நவம்பர் 18, 2017 அன்று சான் டியகோ இந்திய நுண்கலை அகடெமி [The Indian Fine Arts Academy of San Diego (IFAASD)] இசை மற்றும் நடனத்துக்கான இளமைத்திருவிழாவைக் கலிஃபோர்னியாவின் ல ஹோயா யூத சமுதாய மையத்தில் கொண்டாடியது. தென் கலிஃபோர்னியாவில் இந்திய செவ்வியல் இசை மற்றும் நடனத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது இந்த அகடெமி.
குரு ரேவதி சுப்ரமணியனின் 30 மாணவர்கள் குழுவாக வழங்கிய பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. விழாவில் 12 முதல் 25 வயதுவரை ஆன இளங்கலைஞர்கள் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானியில் குரலிசை, கருவியிசை வழங்கியதோடு, பரதநாட்டியம், கதக், ஒடிசி நடனங்களும் ஆடினர். பல அமெரிக்க நகரங்கள் தவிர கனடாவின் டொரான்டோவில் இருந்தும் இவர்கள் வந்திருந்தனர். அவர்கள் கலைத்திறனால் தத்தமது பாணியின் முன்னோடிகளுக்கு குருவந்தனை செய்தனர்.
வாய்ப்பாட்டு, கருவியிசை, தாளவாத்தியம், நடனம் ஆகியவற்றில் தேர்ந்த இளங்கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பது இந்த விழாவின் நோக்கமாகும். மனம் மயக்கும் இசையாலும், நளினமான நடனத்தாலும் இக்கலைஞர்கள் வந்திருந்தோரை மகிழ்வித்தனர். இந்தியாவின் புராதன பாரம்பரியம் குறித்த நரம்பியல் விஞ்ஞானி பத்மபூஷண் பேரா. V.S. ராமச்சந்திரன் அவர்களின் உரை செறிவாக இருந்தது. முதன்மை விருந்தினர் ஆசார்யா T.S.R. கிருஷ்ணன், சிறப்பு விருந்தினரும் கதக்களி விற்பன்னருமான பிரஷாந்த் ஷா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். பங்கேற்ற இளங்கலைஞர்களுக்கு, அகடெமி நிறுவனர்களான டாக்டர் வெங்கடாசலம் மற்றும் டாக்டர் சேகர் விஸ்வநாதன் நினைவுப்பரிசுகள் கொடுத்தனர்.
மேலும் அறிய: www.indianfinearts.org
சேகர் விஸ்வநாதன், சான் டியகோ, கலிஃபோர்னியா |