லாஸ் ஏஞ்சலஸ்: அன்னை வேளாங்கண்ணி திருவிழா
அக்டோபர் 28, 2017 அன்று அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா லாஸ் ஏஞ்சலஸ் சர்ச் ஆஃப் ட்ரான்ஸ்ஃபிகரேஷன் ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை 4 மணியளவில், அன்னையின் திருக்கொடி அருள் தந்தை. ஜோசப் குழந்தை மந்திரித்து புனிதப்படுத்தி ஏற்றப்பட்டது. திருச்செபமாலை முழங்க அன்னையின் திருத்தேர் பவனி ஆலய வளாகத்தைச் சுற்றி கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.

மாதாவின் திருச்சொரூபம், ஆலயத்தில் நடுநாயகமாக நிறுவப்பட்டு சுமார் 21 நாடுகளை சார்த்த மக்கள் அன்னைக்கு தங்கள் நாட்டுக் கொடியை அர்ப்பணம் செய்ய, திருப்பலி தொடங்கியது. அருள் தந்தை. பெர்னார்ட் வந்திருந்தபக்தர்களை இந்திய கலாச்சாரப்படி, கும்ப ஆரத்தி எடுத்து வரவேற்றார். அருள் தந்தை. பெர்னார்ட், அருள்தந்தை. ஆல்பர்ட் மற்றும் அருள்தந்தை.ஆல்வின் ஆகியோர், திருப்பலி நிறைவேற்றினர். அருள்தந்தை. ஆல்பர்ட் தனது மறையுரையில் அன்னையின் மகிமையை விவரித்தார். சிறுவர், சிறுமியர் காணிக்கை பவனியில் பங்கேற்று, அருகிலிருக்கும் மாதர் சங்கத்திற்கு தேவையான பொருட்களைக் கொடுத்தனர்.

திருப்பலியின் முடிவில், திவ்யநற்கருணை ஆராதனையும், சுகமளிக்கும் ஆசிர்வாதமும் நடைபெற்றன. அருள்தந்தை.ஆல்வின் திவ்யநற்கருணையை எழுந்தேற்றம் செய்ய, அருள்தந்தை.பெர்னார்ட் சுகமளிக்கும் வழிபாட்டை முன்னின்று நடத்தித்தர, பக்தர்கள் ஆசிரைப் பெற்றனர். ஆலயப் பாடகர் குழுவினர் பாடல்கள் வழங்கினர்.

இறுதியாக அன்னையின் திருவுருவக் கொடி பக்தியுடன் இறக்கப்பட்டு, திருவிழா இரவு 9 மணியளவில் நிறைவுற்றது.

ஜோசப் சௌரிமுத்து,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com