நவம்பர் 4, 2017 அன்று சான் அன்டோனியோவின் இந்தியர்கள் ஒருங்கிணைந்து 9வது ஆண்டாக 'சிட்டி தீபாவளி' கொண்டாடினர். ஒவ்வொரு வருடமும் டெக்சஸின் பல பகுதிகளிலிருந்தும் வந்து பங்கேற்றனர். தீபங்களின் அணிவரிசை சான் அன்டோனியோவின் 'லா விலிட்டா' நதிக்கரையில் மாலை 5 மணியிலிருந்து 11 மணிவரை நடைபெற்றது. அவ்விடம் உணவு ஸ்டால்கள், விதவிதமான நகை, உடை கடைகள் எனக் களைகட்டியது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் அணிவகுத்த 'படகு ஊர்வலம்' தொடங்கியது. படகுகளின் அலங்காரமும், அதன்மேலே ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த ஆண்களும்,பெண்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தினர். அதைப் பார்த்த அமெரிக்கர்களும் ஸ்பானியர்களும் ரசித்துக் குரலெழுப்பி உற்சாகப்படுத்தினர். கர்னாடகா, கேரளா, ஆந்திரப்ரதேசம், மத்தியப்ரதேசம், பெங்காலி, குஜராத்தி எனப் படகுகள் அணிவகுத்தன. ஒரு படகிலிருந்த தாவணி அணிந்த ஒரு பெண் 'தமிழ்நாடு' என அறிவித்தார். நம் தமிழ்ச்சங்க ஆடவரும் மகளிரும் ஆடிப்பாடிக் கொண்டு களிப்புடன் காட்சி தந்தனர்.
படகு ஊர்வலம் முடிந்தபின் அனைத்து மாநிலங்களும் கலைநிகழ்ச்சிகள் வழங்கினர்.
மாரியம்மன் கோவில் திருவிழாவிற்குப் போய் வந்த சந்தோஷ உணர்வில் வீடு திரும்பினோம்.
ஷீலா ரமணன்.டெக்சாஸ். |