பூஜை முடியும்வரை காத்திருங்கள்!
ஒரு குருவிடம் சீடர்கள் பலர் இருந்தார்கள். ஒருநாள் அவர்களிடம் குரு, "நீங்கள் பூஜை அல்லது தியானம் செய்யும்போது, எந்தத் தடங்கல் வந்தாலும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். அவர்கள் குருவின் வார்த்தைக்கு மிகுந்த மதிப்புக் கொடுப்பவர்கள். சிஷ்யர்களில் சிலர் ஆசிரமத்திலேயே தங்கியிருந்தார்கள்.

குருவின் பிறந்தநாள் வந்தது. சீடர்களில் ஒருவர் அன்றைக்குக் குருவின் படத்துக்கு 108 மலர்கள் தூவி வழிபட எண்ணினார். மற்றொரு சீடர் குருவைத் தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். குரு வெளியே போகும்போது ஆசிரமத்தில் இருந்த சீடரிடம், கதவைத் தாளிட்டுக்கொண்டு பத்திரமாக இருக்கும்படிக் கூறிவிட்டுப் புறப்பட்டார். அன்று மிக வெம்மையான நாளாக இருந்தது. குருநாதர் பாதுகை அணிந்திருக்கவில்லை. அவருக்குத் தலையிலும் அதிக சிகை இருக்கவில்லை. எனவே வெப்பத்திலிருந்து பாதுகாப்பில்லை.

குரு திரும்பி வந்தார். ஒரே வெப்பம். வந்தவுடனே கதவு திறக்கப்பட வேண்டுமென விரும்பினார். உள்ளேயிருந்த சீடர் பூஜை செய்துகொண்டிருந்தார். குரு கதவைத் தட்டினார். "நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். அதற்கு எந்த இடையூறும் வரக்கூடாது. பூஜை முடியும்வரை காத்துக்கொண்டிருங்கள்" என்று பதில் கொடுத்தார் சிஷ்யர்!

இன்றைக்கு நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் இந்தச் சீடரைப் போலத்தான் இருக்கிறார்கள். யாருடைய கருணையை வேண்டிப் பூஜிக்கிறார்களோ அவரே வந்து வாசல்கதவைத் தட்டினாலும்கூட, படத்தைப் பூஜிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். இப்படிச் செய்வதால், பூஜிக்கப்படுபவருக்கே தீங்கு ஏற்படுத்தவும் தயாராக இருக்கிறார்கள்!

வழிபடுவதற்குக் கடவுளே நேரடியாகக் கிடைத்தாலும், ஏதேதோ செய்துகொண்டு, புரியாத, பொருளற்ற வழிகளில் ஈடுபட்டு, பூஜையில் தவறிவிடுகிறோம். வாழும் உயிர்களிலெல்லாம் தெய்வீகத்தைக் காணமுடியாதவன், உயிரற்ற படத்திலும் பேசாத கல்லிலும் கடவுளை எப்படிக் காண்பான்? முதலில் எல்லோரிடத்திலும் கடவுளைக் காண்பதென்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொண்டால், எல்லாவற்றிலும் திகழும் ஆத்மதத்துவம் ஒன்றே என்பது தெளிவாகிவிடும்.

நன்றி: சனாதன சாரதி, டிசம்பர் 2016

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com