யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 2)
புதுச்சேரியில் அரவிந்தர்
புதுச்சேரியில் அமைதியாகத் தமது ஆன்மிக, யோக சாதனைகளைத் தொடர்ந்தார் அரவிந்தர். நாளடைவில் முற்றிலுமாக அரசியல் தொடர்புகளை விட்டுவிட்டு மெய்ஞ்ஞான தவத்தில் ஆழ்ந்தார். தீவிர யோகசாதனை மேற்கொண்டு அதன் உச்சநிலையை அடைந்தார்.

ஸ்ரீ அன்னை
இந்நிலையில் மிர்ரா அல்ஃபாஸா என்னும் மிர்ரா ரிச்சர்டு தனது கணவர் ரிச்சர்டுடன் பாண்டிச்சேரி வந்தார். அரவிந்தரையே தனது ஆன்மீக குருவாகக் கண்டு அவரையே சரணடைந்தார். அவரது கடும் முயற்சியால் அரவிந்தர் ஆசிரமம் உருவாக்கப்பட்டது. மிர்ரா சாதகர்களால் அன்போடு ஸ்ரீ அன்னை என்று அழைக்கப்பட்டார். ஸ்ரீ அன்னையின் வருகைக்குப் பிறகு 'ஆர்யா' என்ற தத்துவ மாத இதழைத் தொடங்கினார் ஸ்ரீ அரவிந்தர். 'தெய்விக வாழ்க்கை' 'யோகங்களின் ஒன்றிணைப்பு', 'கீதைக் கட்டுரைகள்', 'ஈசா உபநிடதம்' போன்றவற்றை அவற்றில் தொடராக எழுதினார்.

பூரண யோகம்
"பரிணாமம் என்பது மனிதனோடு முற்றுப் பெறுவதில்லை. கல், தாவரம், மிருகம், மனிதன் என்ற படிநிலைகளில் அடுத்தநிலை நோக்கி மனிதன் சென்றாக வேண்டும். அதுதான் 'அதிமனிதன்' என்னும் உயர்நிலை. மனிதன் இதில் ஓர் இடைநிலைப் பொருளே!. அவனுக்கு அடுத்த பரிமாணம் நோக்கி என்றாவது ஒருநாள் சென்றாகத்தான் வேண்டும். அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும் என்றாலும், மனிதன் நினைத்தால், கடுமையாக முயன்றால், அவன் உடலை அதற்குத் தகுதியானதாக்கிக் கொண்டால் அதனை துரிதப்படுத்த இயலும்" என்பது அரவிந்தரின் வாக்கு. அதை அடைவதற்காக அவர் வலியுறுத்திய தியானப் பயிற்சி முறையே பூரணயோகம். தன் பணி ஆன்ம விடுதலையே என்பதை உணர்ந்த அரவிந்தர் அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டார்.

மகாகாவியம் 'சாவித்ரி'
அவரது பூரண யோகத்தின் விளைவால் 'சாவித்ரி' என்ற மகாகாவியம் உருவானது. அதனை அனைவரும் படிக்க வேண்டுமென ஸ்ரீ அன்னை சாதகர்களிடம் வலியுறுத்தினார். "இதில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும், கேள்விகளுக்கும் விளக்கம் உள்ளது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு இங்கே உள்ளது. ஒரு மனிதன் யோக வாழ்வை மேற்கொள்ளத் தேவையான அனைத்தும் இதில் உள்ளது. அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு, அதிமானஸ வாழ்விற்கு நம்மை இட்டுச் செல்லும் வல்லமை மிக்கது 'சாவித்ரி' மட்டுமே!" என்று ஸ்ரீ அன்னை தெரிவித்தார்.

யோகி அரவிந்தர்
Click Here Enlargeஇறைவனின் ஆட்சி புவியில் மலரப் பலவகைகளில் ஸ்ரீ அரவிந்தர் உழைத்தார். ஆனால் அடிக்கடி பகைசக்திகளால் அவரது முயற்சிகளுக்கு தடங்கல்கள் ஏற்பட்டன. இருந்தாலும் தனது யோகசக்தியால் அவற்றைக் கடுமையாக எதிர்த்துப் போராடி, தவ வாழ்வை அரவிந்தர் தொடர்ந்தார். தெய்வீக ஆற்றலுக்கும் அதிமனித உணர்விற்கும் ஓர் ஊடகமாக இருந்து செயலாற்றினார். மனித உணர்வுக்குள் தெய்வீக உணர்வைக் கொண்டுவருவதே அவரது அப்போதைய தலையாய பணியாக இருந்தது. நாளடைவில் தீவிர யோகமுயற்சிக்கென ஸ்ரீ அரவிந்தர், ஆசிரமப் பணிகளில் இருந்தும் மற்ற நிர்வாக விஷயங்களில் இருந்தும் முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார். அதன் காரணமாகவே முன்போல் தரிசனம் கொடுப்பதும் குறைந்து போயிற்று.

தெய்வீக சக்தி புவிக்கு இறங்கி வரவேண்டும் என்று அதி தீவிரமாக உழைத்தார் அரவிந்தர். அவர் 1926ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தனது பிறந்த நாளன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். தன் யோக சாதனையில் கடந்த ஆண்டுவரை இருந்த தடைகள் முற்றிலுமாய் விலகிவிட்டன என்றும், இனி விரைவில் பல மகத்தான செயல்கள், அற்புதங்கள் நடக்கும் என்றும் அறிவித்தார். அதே ஆண்டு நவம்பர் 24 அன்று சாதகர்கள் அனைவரும் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் முன் அமர்ந்து தியானத்தில் மூழ்கினர். சற்று நேரத்தில் ஒரு மிகப்பெரும் பேரொளி மேலிருந்து இறங்கி வருவதை அனைவரும் உணர்ந்தனர். தங்கள் தலைக்குமேலே ஓர் உயர்ந்த தெய்வீக சக்தி வியாபிப்பதை உணர்ந்து பரவசப்பட்டனர். மேலிருந்து இறங்கியது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சக்தி என்றும், மேல்நிலை மனத்திற்கான புதிய திருவுரு மாற்றப்பணி தொடங்கி இருப்பதாகவும் ஸ்ரீ அரவிந்தர் அறிவித்தார். அன்று முதல் அந்தநாள் ஆசிரமத்தில் 'சித்தி நாள்' என்று கொண்டாடப்படலாயிற்று. (அதற்கு முந்தைய நாளான நவம்பர் 23, 1926ல் பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா ஸ்ரீகிருஷ்ண சைதன்ய சக்தியுடன் இவ்வுலகில் அவதரித்த தினமாகும். ஸ்ரீ அரவிந்தரின் அறிவிப்பு, சத்தியசாயி பாபாவின் அவதாரத்தையே குறிக்கிறது என்பது சாயி பக்தர்களின் கருத்து).

யுகபுருஷர்
யோகசக்தியுடன் பல்வேறு சித்தாற்றல்களும் கைவரப் பெற்றிருந்தார் ஸ்ரீ அரவிந்தர், சாதகர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், "உண்மையில் ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்காக நான் மூன்று ஆண்டுகள் பாடுபட்டேன். இது சிலருக்கு நகைப்பிற்குரியதாகவோ, தலைக்கனம் பிடித்தவனின் பேச்சாகவோ தோன்றலாம். ஆனால் வெற்றியடைய நானும் ஒரு காரணம் என்பது என்னவோ உண்மைதான். நிச்சயமாக எனது சக்தி ஆசிரமத்திற்குள்ளும் அதன் எல்லைகளுக்குள்ளும் அடங்கிடவில்லை. இச்சக்தி மனித உலகின் மாறுதல்களுக்கும், போரின் சரியான திருப்பங்களுக்கும் பயன்பட்டு வருகிறதென்பதே உண்மை" என்று தெரிவித்திருந்தார். ஸ்ரீ அன்னையும், சாதகர்களிடம் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது, "பூமியின் வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்து இங்கு நடந்தேறியுள்ள மகத்தான உருமாற்றங்கள் யாவற்றுக்கும் பின்னால் ஸ்ரீ அரவிந்தர் இருந்து வந்துள்ளார். ஒரு ரூபத்தில் இல்லாவிட்டால் இன்னொரு ரூபத்தில், ஒரு பெயரில் இல்லாவிட்டால் மற்றொரு பெயரில்..." என்று குறிப்பிட்டார்.

அரவிந்த யோகம்
ஸ்ரீ அரவிந்தர் பகைச்சக்திகளின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகி வந்தாலும், புவியில் இறையாட்சி மலர்வதற்கு அயராது பாடுபட்டு வந்தார். மகான்கள் அவதரிப்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே. அதுபோலவே ஸ்ரீ அரவிந்தரின் அவதாரமும் நிகழ்ந்தது. முதலில் இந்தியா அன்னியரின் பிடியிலிருந்து விடுதலை பெறவேண்டுமென அவர் விரும்பினார். அதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு அதற்காகவே தொடர்ந்து உழைத்தார். இந்தியா விடுதலை அடையும் என்று அவருக்கு இறைவனால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே யோகசாதனையில் தீவிரமாக இயங்கினார். அதுபோல இந்தியாவின் விடுதலையும் அதிசயமான நிகழ்வாக அவர் பிறந்த ஆகஸ்ட் 15 தேதியிலேயே நிகழ்ந்தது!

பகைச்சக்திகளின் ஆதிக்கத்தால், இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்தது. ஸ்ரீ அரவிந்தர், தமது நுண்ணுடல் பயணத்தின் மூலம், நேசப்படைகளுக்கு ஆதரவாகக் களமிறங்கி, அவற்றை வெற்றிபெறச் செய்தார். அசுரப்பிடியில் சிக்கியிருந்த ஹிட்லரின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமானார். அவரது அவதாரப் பணியில் பகைச்சக்திகளை வென்று, புவியில் அமைதி ஏற்படுத்துவது இரண்டாவது மிக முக்கிய நோக்கமாக அமைந்தது.

'வாழ்வே யோகம்; யோகமே வாழ்வு' என்பதை வலியுறுத்தும் விதமாக பூரணயோகத்தைச் செயல்படுத்தி, புவியில் பூரண அமைதியையும், இறைவனின் ஆட்சியையும் கொண்டுவரப் பாடுபட்டார். மனிதன் 'அதிமனிதன்' என்னும் தேவநிலைக்கு உயர்ந்து, பரிணாமத்தில் பூரணத்துவம் பெறவேண்டும் என்பதற்காக உழைத்தார். அதற்காகப் புவியில் 'மேல்மன உணர்வு' என்னும் சக்தியைக் கொண்டுவந்தார். அவரது அவதாரத்தின் மிக முக்கிய மூன்றாவது நோக்கமாக இதனைக் கூறலாம். இதற்காகவே அவர் பிறந்தார். அந்த நோக்கம் நிறைவேறுவதற்குத் தடங்கலாக இருந்தவற்றையும் போராடி வென்றார்.

உலகில் தெய்வீக வாழ்க்கை அமைந்து, புதிய அதிமன யுகம் உருவாக வேண்டும். அதைத் தான்மட்டும் அடைந்தால் போதாது, தான் அமைத்துத் தந்த யோகமுறைகளைப் பயன்படுத்தி உலகமக்கள் யாவரும் அடைய வேண்டும் என்பதே ஸ்ரீ அரவிந்தரின் அவா. அதற்காகவே பூரணயோகத்தை உருவாக்கி வழிகாட்டினார். இந்த அயராத முயற்சியில் ஸ்ரீ அரவிந்தருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஏற்கெனவே பகைச்சக்திகளின் தாக்கத்தால் ஏற்பட்ட கால் முறிவிலிருந்து குணமானவருக்கு, தற்பொழுது நீர்பிரிவதில் சிரமம் ஏற்பட்டது. உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், அவர் உடல் நலிவடைந்த பொழுதும் அவர் ஆன்மா சூரியனைப்போலப் பிரகாசித்தது. இது அவர் முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. உயர்மனச் சக்தியின் இறக்கத்தால் ஸ்ரீ அரவிந்தரின் உடல் பொன்போலப் பிரகாசித்தது. அவரைக் கண்டவர்கள் வியப்புறும் வண்ணம் அவர் உடலிலிருந்து ஓர் ஒளி சுற்றிலும் பரவியது. ஒரு தேவபுருஷனைப் போன்றும், மிகப்பெரிய யோகியைப் போன்றும் ஸ்ரீ அரவிந்தர் காட்சி தந்தார்.

தன் முயற்சிகளைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் கூறும்பொழுது, "நான் எனக்காக வேண்டி எதையும் செய்யவில்லை. ஏனெனில் என்னைப் பொறுத்தவரையில் கடைத்தேற்றப்பட வேண்டிய அல்லது உயர்நிலை மனமாற்றத்திற்கு உட்பட வேண்டிய தேவை என்று எனக்கு எதுவுமே இல்லை. நான் முயன்று வருவது, புவி முழுவதும் உணர்வு விருத்தி அடைவதற்காக, உயர்நிலை மனமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே! அது பூமியின் நலத்திற்காகவே அன்றி எனக்காக அல்ல" என்று அறிவித்தார்.

மகாசமாதி
நாளாவட்டத்தில் ஸ்ரீ அரவிந்தருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஒருமுறை கீழே விழுந்து கால்முறிவு ஏற்பட்டபோது ஸ்ரீ அன்னை உடனிருந்து கவனித்துக் கொண்டார். ஆனாலும் தொடர்ந்து ஸ்ரீ அரவிந்தருக்கு உடல்நிலையில் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. தனது யோகமுயற்சியைப் பற்றி ஸ்ரீ அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தர், "அதிமன சக்தியை புவிக்குக் கொண்டுவரும் முயற்சியில், தேவையானால், நான் எனது இந்த உடலை விட்டுவிட்டு நுண்ணுடலில் சென்றுகூடப் போராடத் தயாராக இருக்கிறேன்" என்று ஒருமுறை தெரிவித்திருந்தார். நாளடைவில் அது உண்மையானது.

1950ம் வருடம், டிசம்பர் மாதம் 5ம் தேதி. இரவு மணி 1.26. இறையாற்றலைப் புவிமீது இறக்கி அதிமனிதனை உருவாக்க வேண்டும் என்று அயராது பாடுபட்ட மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் மகாசமாதி அடைந்தார். ஸ்ரீ அரவிந்தர் மறைந்தும் அவரது உடல் ஒளிவீசிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் அந்த மகாயோகியின் உடல் வாடவில்லை. முகப்பொலிவு குன்றவில்லை. அவர் மறைந்த 111 மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடல் கருங்காலிமரப் பெட்டியில் வைக்கப்பட்டு, ஆசிரம முற்றத்தில் உள்ள, சர்வீஸ் மரத்தடியில், ஆசிரம சாதகர்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், ஸ்ரீ அன்னை - ஸ்ரீ அரவிந்தர் இருவரது கோட்பாடுகளையும் விளக்கும் ஆன்மீக ஆலயமாகத் திகழ்கிறது. இன்றளவும் தம்மை நாடிவந்து வழிபடுபவர்களுக்கு அருள் ஒளி காட்டி சூட்சும ரீதியில் அவர்களைக் காத்து, நல்வழிப்படுத்தி வருகின்றனர் ஸ்ரீ அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்.

(முற்றும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com