திருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா
உள்ளம் உருக வைக்கும் திருவாசகப் பாடல்களை மெய்யை உருக வைக்கும் சிம்·பொனி இசையாக்கிய இளையராஜாவின் படைப்பை வெளியிடும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் ஜூன் 30 மாலை நடைபெற்றது. அழைப்பிதழ் கொண்டு வருபவருக்கு மட்டும்தான் அனுமதி என்றிருந்தது, நேரம் ஆக ஆக கூட்டம் திரண்டதைக் கண்டு எல்லோரையும் உள்ளே செல்ல விட்டனர் போலும். சீழ்க்கை ஒலியோடு, இளையராஜாவின் பெயரைச் சொல்லும் போதும் மேடையில் தோன்றிய நடிகர்களைக் கண்ட போதும் பெருத்த ஆரவாரம் செய்த கூட்டத்தைக் கண்டு ஏன் வந்தோம் என்று தோன்ற செய்தது.

கூட்டம் அதிகமானதால் ஏற்பட்ட தொடர் அமளி, பலர் அரங்கின் ஓரம் என்றில்லாமல் நடுவிலெல்லாம் நின்று கொண்டே பார்க்கத் தொடங்கியதால் அமர்ந்திருந்த பலருக்கும் எதுவும் தெரியாமல் பெரிய தொல்லையாகத் தோன்றியது. அரைமணி நேரப் பேச்சுக்குப் பிறகு அந்த இசையை ஒலிபரப்பிய போது அப்பேர்ப்பட்ட அமைதி. அப்படியே எல்லோரையும் கட்டி வைத்தது அந்த இசை. கிட்டத்தட்ட முக்கால் இருட்டில் அந்தப் பாடல்கள் அரங்கிலே இசைக்கப்பட்டன. ஆனால் சுண்ணப்பத்திலிருந்து இடம் பெற்ற பாடலுக்கு மட்டும் அழகான நாட்டியமும் இருந்தது.

சிரித்த முகத்துடனும், பெரிய சுமையைத் தலையிலேற்றிக் கொண்ட அடையாளம் எதுவுமின்றிப் பேசி அருள்திரு ஜெகத் காஸ்பர் எல்லோரையும் கவர்ந்தார். சைவ சமய நூலைப் பரப்பும் பணியில் கிறித்தவ மதப் பொறுப்பிலிருபோர் ஈடுபடுவதைப் பற்றி ரோமாபுரிக்கே புகார் சென்றாலும் கவலைப்படாமல் தமிழ் மையக் குழுவினர் செயல்பட்டிருக்கின்றனர்.

இந்து நாளேட்டின் ஆசிரியர் ராம் மேற்கத்திய, இந்திய இசைக்குப் பாலமாக இருக்கும் என்று இதைக் குறிப்பிட்டார். முதல் நாள் சென்னைக்கு எம் எஸ் சுப்புலட்சுமி யின் இசைக் குறுந்தகட்டை வெளியிட்டு இரவு டில்லி சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உடனே மறுநாள் இவ்விழாவிற்காக மீண்டும் சென்னை வந்திருந்தார் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி.

நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவைப் புகழ்ந்து, பிறகு தன்னைப் பார்க்க தன் வீட்டிற்கு வந்த சிறுவன் வந்த கதையைச் சுவாரசியமாகக் கூறிக் கைத்தட்டல் பெற்று, கொஞ்சம் பெருமையடித்துக் கொண்டார். நடிகர் கமலஹாசன், கடவுள் பக்தியில்லாதவர்களையும் இந்த இசை நெகிழச் செய்யு மென்று குறிப்பிட்டார்.

மிகவும் அழகாகவும், கருத்துகளைத் தெளிவாகவும், தான் அரசியல்வாதியென்று காட்டாமல் இவ்விழாவின் நோக்கத்திற் கொட்டிய விஷயங்களை மட்டும் பேசினார் வை. கோபால்சாமி. தமிழிசையைப் பற்றிக்குறிப்பிட்டு, ஏழு ஸ்வரங்களுக்கான தமிழ்ப்பெயர்களாகட்டும், திருவாசகத்திலுள்ள பதிகங்கள் பத்தொன்பதற்கும் தலைப்புகளாகட்டும் எதையும் யோசிக்காமல் குறிப்புகளேதுமின்றிப் பட்டியலிட்டார். இக்குறுந்தகட்டில் இடம் பெற்ற பாடல்களைப் பற்றிய விளக்கங்களைக் கூறிய போதும் மாணிக்கவாசகரின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்ன போதும் பாடல்களின் வரிகளை நினவிலிருந்து அப்படியே சொன்ன போதும் அவரின் ஈடுபாட்டைக் கண்டு கூட்டத்தினர் பெரும் கரவொலி எழுப்பினர். அவருடைய பேச்சு முடிந்து நிறைவாக இளையராஜா ஏற்புரையாற்றும் போது இவ்வளவு அழகாக ஆன்மிகக் கருத்துகளைப் பேசும் நீங்கள் ஏன் இந்த அரசியலில் இருக்கிறீர்களென்று கேட்டார்.

வாஞ்சிநாதன்

© TamilOnline.com