SVCC: அதிருத்ர மஹாயக்ஞம்
2017 அக்டோபர் 26 முதல் நவம்பர் 5ம் தேதிவரை ஃப்ரீமான்ட் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் (40155 Blacow Rd, Fremont CA 94538) ஸ்ரீ பிரசன்ன பார்வதி உடனமர்ந்த த்ரயம்பகேஸ்வர பெருமானுக்கு 'அதிருத்ர மஹாயக்ஞ மஹோத்சவம்' வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்த மஹோத்சவம் சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசந்நிதானம், ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம், காஞ்சி காமகோடி ஸ்ரீ மகா பெரியவாள் மற்றும் ஜகத்குருக்களின் அனுக்கிரஹத்துடன் பிரதம ஆசார்யா பிரம்மஸ்ரீ உமாசங்கர் தீக்ஷித் தலைமையில் நடைபெற்றது. இங்கே ஸ்ரீருத்ரம் நாளுக்கு 11 முறை என்ற கணக்கில் 11 நாட்களில் 121 வேதவிற்பன்னர்களால் மொத்தம் 14641 முறை பாராயணம் செய்யப்பட்டது. இதில் தென்னிந்தியா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலிருந்து பல தலைமை வேத விற்பன்னர்களும் அர்ச்சகர்களும் பங்கேற்றனர்.

சிவபெருமானுக்கு தினமும் ருத்ராபிஷேகத்துடன், ருத்ர ஹோமம், வேதபாராயணம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி மஹாசுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், 108 சுவாசினிகளால் லலிதா ஸஹஸ்ரநாம தீபபூஜை மற்றும் சத்தியநாராயண விரத பூஜைகளும் நடைபெற்றன. மஹோத்சவத்தின் கடைசி நாளன்று மஹாபூர்ணாஹுதியும், 11 நாள் ஜபித்த புனிதநீர் கொண்ட 154 கலசங்களால் சிவபெருமானுக்கு அபிஷேகமும் பின்னர் ரதோத்ஸவமும் நடைபெற்றன. ரதோத்ஸவத்தில், செண்டை மேளம் முழங்க 25 அடி உயர ரதத்தில் எம்பெருமான் பார்வதி தேவியுடன் எழுந்தருளினார்.

உலகெங்கிலும் இருந்து 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கும் விழா படங்களைக் காணவும்:
www.svcctemple.org/fremont
முகநூல்: /svcctemple
தொலைபேசி: 510-403-4256

க.ராம்குமார்,
ஃப்ரீமான்ட்

© TamilOnline.com