டிசம்பர் 2017: வாசகர் கடிதம்
பொலிந்திடுவாய் நீடூழி!

ஏழுடன் ஓர் பத்து கண்ட எம் அருமைத் தென்றலே!
எத்தகைய பெருமகிழ்ச்சி எண்ணுங்கால் எம் மனதில்!
அன்றுகண்ட மேனியாய் அழகும் வனப்பும் மிக
அமெரிக்கக் கண்டமிதில் அருந்தமிழால் ஆட்சி செய்வாள்

நாட்டு நடப்புடன் தாய்நாட்டின் நிலைமையையும்
நயமிக்க நாகரிகம் நழுவாது விமர்சித்தல்,
நல்லனகள் கண்டவிடம் நாமணக்கப் பாராட்டல்
நற்கலைகள் நிகழ்வுகளை நாடறிய விரித்துரைத்தல்

பெரியோர்கள், பேரறிஞர் பேட்டிகளோ ஏராளம்!
பெருமைமிக வெளிவந்த போட்டிகளோ மிகப்பலவாம்
சிறுகதைகள், தொடர்கதைகள் சிறப்பாக வெளிவருமாம்
சிந்தித்து விடையிருக்க சிறுவர்க்கும் பகுதிகளாம்
ஆன்மிகம் வளர்த்திடவே சமயத்துக்கு மோரிடமாம்
ஆலயங்கள் பலப்பலவும் அறியும்வகை கட்டுரைகள்
நாமணக்கச் சுவைகூட்டும் சமையற் குறிப்புகளாம்
நல்வாழ்வுக் குதவிடவே அறிவுறுத்தும் சிநேகிதியாம்

எத்தனையோ சாதனைகள் ஏழுடன் பத்தாண்டுகளில்
எந்நாளும் எம் மனைகளிலே எழிலுடனே உலவிடுவாய்
சித்தமதை மகிழ்விக்கும் சீர்மிகு எம் தென்றலே! உன்
புத்தழகு மிகவிளங்கப் பொலிந்திடுவாய் நீடூழி!

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

*****


என்னுடைய சிறுகதையைத் தென்றலில் பிரசுரித்ததற்கு நன்றி. நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எனது மூன்று புனைவிலக்கயங்களை அருணோதயம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. எல்லாப் பெருமையும் தென்றலையும், அது கொடுத்த ஊக்கத்தையும் சேரும். நன்றி.

பானுமதி பார்த்தசாரதி,
சென்னை.

*****


சோதனைகளையே சாதனைகளாக்கி, அவற்றையே வெற்றிப் படிகளாக அமைத்து தனக்கெனத் தனியான வழியெடுத்து வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பிப் படிக்கும் குடும்பப் பத்திரிகையாக 'தென்றல்' இதழைப் பலரும் பாராட்டும்படியான நல்ல விஷயங்களுடன் பத்தரைமாற்றுத் தங்கமாகத் தந்துகொண்டு இருக்கிறீர்கள். நன்றி. தென்றலுக்கு 18ம் வருட சிறப்புமிக்க துவக்கத்திற்கான வாழ்த்துக்கள்.

சபரி வெங்கட்டின் அபாரமான அனுபவங்களையும் அற்புதமான திறமைகளையும் சேர்த்து அருமையான நேர்காணலாக வழங்கி உதவிய தென்றலுக்கு நன்றி. உலகியல்பார்வையில் எது சரியோ அது கடவுளின் பார்வையில் மாறுபடலாம். கடவுளின் பார்வை எதுவென்று அறிந்துகொள்ள மகான்கள்தான் சரியான அறிவுரை தருவார்கள் நல்லோரை நாடிப் போக வேண்டுமே அல்லாது தவிர்க்கக் கூடாது என்பதைச் சின்னகதை மூலம் எளிமையாகப் புரியவைத்தது பாபாவின் அருள்மொழி.

சமரச சன்மார்க்க சமுதாயக் கொள்கையைத் தந்து ஜீவ காருண்யத்தை உலகிற்கு பறைசாற்றிய அருட்பெரும் ஜோதி வள்ளலார் பற்றி 'மேலோர் வாழ்வில்' பகுதியில் கொடுத்தமைக்கு நன்றி. சாதனையாளர் சித்தார்த் துப்பில், தான் வரைந்த ஓவியங்களை விற்றுக் கிடைத்த தொகையை 'தூய்மை இந்தியா' திட்டத்திற்கு உதவியிருப்பது இளந் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமைகிறது.

புல்லாங்குழல் சக்கரவர்த்தி சஞ்சீவராவ் அவர்களின் இசை மிகவும் அற்புதம்.. 'கனவு மெய்ப்பட வேண்டும்' - பெற்றவர்களின் கடமையை இத்தனை அழகாக இதுவரை இந்தக் கண்ணோட்டத்தில் யாரும் எழுதவில்லை என்று நினைக்கிறேன். முனைவர் ஜெயந்தி நாகராஜன் அவர்களின் எழுத்துக்கள், அவரைப் பற்றிய விவரங்கள் யாவும் அருமை.

புலம்பெயர்ந்து வாழவந்த இடத்தில் தமிழ்மொழியை இத்தனை அழகாக வளர்த்து அனைவரையும் தென்றல் குடும்பமாக இணைத்துத் தாங்கள் செய்துவரும் சேவை மகத்தானது. பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்க என்று தென்றலை வாழ்த்துகின்றேன்.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com