகம், ஆடல் பாடல் யாவும் நடத்தப்படும். ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இருந்து சம்பவங்களைத் தொகுத்து கதாபாத்திரங்களாக வேடமிட்டு அங்கத்தினர்கள் நாடகமாக வழங்குகின்றனர்.
முதியோர் வீட்டில் தனியாக இருப்பதால் சிலருக்கு மன அழுத்தம், ஏக்கம், தனிமை போன்ற உணர்ச்சிகள் ஏற்படலாம். இங்கே வந்து சமவயதினருடன் மனம் விட்டுப் பேசி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் உடல்நிலை, மனநிலை ஆரோக்கியமாக இயங்கவும் பல பொதுவிஷயங்கள், நாட்டு நடப்பு ஆகியவற்றை அறிந்துகொள்ளவும் இந்திய சமுதாய மையம் உதவுகிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிஃபோர்னியா |