அக்டோபர் 29, 2017 அன்று, அட்லாண்டா கின்னட் நகரில் அமைந்துள்ள இன்ஃபைனைட் எனர்ஜி ஏரினா அரங்கில், பரதகலா மற்றும் தேர்ட் ஐ டான்சர்ஸ் அமைப்புகள் இணைந்து வழங்கும் நான்காவது படைப்பான UnMasked நாட்டிய நாடகம் அரங்கேறியது.
UnMasked ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பெண்கள் அன்றாட வாழ்வில் அணிய வேண்டியிருக்கிற பல முகமூடிகளைப் பற்றிய கதை. அவள் பிறந்தது முதல், ஒரு மகளாக, தோழியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என அவளுக்குத்தான் எத்தனை முகமூடிகள்? எப்போதாவது, இந்த முகமூடிகளைக் கழற்றி எறிந்துவிட்டுத் தன்னைக் காட்டிக்கொள்ளும் தீராத ஆசை எப்போது நிறைவேறும்? அதற்காக அவள் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? இதுவே இந்த நாட்டிய நாடகத்தின் கரு.
அட்லாண்டாவில் பத்தாண்டுகளாக பரதக்கலை பயிற்றுவிக்கும் குரு திருமதி. சுபத்ரா சுதர்ஷன் அவர்களின் தயாரிப்பு இது. இவர் இந்தியாவில் திரு. தனஞ்செயன் - திருமதி.சாந்தா தனஞ்செயன் தம்பதியினரிடம் பரதநாட்டியம் பயின்றவர். 200க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பரதகலா நாட்டியப் பள்ளியை நடத்தி வரும் சுபத்ரா, இதுபோன்ற நிகழ்ச்சிகளின் வருவாயில் இருந்து ஏதாவதொரு சேவை நிறுவனத்திற்கு நன்கொடை கொடுப்பது வழக்கம். சென்ற பத்து வருடங்களில் $200,000 வரை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.
நாடகத்தின் ஆடைகளை வடிவமைத்தது, புது டில்லியைச் சேர்ந்த திருமதி. சந்தியா ராமன். சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் (Children with Special Needs) வரைந்த படங்களை அடிப்படையாகக் கொண்டு ஆடைகளை வடிவமைத்து இருக்கிறார்கள். அதனால், இந்த நாடகத்தில் இருந்து திரட்டிய நிதியும், IMHO என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது.
சுபத்ராவின் எண்ணத்தில் உதித்த கதைக்கருவுக்கு வடிவம் தருவதில், திரு. கோபுகிரண் சதாசிவம் (இவரும் தனஞ்செயன்களின் சிஷ்யர்) உறுதுணையாக இருந்தார். இசையமைப்பில் பெரும்பங்கு வகித்தது செல்வி. ஷ்ரேயா விஷ்வநாதன். இவர் பரதகலாவின் மாணவி.
தமிழில்: சதீஷ் பாலா ஆங்கில வடிவம்: கவிதா ராமச்சந்திரன் |