எம். சிவசுப்பிரமணியன்
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். சிவசுப்பிரமணியன் என்னும் எம்.எஸ். (88) காலமானார். நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தைச் சேர்ந்த இவர், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். பல எழுத்தாளர்களின் பிரதிகள் செம்மையாக வெளிவர உதவி புரிந்திருக்கிறார். சொல்புதிது, புனைகளம், புது எழுத்து, கபாடபுரம், காலச்சுவடு எனப் பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பொன்னீலன் ஆகியோருக்கு உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் திகழ்ந்தவர். காலச்சுவடு உள்ளிட்ட பல இதழ்களுக்கும், பதிப்பக வெளியீடுகளுக்கும் இவர் பிரதி மேம்படுத்துநராக இருந்திருக்கிறார். இவர் மொழிபெயர்த்த எர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்' (நாவல்), ஸ்பானிஷ் எழுத்தாளர் ஃபெர்னான்டோ ஸோரென்டினோவின் 'ஆட்டுக் குட்டிகள் அளிக்கும் தண்டனை' (சிறுகதைத் தொகுப்பு), 'பாஸ்கரனின் ஜானு' (வாழ்க்கை வரலாறு), 'பேபி ஹால்தாரின் விடியலை நோக்கி' (சுய வரலாறு), மரியா ஸ்ரெஸ்ஸின் 'ஆதியில் பெண் இருந்தாள்' (ஆதிவாசிக் கதைகள்) போன்ற நூல்களைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.



© TamilOnline.com