நவம்பர் 4 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் குழந்தைகள் விழாவை 'சங்கே முழங்கு' என்ற தலைப்பில் ஃபிரேமிங்ஹாமில் உள்ள கீஃப் டெக் ஆடிட்டோரியத்தில் கொண்டாடியது. இந்த மாலை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விழாவை ஒட்டிக் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. விழாநாள் முன்பாகவே கணிதம், அறிவியல் திறன் போட்டிகள் மாசசூசெட்ஸ் மற்றும் ரோட் ஐலண்டு மாநிலங்களில் நடத்தப்பட்டன.
விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது. தொடர்ந்து, சங்கத் தலைவர் மனோகரன் கணபதி வரவேற்புரை நிகழ்த்தினார். 'தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு' முதல் நிகழ்ச்சியாக வந்தது. நிலாவி வெங்கட் பாவேந்தரின் "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்பதைப் பாடி, அதனை விளக்கிச் சிறப்பாக உரையாற்றினார். தொடர்ந்து நடந்த மழலைகளின் மாறுவேட நிகழ்ச்சி, அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்தது.
குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட தனித்திறன் வெளிப்பாடு நிகழ்ச்சியில் புல்லாங்குழல், கரகம், பலவகை ஆடல் பாடல் ஆகியவற்றை வழங்கினர். பாவேந்தரின் "துன்பம் நேர்கையில்" என்கிற பாடலுக்கு வர்ஷினி ஆறுமுகம் பரதநாட்டியம் ஆடினார். அடுத்து நடந்தது இயல்-இசை-நாடகம். இதில் திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் மற்றும் பல கவிஞர்களாகக் குழந்தைகள் வேடமேற்று நிகழ்த்தியது கண்கொள்ளாக் காட்சி. பிரபு ராம் மற்றும் கார்த்தி அருணாச்சலம், திருக்குறள் போட்டி மற்றும் சொல்லுங்கள் வெல்லுங்கள் போன்றவற்றை நடத்தினர். தொடர்ந்து இளம் திறமையாளர்கள் பங்கேற்ற தமிழ்க் கீர்த்தனைகள் கொண்ட பரதநாட்டியப் போட்டி சிறப்பாக இருந்தது.
ஹார்வர்டு தமிழிருக்கையின் பிதாமகர் திரு. சம்பந்தம் போட்டியில் வென்ற குழந்தைகளுக்குப் பரிசளித்தார். சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவான மனோகரன் கணபதி (தலைவர்), சாந்தி சுந்தரமூர்த்தி (செயலாளர்), ராம் சுந்தரம் (பொருளாளர்), சுமதி நாரயணன் (இணைசெயலாளர்), பிரபு ராம், கார்த்தி அருணாசலம், கிருஷ் வேல்முருகன், சரிதா வெங்கட், குரு கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் கிருஷ்ணன், பாலா சங்கர்ராஜ் ஆகியோரைச் சங்க முன்னாள் தலைவர் திருமதி. பமிலா வெங்கட் அறிமுகப்படுத்தினார். திருமதி. சரிதா வெங்கடேஷ் மற்றும் திரு. கார்த்தி அருணாச்சலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். திருமதி. சுமதி நாராயணன் மற்றும் திருமதி. சாந்தி சுந்தரமூர்த்தி குழந்தைகளை ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகளை நடத்தினர். திரு. பிரபு ராம், திரு. பிரசாத் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. ராம் சுந்தரம் உணவு ஏற்பாடுகளைக் கவனித்தனர்.
2018 பிப்ரவரி 3ம் தேதி லிட்டில்டன் உயர்நிலைப் பள்ளியில் நடக்கவிருக்கும் நெட்ஸ் பொங்கல் விழாவிற்கு, நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் அனைவரையும் அழைக்கிறது.
சரிதா வெங்கட், கார்த்திக் அருணாசலம் |