நவம்பர் 10, 2017 அன்று பாஸ்டன் புகழ்வாய்ந்த ஹார்வர்டு பல்கலையில் ஹார்வர்டு தமிழிருக்கை அமைப்பு, ஹார்வர்டு பல்கலையுடன் இணைந்து முதல் சங்கத்தமிழ் விரிவுரை நிகழ்ச்சியை நடத்தியது. விரிவுரையாளர் 'Tamil–a Biography' என்ற நூலை எழுதியுள்ள இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பிரபல தமிழறிஞர் பேரா. டேவிட் ஷுல்மன்.
காலையில் சிறப்பு வரவேற்பு, மாலையில் விரிவுரை என இரு பகுதிகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஹார்வர்டு பேராசிரியர்கள் பரிமள் படேல், மைக்கேல் விட்சல், சார்ல்ஸ் ஹாலிசி, தமிழிருக்கை அமைப்பாளர்கள் Dr. சுந்தரேசன் சம்பந்தம், Dr. விஜய் ஜானகிராமன், திரு. பால் பாண்டியன் தவிர டெக்சஸ், ஜார்ஜியா, நியூ யார்க், ரோட் ஐலண்டு என்று பல்வேறு மாநிலங்களிருந்து வந்திருந்த தமிழன்பர்கள் கலந்துகொண்டனர். நவம்பர் 10 காலையில் Dr. ஷுல்மனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புரையில் பேரா. பரிமள் படேல் ஹார்வர்டு தமிழிருக்கை நிறுவப்பட்டபின் அதில் அமரப்போகும் பேராசிரியர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார், என்ன பணிகள் செய்வார் என்பதை விளக்கினார். இருக்கையை அமைக்க உலகெங்கிலும் தமிழன்பர்கள் மேற்கொண்டிருக்கும் உற்சாகமான முயற்சியிலுள்ள புதுமையை அவர் பாராட்டினார்.
இருபதுக்குமேல் நூல்கள் எழுதியுள்ள பேரா. டேவிட் ஷுல்மன் தனது சமீபத்திய 'Tamil–a Biography' நூலின் கையெழுத்திட்ட பிரதிகளை வழங்கினார். இதில், தமிழ்மொழியின் கலாசார வரலாற்றை ஆலாபனை, பல்லவி, அனுபல்லவி, சரணம், ராகமாலிகை என்று பிரித்து ஓர் இசைக்கச்சேரி வடிவில் தொகுத்து அளித்திருகிறார். தமிழை ஓர் உயரிய கலாசாரத்தின் அறிவுக் களஞ்சியமாகவும், வாழ்வில் வியாபித்திருக்கும் தெய்வீக நறுமணமாகவும் வர்ணிக்கும் ஷுல்மன், ஜெருசலத்திலுள்ள ஹீப்ரூ பல்கலைப் பேராசிரியர். ஒரு காலத்தில் இந்தியா எங்கு இருக்கிறது என்றுகூடத் தெரியாத தனக்கு தமிழார்வம் ஏற்பட்ட சுவையான கதையைச் சொன்னார்.
இஸ்ரேலில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, அவரது பாரசீக மொழிப் பேராசிரியர், இந்தியாவைப் பற்றி படித்தால் அதே பல்கலையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதென்று கூறினாராம். இவர் ராணுவத்தில் சேர விரும்பினாராம், ஆனால் இவரது வருங்கால மனைவியோ இந்தியா செல்ல விரும்பினாராம். துருக்கியிலுள்ள இஸ்தான்புல் நகரத்திலிருந்து மூன்றுமுறை நடந்தே இந்தியாவிற்குச் சென்ற, பல மொழிகள் அறிந்த இவரது நண்பர் டேனியல் ஸ்பெர்பெர், இவரை இந்தியா செல்ல மிக ஊக்குவித்தாராம். 1968ல் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் பிரபல சைம் ரபின் என்ற இஸ்ரேலிய விஞ்ஞானியைச் சந்தித்தாராம். ரபின் இவரை தமிழைப் படி என்று கட்டளையிட்டாராம். தமிழ்பற்றி ஏதும் அறியாத ஷுல்மன், அங்குள்ள நூலகத்தில் கிடைத்த ஒரே புத்தகமான பேரா. ஏ.கே. ராமனுஜத்தின் சங்கத்தமிழ் காதல் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தவுடன் தமிழார்வம் பொங்கியதாம்.
நவம்பர் 10 மாலை பேரா. ஷுல்மனின் விரிவுரை நடந்தது. ஷுல்மன் "இந்த மரியாதையும் கெளரவமும் எனக்கல்ல, இதெல்லாம் தமிழுக்கு" என்று தமிழில் தொடங்கி, "Outer Beauty and Inner Silence in Kampan's Tamil Ramayanam" என்ற தலைப்பில் தனது விரிவுரையை வழங்கினார். முதலில், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியைப் பற்றிய அழகான சங்கத்தமிழ் காதல் கவிதையை ஆராய்ந்தார். அடுத்து கம்ப ராமாயணத்தில் அயோத்தி காண்டத்தில் சித்திரகூட படலத்தில், ராமன், சீதைக்கு வனவாசத்தை அறிமுகப்படுத்தும் சில கவிதைகளின் அழகையும் சோகத்தையும் ஆழமாக அலசினார். கடைசிப் பகுதியில் இலக்குவன் ராமனுக்கும் சீதைக்கும் கட்டிய பர்ணசாலையை வர்ணிக்கும் கவிதைகளை விளக்கினார்.
தமிழிருக்கைக்கு ஆதரவாக ஹார்வர்டு பல்கலையின் நடந்த இந்த விரிவுரை முகநூல் மூலமாக நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு, அதனை 17,000க்கும் மேற்பட்ட தமிழன்பர்கள் கண்டு களித்தனர். உலகத் தமிழன்பர்களின் பேராதரவுடன் இருக்கை அமைக்க ஆறு மில்லியன் டாலரில், நாலரை மில்லியன் சேர்ந்துள்ளது. மீதமுள்ள ஒன்றரை மில்லியன் டாலரைத் திரட்டும் பணி உற்சாகத்துடன் தொடர்கிறது.
ஒரு நாளுக்கு ஒரு டாலர் என்ற கணக்கில் சேர்த்து, மூன்று மாதத்தில் ஒவ்வொரு தமிழன்பரும் நூறு டாலர் கொடுத்தால், பெருந்தொகை ஆகிவிடுமே! நன்கொடைகளுக்கு அமெரிக்க 501(C)(3) Non-profit வரிவிலக்கு உண்டு.
நன்கொடை அளிக்க மற்றும் இந்த முயற்சியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: harvardtamilchair.org.
மாலை விரிவுரை முகநூல் ஒளிபரப்பை காண
பேரா. ஷுல்மனின் "தமிழ் – ஒரு சரித்திரம் (Tamil–a Biography)" நூல்: amazon
அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்டன், மாசசூஸட்ஸ் |