முன்னுரை:ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்.
*****
கேள்வி: ஒரு நிறுவனம் ஆரம்பிக்க என்னிடம் ஒரு பிரமாதமான யோசனை உள்ளது; என்னுடன் சேர ஒரு குழுவும் உள்ளது. ஆனால், "அவசரப்பட்டு மூலதனம் திரட்டாதே; உடனே திரட்டினால் நிறுவனத்தில் பெரும்பங்கு மூலதனத்தாருக்கு அளித்துவிட வேண்டியிருக்கும்; கூடுமானவரை நிறுவனத்தை வளர்த்து, அதன் மதிப்பீட்டைப் பெருக்கிவிட்டு அப்புறம் திரட்டு" என்று தொழில்முனைவோர் சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். வேறு சிலரோ, மூலதனம் திரட்டினால்தான் சரியாக வளர்க்கமுடியும், இல்லாவிட்டால் மிகத் தாமதமாகி, வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்கிறார்கள்! நான் மிகக் குழம்பியுள்ளேன். எது சரி? மூலதனம் திரட்ட எது சரியான தருணம்? (தொடர்கிறது)
கதிரவனின் பதில்: சென்ற பகுதிகளில், எப்போது மூலதனம் திரட்டுவது என்று தீர்மானிப்பதில் பல அம்சங்கள் கூடியுள்ளன; உங்கள் நிறுவன வகை, குழுபலம், வணிகத்துறை, தற்போதைய வளர்ச்சிநிலை (current progress), போன்ற பல அம்சங்களையும் எடையிட்டு எது சரியான தருணம் என்று கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மேலும், மூலதனத்தாருக்குப் பெரும்பங்கு அளிக்க வேண்டி வந்தாலும் உடனே மூலதனம் திரட்டுவதற்கான சில காரணங்களையும் பார்த்தோம். சென்ற பகுதியில், நிறுவிய உடனேயே மூலதனம் திரட்டாமல் சற்றுத் தாமதிப்பதற்கான காரணங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டோம்.
இப்போது, வேறு எத்தகைய தருணங்களில் அதிக மூலதனம் திரட்டுவதைத் தாமதிப்பது நல்லது, மற்றும் பிற யுக்திகள் என்ன என்பவற்றைக் காண்போம்.
முக்கியமாக, உங்கள் நிறுவன யோசனையின்மேல் வெறும் குருட்டு விசுவாசம் மட்டுமில்லாமல், வாடிக்கையாளர் ஆதரவை ஓரளவுக்காவது திரட்டி, உங்கள் நிறுவனத்துக்கான வணிகச்சந்தை அளவை குத்து மதிப்பாகவாவது கணித்த பிறகு அந்தப் புள்ளிவிவரத்தை ஆதாரமாக வைத்து மூலதனம் தேடுவதுதான் நல்லது. ஏனெனில், காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல் உங்களுக்கு அதீத ஆவேசம் இருப்பினும் உங்கள் யோசனையில் பழுது இருக்கலாம் அல்லவா? யோசனை ஒத்துவராது என்று தெரிந்துகொள்ள, அல்லது இருக்கும் சில பழுதுகளைச் சீர்செய்து கொள்ள வணிகச்சந்தை பரிசீலனை செய்வது அவசியம். அதற்குப் பொதுவாகச் சில மாதங்கள் ஆகலாம்.
அடியேன் நிறுவிச் செலுத்தும் நிறுவனத்தின் பெயர் The Fabric. இந்நிறுவனம், தொழில்முனைவோரோடு இணைந்து இயங்கி புது நிறுவனங்களைத் துவங்குகிறது. இதுவரை நான் தனிப்பட்ட முறையிலும், நிறுவனத்தின் மூலமும் பலப்பல நிறுவனங்களை நிறுவி, மூலதனம் இட்டுள்ளோம், மேற்கொண்டு மூலதனம் பெற்றும் உள்ளோம். ஒவ்வொரு முறையும், நிறுவனத்தின் யோசனைக்கு வணிகவாய்ப்பு என்ன என்று நாற்பது ஐம்பது வாடிக்கையாளர் மற்றும் வணிகத்துறைப் பங்காளர் (partner in the relevant market area) உரையாடல் மூலம் கணித்த பிறகே ஒரு டாலர் மூலதனமாயினும் திரட்டியுள்ளோம்.
சில தருணங்களில், அத்தகைய வணிகவாய்ப்புக் கணிப்பு சரிப்பட்டு வரவில்லை என்று நிறுவனத்தை ஆரம்பிக்காமல் இருந்ததுகூட உண்டு. அத்தகைய கணிப்பு தொழில்நுட்பம் சார்ந்ததே அல்ல. வணிகச்சந்தை அளவு என்ன; வாடிக்கையாளர்கள் யார்; அவர்களிடம் விற்பொருளைக் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் எவ்வளவு சுலபம் அல்லது கடினம்; விற்பனைக்கும் சந்தையாக்கலுக்கும் (marketing) எவ்வளவு செலவாகும் என்பது போன்ற பலதரப்பட்ட அம்சங்களைப் பற்றி விவரம் தேடி, அவை சாதகமாக அமைந்தாலே நிறுவனத்தை ஆரம்பித்து மூலதனம் இட்டுள்ளோம், திரட்டியுள்ளோம்.
அப்படியானால் அத்தகைய நல்விவரம் கிட்டும்வரை பட்டினி கிடக்க வேண்டியதுதானா என்று முணுமுணுக்கிறீர்களா? நல்ல கேள்விதான்!எனக்குத் தெரிந்து சில தொழில்நிறுவனர்கள் ஒரு பைசாகூடத் திரட்டாமல், பல மாதங்கள் முனைந்து நான் குறிப்பிட்ட வணிக விவரங்களைத் தேடி, பிறகே மூலதனம் திரட்ட ஆரம்பித்தனர். ஆனால் அது எல்லோருக்கும் சரிப்பட்டு வராதுதான். நிறுவனத்தில் தொழில்முனைவோர் சிலருக்கு மாதத்துக்குச் சில ஆயிரம் டாலராவது குடும்பசெலவுக்கு இல்லாவிட்டால் சரிப்பட்டு வராது.
பொதுவாகக் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரில் ஒருவராவது நல்ல பெருநிறுவன வேலையில் மாதாமாதம் கணிசமான ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தால், ஒரு பைசாகூட மூலதனமின்றிப் பயணிக்க இயலும். அல்லது, வேறு ஆரம்பநிலை நிறுவனம் ஒன்று வெற்றி பெற்றதால் ஒரு சிறு மூட்டையளவாவது(!) நிதி பெற்றிருந்தால் தாமே மூலதனமிட்டுச் செலவுகளை சில காலத்துக்குச் சமாளிக்க இயலும். மூன்றாம் வழி ஒன்று உள்ளது: தம் நிபுணத்துவத்தை அடிப்படையாக வைத்து வாரத்துக்குச் சில மணிகள் துறைச்சேவை (professional service) செய்து, அதில் கிடைக்கும் ஊதியத்தில் பிழைப்பை நடத்தி, மற்ற காலத்தில் சொந்த நிறுவனத்தை நடத்தவும் கூடும்.
இவ்வாறு மூலதனமே பெறாமல் நிறுவனத்தை ஆரம்பித்து முனைவதை boot-strapping என்று அழைப்பார்கள். ஆனால் இத்தகைய முனைப்பு சாத்தியமே இல்லை, சிறிதளவாவது மூலதனம் வேண்டும் என்றால் நிறைய பங்கிழப்பு (equity dilution) இல்லாமல் எப்படி திரட்டுவது? திரட்டிய சிறிதளவு மூலதனத்தில் நிறுவனத்தின் மதிப்பீட்டை எப்படிப் பெருக்குவது? அதற்கும் வழிமுறைகள் உள்ளன!
முதலாவதாக உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர், மற்றும் நண்பர்கள் குழாம் ஆகியோரிடம் சற்றே நிதி திரட்டி நிறுவனத்தில் உள்ள ஒரு சிலருக்கு மட்டும் சிறிதளவு ஊதியம் அளித்தல், கணினிகள் வாங்குதல், மேகக்கணினி செலவு போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம். வேறு பணவசதியுள்ள தனி நபர்களிடம் பணம் திரட்டலாம் – இதைத் தேவதை மூலதனம் (angel investment) என்று கூறுவார்கள். பொதுவாக உங்கள் வணிகத்துறையில் சற்று ஆர்வமும், திறனும் உள்ள நபர்களிடமிருந்து மூலதனம் பெறுவது நல்லது.
மேற்கூறிய இரு வழிமுறைகளிலும், உடனே நிறுவனத்தின் பங்கை மூலதனமிடுபவருக்கு அளிப்பதில்லை. அதற்கு பதிலாக ஒரு கடன் பத்திரத்தை அளிப்பது வழக்கம். ஆனால் அது பொதுவாக வெறும் கடனாக இருக்காது. நிறுவனம் அடுத்தமுறை பெருநிதி திரட்டும்போது பங்குககளாக மாற்றப்படும். ஆனால் கடனாகக் கிடைத்த மூலதனத்தை வைத்து நிறுவனத்தின் மதிப்பீடு உயர்வதால், அத்தகைய கடனுக்கு அனுகூலம் அளிப்பது இன்றியமையாதது. பொதுவாக அத்தகைய அனுகூலம் மூலதன மதிப்பீட்டுத் தள்ளுபடியாக அமையும். அதாவது, அடுத்த மூலதனச் சுற்றுக்கான மதிப்பீட்டில் 20 அல்லது 25 சதவிகிதம் தள்ளுபடி இருக்கும். அப்படியானால் ஒவ்வொரு பங்குக்கும் விலை குறைவதால், கடனளித்தோர் தொகைக்கு அதிகப் பங்குகள் கிடைக்கும்.
இப்படிக் குருவிபோலச் சேர்த்த மூலதனம் நிறுவனத்தின் மதிப்பை நன்கு உயர்த்த வேண்டுமானால் தாம்தூமென்று செலவழிக்காமல் சாமர்த்தியமாக நிறுவனத்தை நடத்தவேண்டும். இதற்கும் பல வழிகள் உள்ளன. அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |